/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
வெளிநாட்டில் மருத்துவக் கல்வி!
/
வெளிநாட்டில் மருத்துவக் கல்வி!
செப் 21, 2024 12:00 AM
செப் 21, 2024 12:00 AM

பள்ளி மேல்நிலைக்கல்விக்கு பிறகு பெரும்பாலான மாணவர்களின் முதல் விருப்ப தேர்வாக இருப்பது மருத்துவப் படிப்பு. மாணவர்களின் மதிப்பெண், பொருளாதாரம், மருத்துவக்கல்லூரி இடங்கள் என பல்வேறு காரணிகளால் உள்நாட்டில் மருத்துவப்படிப்பு படிப்பது என்பது கடினமாகவே உள்ளது. அவ்வாறான மாணவர்களுக்கு வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி என்பது ஒரு சிறந்த மாற்றாக பெற்றோரால் கருதப்படுகிறது.
வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி பயில விரும்பும் மாணவர்கள், என்.எம்.சி., எனும் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றுவது மிக அவசியம். 2021ம் ஆண்டிலிருந்து வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க 'நீட்' தேர்வில் தேர்ச்சிப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது உட்பட பல்வேறு விதிமுறைகளை அறிந்துகொள்ள வேண்டும்.
என்.எம்.சி., அறிமுகம்
மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சிக்கான உயர்மட்ட அமைப்பான என்.எம்.சி., கடந்த 2020ம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணையச் சட்டம், 2019 வாயிலாக, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு - எம்.சி.ஐ., மாற்றாக நிறுவப்பட்டது. என்.எம்.சி., இளநிலை மருத்துவக் கல்வி வாரியம், முதுநிலை மருத்துவக் கல்வி வாரியம், மருத்துவ மதிப்பீட்டு வாரியம், நெறிமுறைகள் மற்றும் மருத்துவப் பதிவு வாரியம் என நான்கு தன்னாட்சி வாரியங்களைக் கொண்டுள்ளது.
மருத்துவக் கல்வி மற்றும் நடைமுறை தொடர்பான விஷயங்களில் என்.எம்.சி.,யின் மருத்துவ ஆலோசனைக் குழு கமிஷனுக்கு ஆலோசனை வழங்கும். இது நீட்-யுஜி, நீட்-பிஜி மற்றும் எம்.எம்.ஜி.இ., போன்ற முக்கிய தேர்வுகளை நடத்துகிறது.
மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சியின் தரநிலைகள் மற்றும் தரம், மருத்துவப் பயிற்சியாளர்களின் பதிவு மற்றும் நெறிமுறைகள், மருத்துவ நிறுவனங்களின் மதிப்பீடு ஆகியவற்றை இந்த ஆணையம் ஒழுங்குபடுத்துகிறது. மேலும் என்.எம்.சி., வழங்கும் மருத்துவப் பட்டங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்படுகின்றன.
என்.எம்.சி.,யின் விதிமுறைகள்
*வெளிநாட்டில் இந்திய மாணவர்கள் பயிலும் மருத்துவக் கல்வியானது, குறைந்தது 54 மாதங்கள் அதாவது இந்திய மருத்துவக் கல்வியைப் போன்றே, நான்கரை ஆண்டு மருத்துவக் கல்வியாக இருக்க வேண்டும்.
*மருத்துவக் கல்வி பயிலும் அதே கல்லூரியில் குறைந்தது 12 மாதங்கள் இண்டர்ன்ஷிப் மேற்கொள்ள வேண்டும்.
*மருத்துவக் கல்வியானது ஆங்கில வழி கல்வியாக இருக்க வேண்டும்.
*தேசிய மருத்துவ ஆணையத்தின் அட்டவணை I-ல் குறிப்பிடப்பட்டுள்ள கட்டாயப் பாடங்கள் (சமூக மருத்துவம், பொது மருத்துவம், மனநலம், குழந்தை மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மயக்க மருந்து, மகப்பேறு மற்றும் மகப்பேறு மருத்துவம், எலும்பியல், ஓட்டோரி நோலரிஞ்ஜாலஜி, கண் மருத்துவம், தோல் மருத்துவம், அவசரநிலை அல்லது விபத்து சேவைகள், ஆய்வகச் சேவைகள் மற்றும் அவற்றின் துணைப் பிரிவுகள்) அனைத்தும் பயிற்றுவிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
*தேசிய மருத்துவ ஆணையத்தில் விண்ணப்பித்து இந்தியாவில் குறைந்தது 12 மாதங்கள் இன்டர்ன்ஷிப் மேற்கொள்ள வேண்டும்.
*தேசிய மருத்துவ ஆணையத்தில் நடத்தப்படும் ஸ்கீரினிங் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
விபரங்களுக்கு:
https://www.nmc.org.in/information-desk/for-students-to-study-in-abroad/