அக் 19, 2024 12:00 AM
அக் 19, 2024 12:00 AM

சிறந்த பொறியியல் கல்வி உலகளவில் மிகப்பெரிய மாற்றத்தை
உருவாக்கும். நம் நாட்டின் வளர்ச்சியில் இன்ஜினியர்கள் முக்கிய பங்கு
வகிக்கின்றனர். அவர்கள் தான் நாட்டின் எதிர்காலம்!
ஆனால், காலம்
காலமாக பெரும்பாலான மாணவர்களின் குறிக்கோள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற
வேண்டும் என்பதாக மட்டுமே இருக்கிறது. ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர்
திறமையானவரா அல்லது திறமையற்றவரா என்பது தேர்வில் அவர் பெறும் மதிப்பெண்களை
வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. அதிக மதிப்பெண் பெறுபவர் திறமையான
மாணவராகவும், குறைவான மதிப்பெண் பெறுபவர் திறமையற்ற மாணவராகவும்
கருதப்படுகிறார்.
பொதுவாக, தேர்வு காலங்களில் அவசர அவசரமாக
பாடங்களை படித்து, தேர்வு எழுதும் மாணவர்களே இன்று அதிகளவில் உள்ள
நிலையில், மதிப்பெண் மட்டுமே ஒருவரது திறமையை சரியாக நிர்ணயம் செய்யுமா?
தேர்வை சரியாக எழுத தெரிந்த மாணவரே மதிப்பெண் அதிகம் பெறும் நிலையில்,
தேர்வை எழுத கற்றுக்கொண்டவர் திறமையானவராகவும், மற்றவர் திறமை
குறைந்தவராகவும் எடுத்துக்கொள்ள முடியுமா... அவ்வாறாயின், அவரது திறமை
தேர்வை எழுதுவதே தவிர, 'இன்ஜினியரிங்' அல்ல.
இன்றைய இன்ஜினியரிங்
மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் பல்வேறு 'ஹேக்கத்தான்' போட்டிகளில்
பங்கேற்பதோடு தங்களது திறமையை குறைத்துக்கொள்ளக் கூடாது. அமெரிக்காவின்
ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் எம்.ஐ.டி., போன்ற கல்வி நிறுவன
மாணவர்களோடு தான் போட்டியிட வேண்டும். மேலும் அவர்களது போட்டி உலகின்
தலைசிறந்த நிறுவனங்களுடனும், அவர்களது முன்னணி தயாரிப்புகளுடனும் தான்
இருக்க வேண்டும்.
ஆப்பிள் நிறுவனத்தை போன்று ஒரு சிறந்த புராடெக்ட்
தயாரிக்க முடியுமா, ஐபோனை போன்ற சிறந்த கேமரா அல்லது சிப் உருவாக்க
முடியுமா, சாட் ஜி.பி.டி.,யை விட ஒரு சிறந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க
முடியுமா, செயற்கைக்கோள்களை தயாரிக்க முடியுமா, மைக்ரோசாப்ட் நிறுவனத்தை
விட ஒரு சிறந்த ஆப்ரேட்டிங் சிஸ்டம் உருவாக்க முடியுமா, டெஸ்லா நிறுவனத்தை
விட ஒரு சிறந்த எலக்ட்ரிக் கார் தயாரிக்க முடியுமா, வாட்ஸ்ஆப் விட ஒரு
சிறந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க முடியுமா, கூகுளை விட ஒரு சிறந்த
சாப்ட்வேரை உருவாக்க முடியுமா என்றுதான் நமது மாணவர்கள் சிந்திக்க
வேண்டும். அவைதான் உண்மையான மற்றும் அர்த்தமுள்ள போட்டி. வாழ்க்கையில்
அத்தகைய போட்டிக்கு தான் மாணவர்கள் தயாராக வேண்டும். ஆனால், தற்போது
கல்வியே போட்டியாகி உள்ளது. கல்விக்கு பிறகுதான் உண்மையான போட்டியே
உருவாகிறது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
உலகின் வளர்ந்த
நாடுகளை விட, பொருளாதாரத்தில் இந்தியா வளர்ச்சி பெற, அனைத்து மேம்பட்ட
இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட
வேண்டும். தற்போது, அடிப்படையான இயந்திரங்கள் மட்டுமே இந்தியாவில்
தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலான மேம்பட்ட இயந்திரங்கள் வெளிநாடுகளில்
இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
மாணவர்கள்
படித்துமுடித்த உடன் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை எதிர்நோக்காமல், நம்
நாட்டிலேயே புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முயல வேண்டும். அமெரிக்கா,
சீனா, ஜப்பான், தைவான் என அனைத்து நாடுகளில் பிறக்கும் குழந்தைகளை
எண்ணிக்கையை விட நம் நாட்டில் அதிக குழந்தைகள் பிறக்கும்நிலையில், அத்தகைய
நாடுகள் நிகழ்த்தும் கண்டுபிடிப்புகளைவிட நாம் அதிக கண்டுபிடிப்புகளை
நிகழ்த்த வேண்டும். அதற்கு சுய ஆர்வமும், தன்னம்பிக்கையும் அவசியம்.
-ஸ்ரீதர் வேம்பு, நிறுவனர் மற்றும் சி.இ.ஓ., ஜோஹோ கார்ப்பரேஷன்.