ஜூலை 20, 2026 10:39 AM
ஜூலை 20, 2026 10:39 AM

மெக்கட்ரானிக்ஸ் என்பது மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் கண்ட்ரோல் இன்ஜினியரிங் ஆகியவற்றின் ஒருங்கிணைந்தக் களமாகும். இது இயந்திரங்கள் மற்றும் அமைப்புகளை சுய இயக்கத்தில் செயல்பட வைக்கும் தொழில்நுட்பங்களை கற்றுத் தருகிறது. ரோபோடிக்ஸ், ஆட்டோமேஷன், ஸ்மார்ட் உற்பத்தி தொழில்நுட்பங்கள் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும்.
இளநிலை படிப்பு
மெக்கட்ரானிக்ஸ் இளநிலை படிப்பில் இயற்பியல், கணிதம் மற்றும் பொது பொறியியல் அடிப்படைகள் முதல் தொடக்கமாக கற்றுத்தரப்படும். அதன் பிறகு மெக்கானிக்கல் டிசைன், எலக்ட்ரானிக்ஸ் சர்க்யூட்டுகள், மைக்ரோகண்ட்ரோலர்கள், சென்சார்கள், கம்ப்யூட்டர் புரோகிராமிங், ரோபோடிக்ஸ், எலெக்ட்ரிக்கல் டிரைவ்ஸ் மற்றும் கண்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை அடங்கியவையாக இருக்கின்றன.
மெக்கட்ரானிக்ஸ் பொறியியல் இளநிலை படிப்பில் சேருவதற்கு, மாணவர்கள் பிளஸ் 2 அல்லது அதற்கு சமமான தேர்வை தேர்ச்சி செய்திருக்க வேண்டும். அதில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் அல்லது கணினி அறிவியல் ஆகியவை முக்கியப் பாடங்களாக இருந்திருக்க வேண்டும்.
இந்திய அளவில் ஜே.இ.இ., போன்ற தேர்வுகள் முக்கியமானவை. தமிழகத்தில், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல தனியார் கல்லூரிகளில் டி.என்.இ.ஏ., கலந்தாய்வு வாயிலாக சேரலாம்.
முதுநிலை படிப்பு
முதுநிலை மெக்கட்ரானிக்ஸ் படிப்பில், ரோபோடிக்ஸ், அட்டோமேஷன் சிஸ்டம்கள், எலெக்ட்ரோ-மெக்கானிக்கல் டிசைன், இண்டலிஜன்ட் கண்ட்ரோல், செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் கற்பிக்கப்படுகின்றன. முதுநிலை படிப்பில் சேர, மாணவர்கள் இளநிலை பொறியியல் பட்டம் (பி.இ.,/பி.டெக்.,) பெற்றிருக்க வேண்டும். அதில் மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், மெக்காட்ரானிக்ஸ் அல்லது தொடர்புடைய துறைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
இந்திய அளவில் 'கேட்' தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் அரசு மற்றும் சில தனியார் கல்லூரிகளில் சேர முடியும். சில தனியார் கல்வி நிறுவனங்கள் பிரத்யேக நுழைவுத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக மாணவர்களை தேர்வு செய்கின்றன.
வேலை வாய்ப்பு
ஆட்டோமேஷன், ரோபோடிக்ஸ், உற்பத்தி தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறைகள், ஏரோஸ்பேஸ், டிபென்ஸ், மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் அடிப்படையிலான கட்டுப்பாட்டு அமைப்புகள் போன்ற பல துறைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன. தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் மெக்காட்ரானிக்ஸ் இன்ஜினியராக, ரோபோடிக்ஸ் டெவலப்பராக, சிஸ்டம் இன்டக்ரேட்டராக மற்றும் ஆராய்ச்சி விஞ்ஞானியாக பணியாற்ற முடியும்.
எதிர்கால வளர்ச்சி
மெக்காட்ரானிக்ஸ் என்பது தொழில்நுட்ப உலகின் வேகமான வளர்ச்சியுடன் நேரடி தொடர்புடைய துறை. உலகளவில் தொழில்கள் அதிகமாக இயந்திரங்களால் செயல்படத் தொடங்கியதால், மெக்காட்ரானிக்ஸ் பொறியாளர்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் ஸ்மார்ட் தொழில்நுட்பங்களில் மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் எதிர்காலத்தில் கிடைக்கும்.
