தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/சட்டக் கல்வியில் தேவைப்படும் தரமும், மேம்பாடும்

சட்டக் கல்வியில் தேவைப்படும் தரமும், மேம்பாடும்

சட்டக் கல்வியில் தேவைப்படும் தரமும், மேம்பாடும்


ஆக 13, 2013 12:00 AM

ஆக 13, 2013 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஆக 13, 2013 12:00 AM ஆக 13, 2013 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சட்டக் கல்வி, கடந்த 20 ஆண்டுகளில், பாடத்திட்டம் மற்றும் கற்பிக்கும் முறைகள் ஆகிய விஷயங்களில் பெரும் மாறுதல்களை சந்தித்துள்ளது.

மாற்றம்

கடந்த 1987ம் ஆண்டு, பெங்களூரில், இந்தியப் பல்கலையின் தேசிய சட்டப் பள்ளி நிறுவப்பட்ட பிறகு, சட்டக் கல்வியில் பல விஷயங்கள் மாறத் தொடங்கின. இக்கல்வி நிறுவனம் தொடங்கப்படுவதற்கு முன்னதாக, சட்டக் கல்வி என்பது, பல்கலைகளின் சட்டத் துறைகள் மற்றும் இணைப்பு பெற்ற சட்டக் கல்லூரிகளில் மட்டுமே கற்பிக்கப்பட்டு வந்தது. ஆனால், பெங்களூரின் தேசிய சட்டப் பள்ளி, பலவிதங்களில் வித்தியாசமானது.

இந்த புதிய முயற்சியின் வெற்றியால், இதுபோன்ற சட்டக் கல்வி நிறுவனம், நாட்டின் பல மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டன. தற்போது, அதுபோல மொத்தம் 15 கல்வி நிறுவனங்கள் உள்ளன மற்றும் அவைகளில் ஆண்டிற்கு 2000 மாணவர்கள் சேர்க்கை பெறுகிறார்கள். தேசிய சட்டப் பள்ளிகளைப் பின்பற்றி, பல தனியார் பல்கலைகள், 5 வருட எல்.எல்.பி., படிப்பை துவங்கியுள்ளன.

சட்டப் படிப்பில் ஏற்பட்ட இந்த மாற்றம், இந்திய பொருளாதாரத்தில், உலகமயமாக்கல் என்ற பெயரில் ஏற்பட்ட மாற்றத்தோடு ஒன்றாக நிகழ்ந்தது. தாராளமயம் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் தனியார் தொழில் துறைகளின் வளர்ச்சி ஆகியவை, நீதிமன்ற அறைக்கு வெளியேயும் சட்ட வல்லுநர்கள் தேவை என்ற நிலையை உருவாக்கின.

நல்ல கல்வித்தரம், பாடத்திட்டத்தின் படியான சரியான பயிற்சி ஆகியவற்றால், மாறிவரும் பொருளாதார உலகிற்கு பொருந்தக்கூடிய சட்ட வல்லுநர்களாக தேசிய சட்டப் பள்ளிகளின் பட்டதாரிகள் திகழ்கிறார்கள். உலக சந்தையின் தேவைகளுக்கேற்ப, திறன்வாய்ந்த மற்றும் போட்டிகளை சமாளிக்கக்கூடிய பட்டதாரிகளை உருவாக்கி அளிப்பதில், தேசிய சட்டப் பள்ளிகள் வெற்றிகரமாக திகழ்கின்றன. அதேசமயம், இதுபோன்ற காரணங்களால் அந்த சட்டப் பள்ளிகளில் சேர்வதும் போட்டி நிறைந்த ஒன்றாக உள்ளது.

தரமே பிரதானம்

இன்றைய இந்தியாவில், தேசிய சட்டப் பள்ளிகள் மற்றும் சில தனியார் பல்கலைகளால் வழங்கப்படும் சட்டப் படிப்பு பட்டங்கள், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் பெறப்படும் பொறியியல், மருத்துவம் மற்றும் மேலாண்மை படிப்பு பட்டங்களுக்கு சமமாக மதிக்கப்படுகின்றன. இதுபோன்ற புகழ்பெற்ற சட்டக் கல்வி நிறுவனங்கள், பல சட்ட மையங்கள் தம்பால் ஈர்க்கின்றன. இதனால், கேம்பஸ் வேலை வாய்ப்புகள் பெருகியுள்ளன.

அதேசமயம், இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். நாட்டில் 700க்கும் அதிகமாக உள்ள பல்கலைகளின் சட்டத் துறைகள் மற்றும் இணைப்புப் பெற்ற சட்டக் கல்லூரிகள் போன்றவை, அதிகளவிலான மாணவர்களுக்கு, தொடர்ச்சியாக சட்டப் படிப்பை வழங்கி வருகின்றன. ஆனால், அந்த மாணவர்கள், பொதுவாக நீதிமன்றங்களில் பணியாற்றுபவர்கள்.

தேசிய சட்டப் பள்ளிகள், சட்டக் கல்வி வழங்கப்படும் முறைகளையே மாற்றியுள்ளன. பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள தர உயர்வால், இத்தகைய தேசிய சட்டப் பள்ளிகள், சூழலுக்கு தக்கவாறான தகுதியுள்ள சட்டப் பட்டதாரிகளை உருவாக்குகின்றன.

செலவு எவ்வளவு?

தேசிய சட்டப் பள்ளிகளில் படிப்பதற்கு ஆகும் செலவு, மத்தியதர மற்றும் உயர் மத்தியதர வகுப்பினர் சமாளிக்கும் வகையில் உள்ளது. பொதுவாக, இங்கே சேரும் மாணவர்கள், பல்கலைகளின் சட்டத்துறைகள் மற்றும் இணைப்பு சட்டக் கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் பெற்ற பள்ளிக் கல்வியை விட, சற்று தரமான முறையிலான பள்ளிக் கல்வியைப் பெற்றிருப்பார்கள்.

கடந்த 20 ஆண்டுகளாக, சில முக்கிய அம்சங்கள், சட்டக் கல்வியை சீர்திருத்தம் செய்யும் செயல்பாட்டிலிருந்து ஒதுக்கியே வைக்கப்பட்டுள்ளன. மிகவும் முக்கியமாக, இத்தகைய சீர்திருத்தங்கள், இந்திய சட்டக் கல்வியின் பிரதானப் பிரிவோடு சம்பந்தப்படவில்லை. ஏனெனில், அவை, தேசிய சட்டப் பள்ளிகளோடு தொடர்புடையவைகளாய் இருந்தவை.

மேலும், அவை, மற்றவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட போதும், அந்த செயல்பாடு, உள்ளடக்கத்தை(content) விட, முறையமைப்பை(form) மேம்படுத்துவதாகத்தான் இருந்தது. இதன் விளைவாக, பெருமளவிலான மாணவர்கள், பாரம்பரிய பல்கலைகளின் சட்டத் துறைகளையும், இணைப்பு பெற்ற சட்டக் கல்லூரிகளையுமே தங்களின் சட்டப் படிப்புகளுக்காக நாடுகிறார்கள். ஏனெனில், அவைதான், அணுகுவதற்கு எளிதாகவும், கல்வி கட்டணத்தை குறைவாக வசூலிப்பவையாகவும் உள்ளன.

நீதி வழங்குவதின் மீதான விளைவுகள்

நவீன மற்றும் காலத்திற்கு ஏற்ற சட்டக் கல்வித் திட்டத்தை வழங்கும் தேசிய சட்டப் பள்ளிகள் மற்றும் பல தனியார் சட்ட பல்கலை துறைகளில் பயின்று வெளிவரும் பட்டதாரிகள், தனியார் துறைகளுக்கு சென்று விடுகிறார்கள். ஆனால், பின்தங்கிய கல்வி முறையைக் கொண்ட பாரம்பரிய பல்கலைகளின் சட்டத் துறைகள் மற்றும் இணைப்பு பெற்ற சட்டக் கல்லூரிகள் ஆகிவற்றில் படித்து வெளிவரும் மாணவர்களே, இந்திய மக்கள் அதிகம் நாடும் நீதிமன்ற பணிகளுக்கு செல்கிறார்கள். இதனால், நீதித் துறை நடவடிக்கைகளில் தரமான நடைமுறைகள் ஏற்படுவதில் சிக்கல் ஏற்படுகின்றன என்பது சிலரின் கருத்தாக உள்ளது. தரமான கல்வியைப் பெற்ற சட்ட வல்லுநர்களின் மூலம் மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்ற கனவு, இந்த பிரச்சினைகளின் மூலம் இன்னும் நிறைவேறாமலேயே உள்ளது.

மேலும், முதுநிலை அளவிலான சட்டப் படிப்பு மற்றும் ஆராய்ச்சிகள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளன. தேசிய சட்டப் பள்ளிகளில், இளநிலை அளவிலான விஷயங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

சட்டப் படிப்பில் தரத்தையும், மேம்பாட்டையும் கொண்டுவரும் அதேநேரத்தில், அது, சமூகத்தில் அனைத்துப் பிரிவினராலும் எளிதாக அடையப்படும்படி இருத்தல் முக்கியம். தரம் மற்றும் தகுதி என்ற கோஷங்களின் அடிப்படையில், செல்வாக்கும், வசதியும் உள்ளவர்களால் மட்டுமே அனுபவிக்கப்படும்படி இருத்தல் கூடாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us