ஜூன் 17, 2011 12:00 AM
ஜூன் 17, 2011 12:00 AM
அ நிறம் | அளவு
ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரிகளில் காலியாக இருக்கும் இடங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்தாண்டு சுமார் 65 ஆயிரம் இடங்கள் வரை காலியாக இருக்கும் என்று செய்திகள் கூறுகின்றன. 'எங்கும் பொறியியல் கல்லூரி....எதிலும் பொறியியல் கல்லூரி' என்று சொல்லும் அளவு, கணக்கு வழக்கு இல்லாமல், கையில் பணம் இருப்பவர்கள் எல்லாம், கல்விக்கே சம்பந்தம் இல்லாதவர்கள் எல்லாம், ஒரு சிறந்த முதலீடாக கருதி, பொறியியல் கல்லூரிகளை, காடு-மேடு என்று பாராமல், கிடைத்த இடங்களில் எல்லாம் கட்டுகின்றனர்.
அதற்கு
ஏதாவது ஒரு பெயரிட்டு, தங்களால் முடிந்த அளவிற்கு செலவுசெய்து விளம்பரமும் தருகின்றனர். இந்தியாவில் மொத்தமாக இருக்கும் பொறியியல் கல்லூரிகளில், ஏறக்குறைய 15 சதவீதம் தமிழகத்தில் இருக்கின்றன. நாடு முழுவதும் உள்ள சுமார் 3241 பொறியியல் கல்லூரிகளில், தமிழகத்தில் மட்டும் 486 கல்லூரிகள் உள்ளன. தமிழ்நாட்டில் ஏராளமாக பெருகியிருந்த ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் கணிசமானவை, மாணவர் சேர்க்கை இல்லாததால், இந்தாண்டு மூடப்பட்டு விட்டன.அந்த
நிலைமை தற்போது, பல தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல கல்லூரிகளில் முறையான உள்கட்டமைப்பு வசதிகள் கிடையாது, போதுமான மற்றும் தகுதியான ஆசிரியர்கள் போன்ற வசதிகள் இருப்பதில்லை. பல கல்லூரிகள் எப்படியோ, செய்யவேண்டியதை செய்து அங்கீகாரத்தைப் பெற்று விடுகின்றன.எனவே
மாணவர்கள்தான் இத்தகைய நிலைமைகளை தெரிந்துகொண்டு கவனமாக இருக்க வேண்டும். பொறியியல் படிப்பது எந்தளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு எந்த கல்லூரியில் படிக்கிறோம் என்பதும் முக்கியம். நீங்கள் ஓரளவு குறைவான மதிப்பெண்களை பெற்றிருந்தாலும் பரவாயில்லை. அந்த மதிப்பெண்களுக்கு, எந்தளவிற்கு நல்ல கல்லூரியில் இடம்பெற முடியும் என்பதை யோசித்து செயல்படுங்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் - ஏதோவொரு கல்லூரியில் இடம் பிடித்தேன் என்று இருக்க வேண்டாம்.கல்லூரிகளின்
பசப்பு வார்த்தையையோ, இடங்கள் நிரம்பப் போகின்றன, உடனே வந்துசேர்ந்து விடுங்கள், இல்லையென்றால் இடம் கிடைக்காது என்பன போன்ற போலியான கெடுபிடிகளையோ கண்டு ஏமாந்து விடாதீர்கள். ஏராளமான பொறியியல் கல்லூரிகளில், மிக அதிகளவிலான இடங்கள், ஒவ்வொரு ஆண்டும் காலியாகவே இருக்கின்றன என்பதுதான் உண்மை. எனவே, நிதானமாக யோசித்து, அதேசமயம், காலம் கடந்துவிடாமலும் முடிவெடுங்கள். உங்கள் பணம், உங்கள் நேரம், உங்கள் உழைப்பு....இந்த மூன்றும் விரயமாகாமல் பார்த்துக்கொள்வது உங்களின் கைகளில்தான் உள்ளது.பிரபலமான
கல்லூரிகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும். நமக்குப் பிரச்சினையே, பிரபலமற்ற மற்றும் அந்தளவு அறிமுகமற்ற கல்லூரிகளில், சிறந்த கல்லூரி எது என்பதை கண்டுபிடிப்பதுதான். ஒரு நல்ல கல்லூரியை அடையாளம் காணும் நுணுக்கங்கள் பற்றி கல்விமலர் இணையதளத்தில், "கவுன்சிலிங் சிறப்புப் பக்கம்" என்ற பகுதியில், பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கான ஆலோசனை பகுதிகள் மற்றும் கேள்வி-பதில் பகுதிகள் போன்ற பிரிவுகளில், விரிவாக ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, அவற்றை கவனமாக படித்து பயன்பெறவும்.
