/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
ஆழ்ந்து கற்போம் பல்திறன் வளர்ப்போம்!
/
ஆழ்ந்து கற்போம் பல்திறன் வளர்ப்போம்!
ஜூன் 18, 2025 12:00 AM
ஜூன் 18, 2025 12:00 AM

ஆர்ட்டிபிசியல் இண்டெலிஜென்ஸ், டேட்டா சயின்ஸ், மிஷின் லேர்னிங் போன்ற தொழில்நுட்பங்களின் வருகைக்கு ஏற்ப, கல்வியிலும் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. வரும் காலங்களில் இத்தகைய நவீன தொழில்நுட்பங்கள் அனைத்து துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமையை பெறும்.
இத்தகைய தொழில்நுட்பங்கள் சார்ந்த படிப்புகளை இன்று புரிந்தோ, புரியாமலோ பெரும்பாலான மாணவர்கள் தேர்வு செய்கின்றனர். அத்தகைய படிப்புகளுடன் பல்வேறு துறை சார்ந்த திறன்களை வளர்த்துக்கொண்டால் மட்டுமே அவர்களின் எதிர்காலம் பாதுகாப்பானதாக அமையும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு வந்த காலத்தில், 'பல்வேறு துறையினரின் வேலையை அது பறித்துவிடும்.. வேலை வாய்ப்பை குறைத்து விடும்' என்றெல்லாம் அச்சம் உருவானது. ஆனால், உண்மையில் பெரும்பாலான வேலைகள் கம்ப்யூட்டர் வாயிலாக மேற்கொள்ளப்படும் வேலைகளாக மாற்றம் கண்டன. கம்ப்யூட்டர் பயன்படுத்த அனைவரும் கற்றுக்கொண்டோம்; வேலை வாய்ப்பு விரிவடைந்தது. அதேபோல், ஏ.ஐ., போன்ற தொழில்நுட்பங்களை அனைத்து துறையினரும் கற்றுக்கொண்டால், வேலை இழப்பு குறித்த அச்ச உணர்வு அகலும்.
அனைத்து தகவல்களும் ஏ.ஐ.,யிலும் கூகுளிலும் கொட்டிக்கிடக்கும் நிலையில், அவற்றில் தேவையானவற்றை தேர்ந்தெடுத்து பயன்படுத்தும் அறிவு இன்றைய மாணவர்களுக்கு அவசியமாகிறது. மெக்கானிக்கல் துறையில் உள்ள தேவையை 3டி பிரிண்டிங் வாயிலாக பூர்த்தி செய்துகொள்ள முடியும்; ஏ.ஐ., வாயிலாக கோடிங் எழுதுவது சாத்தியமாகி உள்ளது. இவ்வாறு ஒவ்வொரு துறையும் மாற்றம் காணும் சூழலில், சவால்களுக்கு சரியான தீர்வு காணும் வகையில் பல்வேறு துறைகளில் அறிவை வளர்த்துக்கொள்வதோடு, தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள வேண்டியதும் அவசியம். 
எத்தகைய கல்வி மற்றும் திறன்களை பெற்றால், வாழ்க்கை முழுவதற்கும் ஒரு மாணவரால் திறம்பட செயல்பட முடியுமோ, அவற்றை வழங்க கல்வி நிறுவனங்களும் தயங்கக் கூடாது. காலாவதி ஆகதவர்களாக, தொழில்துறையில் எப்போதும் புகழ்பெற்று திகழும் வகையில் மாணவர்களை தயார்படுத்துவதும் கல்வி நிறுவனங்களின் கடமை.
மனிதர்களைப் போல் இயந்திரங்களே இன்று கற்றுக்கொள்ளும் சூழலில், இன்னும் ஆழமான அறிவு, ஆழமாக சிந்திக்கும் திறன், ஆழமான செயல்திறன் ஆகியவை மாணவர்களுக்கு தேவைப்படுகிறது. இந்நிலையில், ஒரு ஆசிரியரின் பங்கும் மிகவும் கடினமானதாக மாறி வருகிறது. மாணவர்களுக்கு உற்சாகம் அளித்து, சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் அவர்களை தயார்ப்படுத்தி, உரிய வழிகாட்டியாக ஆசிரியர்கள் செயல்பட வேண்டி உள்ளது. 
ஒரு பணியை எளிமையாக செய்யவும், குறைந்த நேரத்தில் அதிக உற்பத்தியை அளிக்கவும் தொழில்நுட்பங்கள் பயன்படுமே தவிர, மனிதர்களுக்கு முழுமையான மாற்றாக என்றுமே தொழில்நுட்பங்களால் செயல்பட முடியாது. வரும் காலங்களில், 'ஹயர் ஆர்டர் திங்கிங்' மிக அவசியமானதாக மாறும். அதை வளர்த்துக்கொண்டவர்களுக்கு அதிக ஊதியம் கிடைக்கும்.
- டாக்டர் மதன் ஏ செந்தில், தலைவர், ரத்தினம் கல்வி குழுமம், கோவை.
 

