ஸ்டேட் பாங்க் நேர்முகத் தேர்வுக்குத் தயாராகும் போட்டியாளர்கள்
ஸ்டேட் பாங்க் நேர்முகத் தேர்வுக்குத் தயாராகும் போட்டியாளர்கள்
ஏப் 22, 2010 12:00 AM
ஏப் 22, 2010 12:00 AM
ஸ்டேட் பாங்க் சில மாதங்களுக்கு முன் அறிவித்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கிளரிகல் பணியிடங்களுக்கு நாடெங்கும் லட்சக்கணக்கானவர்கள் விண்ணப் பித்து போட்டித் தேர்வை எழுதினர். இந்தத் தேர்வின் முடிவு கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப் பட்டது. பிளஸ் 2 முதல் பட்ட மேற்படிப்பு வரை படித்திருக்கும் பல போட்டியாளர்களுக்கு நேர்முகத் தேர்வானது இந்த மாத இறுதியிலிருந்து நடத்தப்படவுள்ளது.
தேர்வில் தகுதி பெற்றவர்களில் பிளஸ் 2 முடித்திருப்பவர்கள் உள்ளனர். இன்ஜினியரிங் பட்டதாரிகள் உள்ளனர். எம்.பி.ஏ., எம்.பில்., என பல்வேறு கல்வித் தகுதிகள் பெற்றிருப்பவர்களும் அவர்களுடைய தேர்வு மதிப்பெண்ணின் அடிப்படையில் அழைக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேலான கால அவகாசம் இருப்பதால் அனைவருமே இதற்கு சிறப்பாக தயாராக முடியும். பொதுவாக இது போன்ற நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் போட்டியாளர்களிடம் இருந்து எதை எதிர்பார்க்கின்றன?- குறிப்பிட்ட நபர் இறுக்கமான சூழல்களைக் கூட வங்கியில் சமாளிக்கும் குறைந்த பட்ச திறனைப் பெற்றிருக்கிறாரா?
- பொதுவாக அவரைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அறியும் ஆர்வம் பெற்றிருக்கிறாரா?
- அவர் நுழைய விரும்பும் வங்கித் துறை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் பெற்றிருக்கிறாரா? அவர் அறிந்திருப்பது என்ன?
- அவருடைய தகுதிக்கான பாடத்தை எந்த அளவு மறக்காமல் மனதில் வைத்திருக்கிறார்?
- வங்கிப் பணிக்குத் தேவைப்படும் வேகம், விவேகம், துல்லியமான பணித் திறன் போன்றவற்றைப் பெற்றிருக்கிறாரா?
- வேலை கொடுத்தால், அவர் ஸ்டேட் பாங்கின் பணியிலேயே தொடர்ந்து இருப்பாரா? அல்லது வேலை நல்ல வேலை கிடைத்தால் இதை
விட்டுவிடுவாரா? - பொதுவாக அவரது குணாதிசயமானது பாசிடிவாக இருக்கிறதா? அல்லது எதையும் நெகடிவாகப் பார்ப்பவரா?
இது போன்ற அம்சங்களை உங்களிடம் அறிய நேர்முகத் தேர்வுக் குழு முனையும் போது, அவர்கள் எதிர்பார்க்கும் விதத்தில் நாம் பதிலளித்தால் வெற்றியைக் கைப்பற்றுவது எளிதுதான்.
தினசரி செய்தித் தாள் படிப்பது, நடப்புச்செய்திகளையும் பொது அறிவையும் மேம்படுத்திக் கொள்வது, ஸ்டேட் பாங்க் பற்றிய அடிப்படை செய்திகளை அறிந்து கொள்வது, வங்கித் துறை பற்றி அறிவது, புத்திசாலித்தனமாகவும் சாதுரியமாகவும் பதிலளிப்பது ஆகியவற்றை வரும் நாட்களில் முனைப்புடன் வளர்த்துக் கொண்டால் இதில் நிச்சயம் வெற்றி பெறலாம்.
