ஜூன் 01, 2010 12:00 AM
ஜூன் 01, 2010 12:00 AM
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஏற்கெனவே வெளிவந்துவிட்டன. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியாகியிருக்கின்றன. தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தங்கள் எதிர்காலத் திட்டங்களில் தீவிரமாக இருக்கும் இந்த நேரத்தில் மதிப்பெண் குறைவாகப் பெற்றவர்கள் நிலைமையையும் நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். மிகுந்த மன வருத்தத்திலும், மன அழுத்ததிலும் இருக்கும் இவர்களின் இந்த நிலை முற்றிலும் தேவையற்றது என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள்.
வெறும் மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையாகிவிடாது என்ற அழுத்தமான உண்மையை இவர்களின் பெற்றோரே இவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்கிறார் டில்லியிலுள்ள மேக்ஸ் மருத்துவமனையின் உளவியலாளரான சமீர் பரீக். குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களின் பெற்றோர், தங்கள் பிள்ளைகளிடம் குறைந்த மதிப்பெண் வாழ்க்கையின் இறுதி நிலையல்ல என்ற உண்மையை உணர வைக்க வேண்டும் என்றும், அவர்களை மீண்டும் வாழத் தூண்டும் முக்கியப் பங்கையும் ஆற்ற வேண்டும் என்று இவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் யதார்த்தத்தில் மாணவர்களைவிடப் பெற்றோரே இந்த விஷயத்தில் மிகுந்த கவலையடைவதாகவும் இவர் குறை கூறியுள்ளார்.
வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவரும் தங்கள் கடந்த காலத் தவறுகளிலிருந்தே பாடத்தைக் கற்கிறார்கள் என்றும், நடந்ததை நினைத்து நினைத்து கவலை கொள்வதைவிட எதிர்காலத்திற்குரிய சரியான பாதையைத் தீர்மானிப்பதுமே வெற்றிக்கான வழியாகும் என்றும் இவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
குறைவான மதிப்பெண் பெற்ற ஒவ்வொருவரும் நிதானமாக தங்களின் தோல்விக்கான உண்மையான காரணங்களை விருப்பு வெறுப்பின்றி யோசிக்க வேண்டும் என்றும் இந்தத் தவறுகளிலிருந்து முன்னேற்றம் பெறும் வழிகளையும் ஆராய வேண்டும் என்றும் இவர் மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த கால நினைவுகளில் உழல்வதை விட்டுவிட்டு எதிர்காலம் பற்றிய நேர்மறை அணுகுமுறையே வெற்றிக்கான சரியான பாதையைக் காட்டும் என்று இவர் கூறுகிறார். நாம் பெற்ற மதிப்பெண்களுக்கான மதிப்பைவிட, நமது எதிர்காலத்தைப் பற்றிய நமது கண்ணோட்டத்திற்கு அதிக மதிப்பிருப்பதே உண்மை என்றும் இவர் வலியுறுத்துகிறார்.
