நவ 18, 2024 12:00 AM
நவ 18, 2024 12:00 AM

மனித வரலாறு, கடந்த கால சமூகங்கள், கலாச்சாரங்கள் மற்றும் நாகரிகங்களின் வாழ்க்கையை கண்டறிய பயன்படும் அறிவியல் ஆய்வு முறையை உள்ளடக்கிய ஓர் துறை, 'தொல்லியல்'.
சவாலானதாக இருந்தாலும் மர்மங்களை வெளிக்கொணர்வதிலும், மனித பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும் தனித்துவமான வாய்ப்பை இத்துறை வழங்குகிறது. வரலாற்றில் அதீத ஆர்வம் உள்ளவர்களுக்கும், கடந்த கால ரகசியங்களை வெளிக்கொணரும் எண்ணத்தை அனுபவித்து மகிழ்பவர்களுக்கும் தொல்லியல் சரியான தேர்வாக அமையும்.
தொல்பொருள் ஆய்வாளரின் பணிகள்
பழங்கால சமூகங்களின் வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள் மற்றும் சமூகக் கட்டமைப்புகளைப் பற்றி அறிய கண்டுபிடிப்புகளை ஆய்வு செய்தல் மற்றும் விளக்குதல். புலக் குறிப்புகள், புகைப்படம் எடுத்தல் மற்றும் வரைபடங்கள் வாயிலாக கண்டுபிடிப்புகளை ஆவணப்படுத்துதல். வரலாற்று தளங்களை ஆய்வு செய்தல், தொல்பொருட்களை பாதுகாத்தல் மற்றும் வரலாற்று தளங்களை மீட்டமைத்து பொதுமக்களுக்கு கல்வி கற்பித்தல் ஆகியவை தொல்பொருள் ஆய்வாளரின் பிரதான பணிகள்,
தேவையான திறன்கள்
பகுப்பாய்வுத் திறன்கள், ஆராய்ச்சி மற்றும் எழுதும் திறன், உடல் உறுதி, சகிப்புத்தன்மை, பொறுமை மற்றும் விடாமுயற்சி
கல்வித் தகுதி
தொல்லியல் துறையில் பொதுவாக முறையான கல்வி மற்றும் பயிற்சி அவசியமாகிறது. தொல்லியல், மானுடவியல், வரலாறு அல்லது தொடர்புடைய துறையில் இளநிலை பட்டம் பெறுதல் அவசியம். முன்னணி அகழ்வாராய்ச்சிகள் அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிபுணத்துவம் பெற முதுநிலை பட்டம் பெறுவதும் பெரும்பாலும் அவசியமாகிறது. கல்வித்துறையில் பணிபுரிய, ஆராய்ச்சி நடத்த அல்லது முக்கிய தொல்பொருள் திட்டங்களை வழிநடத்தும் நோக்கத்தில் இருப்பவர்களுக்கு முனைவர் பட்டம் தேவைப்படுகிறது.
பள்ளியில் இருந்தே வரலாறு, மானுடவியல், புவியியல் மற்றும் பண்டைய ஆய்வுகள் பற்றிய படிப்புகளைத் தேர்ந்தெடுத்து படித்தல், அருங்காட்சியகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் வழங்கும் தன்னார்வத் திட்டங்களில் இணைதல், அமெரிக்காவின் தொல்பொருள் நிறுவனம் போன்றவற்றின் வாயிலாக களப்பணி மற்றும் நெட்வொர்க்கிங் வாய்ப்புகளை பயன்படுத்துதல் ஆகியவை வாய்ப்புகளை விரிவடையச் செய்கின்றன.
வாய்ப்புகள்
ஏ.எஸ்.ஐ., எனும் இந்திய தொல்பொருள் ஆய்வு, தேசிய பூங்கா சேவை போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றலாம். அருங்காட்சியகங்களை நிர்வகித்தல், கண்காட்சிகளை நிர்வகித்தல் மற்றும் வரலாற்று கலைப்பொருட்கள் பற்றி பொதுமக்களுக்கு கல்வி கற்பித்தல் போன்ற வாய்ப்புகளும் உள்ளன. உலகளவில் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்க யுனெஸ்கோ போன்ற சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றலாம். பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள் உள்ளன. பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் கலாச்சார பாரம்பரிய தளங்களைப் பாதுகாக்கும் பணி வாய்ப்புகளும் உண்டு.