நவ 23, 2010 12:00 AM
நவ 23, 2010 12:00 AM
புதுடில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ரஷ்ய மொழி கல்வி மையம் கடந்த 1965ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. அண்மையில் அந்த மையம் தொடங்கப்பட்ட 45வது ஆண்டு விழா தினம் அங்கு கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் மையத்தின் இயக்குனர் பேராசிரியர் சரண்ஜித் சிங் பேசுகையில், இந்த கல்வி ஆண்டில் 170 மாணவர்கள் அங்கு பயின்று வருவதாக தெரிவித்தார். இது கடந்த ஆண்டுகளை விட அதிக எண்ணிக்கையாக கணக்கிடப்பட்டுள்ளது.
டில்லியை சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்லாது பிற மாநில மாணவர்களும் தற்போது அதிகளவில் சேர்ந்துள்ளதாக பேராசிரியர் சிங் தெரிவித்தார். ரஷ்ய மொழி படிப்புகளை படிப்பதில் இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் இங்கு பயின்ற அனைவரும் நல்ல ஊதியத்துடன் கூடிய வேலையில் இருப்பதாக சிங் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான ரஷ்ய கவுன்சில் தூதரான டெனிஸ் ஆலிபோவ் கலந்து கொண்டார். இந்த மையத்தில் படித்தவர்கள் இந்திய மற்றும் ரஷ்யா இடையேயான நட்புறவை பலப்படுத்துவதில் முக்கிய பங்காற்ற முடியும் என டெனிஸ் ஆலிபோவ் நம்பிக்கை தெரிவித்தார்.
