sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

சிங்கப்பூர் தேசிய பல்கலையில் சேர்க்கை பெறுவது எப்படி?

/

சிங்கப்பூர் தேசிய பல்கலையில் சேர்க்கை பெறுவது எப்படி?

சிங்கப்பூர் தேசிய பல்கலையில் சேர்க்கை பெறுவது எப்படி?

சிங்கப்பூர் தேசிய பல்கலையில் சேர்க்கை பெறுவது எப்படி?


நவ 12, 2013 12:00 AM

நவ 12, 2013 12:00 AM

Google News

நவ 12, 2013 12:00 AM நவ 12, 2013 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சிங்கப்பூரிலுள்ள என்.யு.எஸ்., பல்கலையில் சேர்வது குறித்து மாணவர் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சி அடையாரிலுள்ள பாலபவன் வித்யா மந்திர் பள்ளியில், நவம்பர் 9ம் தேதி நடைபெற்றது.

என்.யு.எஸ்., சார்பாக, திரு.ராஜாராம் (இயக்குநர், மாணவர் சேர்க்கை அலுவலகம்) மற்றும் திரு.பரமசிவம் (ஓய்வுபெற்ற பேராசிரியர், சிவில் இன்ஜினியரிங் துறை) ஆகியோர் கலந்து கொண்டனர். பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு தனித்தனியாக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாணவர்களுடன், பெற்றோர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் திரு.ராஜாராம் பேசியதாவது:

சிங்கப்பூர் தேசிய பல்கலையில் சேர்வதென்பது, போட்டி நிறைந்த ஒன்று என்றாலும், மேற்கத்திய பல்கலைகளில் சேர்வதைப் போன்று சிக்கலான ஒன்றாக இருப்பதில்லை. மாணவர் சேர்க்கையைப் பொறுத்தவரை, மதிப்பெண்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடீஸ் நடவடிக்கைகளுக்கு, சேர்க்கை விஷயத்தில் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. உதவித்தொகை உள்ளிட்ட அம்சங்கள் கோரப்படும்போதுதான் அதுவும் பார்க்கப்படுகிறது.

உலகளவிலான இடம்

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், க்யூ.எஸ்., உலக கல்வி நிறுவன தரவரிசை ரேங்கிங்கின் படி, உலகளவில் 24வது இடத்தையும், ஆசியாவில் முதலிடத்தையும் பெறுகிறது. எனவே, இதில் இடம்பெறுவது அவ்வளவு எளிதல்ல. 6,000 இடங்களுக்கு, 35,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வருகின்றன என்பது நினைவில் கொள்ள வேண்டியதாகும்.

அதேசமயம், மேலைநாட்டு புகழ்பெற்ற பல்கலைகளைப் போல், மாணவர் சேர்க்கை நடைமுறை சிக்கல் வாய்ந்ததாகவும், நீண்ட செயல்முறை கொண்டதாகவும் இருப்பதில்லை. நேரடியான, எளிமையான முறையில் இப்பல்கலையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பல்கலைக்கழகம், தன்னில் சேரும் மாணவர்களுக்கு, பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு என்ற பெயரில் ஒரு நுழைவுத்தேர்வை நடத்துகிறது.

மாணவர் பரிமாற்ற திட்டம்

எங்கள் பல்கலையில், இளநிலைப் பட்டப் படிப்பை மேற்கொள்ளும் 50%க்கும் மேற்பட்ட மாணவர்கள், மாணவர் பரிமாற்ற செயல்பாட்டில் பங்கேற்கிறார்கள். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, சீனா, ஜப்பான், ஸ்பெய்ன், தென் ஆப்ரிக்கா, சுவிட்சர்லாந்து, சுவீடன் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட 40 நாடுகளில் அமைந்த 300க்கும் மேற்பட்ட பல்கலைகளுடன், மாணவர் பரிமாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

விண்ணப்ப செயல்பாடு

ஆன்லைன் விண்ணப்ப செயல்பாடுகள், அக்டோபர் மாத மத்தியில் துவங்குகின்றன. அதேசமயம், முடிவடையும் தேதிகள், படிப்புக்கு படிப்பு மாறுபடும். அட்மிஷன் இணையதளத்தில், ஆன்லைன் விண்ணப்பம் செய்து, ஆன்லைன் விண்ணப்பக்க கட்டணத்தை செலுத்த வேண்டும்.

அதேசமயம், உங்களுக்கு நிதி தொடர்பான உதவிகள் தேவையெனில், அதற்கான தனி ஆன்லைன் விண்ணப்ப செயல்பாட்டை ஏப்ரல் 1ம் தேதி மேற்கொள்ள வேண்டும்.

பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு, விண்ணப்பித்த மாணவர்களில், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இறுதி விபரங்கள், மே முதல் ஜுலை மாதம் வரையான காலகட்டத்தில் வெளியிடப்படும்.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். மேலும், அப்போதே, நிதியுதவி கோரப்பட்டிருந்தால், அதற்கான பதிலும் தெரிவிக்கப்படும்.

வித்தியாசமான அனுபவம்

சிங்கப்பூர் தேசிய பல்கலையைப் பொறுத்தவரை, மாணவர்கள் பெறும் அனுபவம் வித்தியாசமானதாக இருக்கும். இந்தியாவில் உள்ள பல்கலைகளில் அவர்கள் பெறும் அனுபவத்தைப் போல் அல்லாமல், அங்கே அவர்களின் அனுபவம் முற்றிலும் வித்தியாசமானதாய் இருக்கும்.

உதவித்தொகை

உதவித்தொகை திட்டங்களைப் பொறுத்தவரை, ஏசியான் அன்டர்கிராஜுவேட் ஸ்காலர்ஷிப், சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி அன்டர்கிராஜுவேட் ஸ்காலர்ஷிப் மற்றும் ஜி.கே.எஸ்., ஸ்காலர்ஷிப் உள்ளிட்ட பல உதவித்தொகை திட்டங்கள் இருக்கின்றன. இவை, அந்தந்த மாணவரின் தகுதிக்கேற்ப வழங்கப்படும்.

ஆண்டுதோறும், எங்கள் பல்கலைக்கு, இந்தியாவிலிருந்து குறைந்தபட்சம் 50 முதல் 100 மாணவர்கள் வரை சேர்க்கை பெறுகிறார்கள். அவர்களில் பெரும்பான்மையோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யுனிவர்சிட்டி டவுன்

எங்கள் பல்கலையைப் பொறுத்தவரை, புதிதாக குறிப்பிட வேண்டிய முக்கிய அம்சம் என்னவெனில், யுனிவர்சிட்டி டவுன் என்றொரு அமைப்பு. இது ரெசிடென்ஷியல் காலேஜ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வகையில், இது சிங்கப்பூர் மற்றும் தெற்காசியாவிற்கு புதிய அம்சமாகும்.

இங்கே, மாணவர்கள், ஒரு வேறுபட்ட வகுப்பறை சூழலைப் பெறுகிறார்கள். பேராசிரியர்களின் உதவி தேவையான அளவிற்கு கிடைக்கிறது. மாணவர்கள், தங்களுக்கு தேவையான வெளிஉலக அனுபவ அறிவையும், திறன்களையும் இங்கே பெறுகிறார்கள். மேலும், இங்கே, விளையாட்டு மற்றும் கலாச்சார நடவடிக்கைகளும் இடம் பெறுகின்றன.

இந்த யுனிவர்சிட்டி டவுன் என்ற அம்சம், சிங்கப்பூர் பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற ரெசிடென்ஷியல் காலேஜ் அம்சங்கள், மேலைநாட்டு பல்கலைகளில் வழக்கமான ஒரு அம்சமாக  விளங்கி வருகிறது. யுனிவர்சிட்டி டவுன் என்பதும் அதை தழுவிய ஒரு அம்சம்தான் என்றாலும், பல முக்கிய அம்சங்களில் வேறுபாடுகள் இருக்கின்றன.

மாணவர் யூனியன்

என்.யு.எஸ்., மாணவர் யூனியன், 14 சட்டப்பூர்வ கிளப்புகள் மற்றும் 11 கமிட்டிகளைக் கொண்டுள்ளது. மேலும், இப்பல்கலையின் கலை மையம், 23 வேறுபட்ட கலைக் குழுக்களை கொண்டுள்ளது.

இதுதவிர, மாணவர்களால் நடத்தப்படும் 69 ஈடுபாட்டுக் குழுக்கள் உள்ளன. இங்கிருக்கும் 70 வகையான விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களில், ஒரு மாணவர் தான் விரும்புவதை தெரிவு செய்து கொள்ளலாம்.

இளநிலைப் படிப்புகள்

பொறியியல் அடிப்படையிலான இளநிலைப் படிப்புகள், பொறியியல் அடிப்படை சாராத இளநிலைப் படிப்புகள் என்ற வகைகளின் கீழ், பல படிப்புகள் வழங்கப்படுகின்றன.

கட்டடக்கலை, மருத்துவம், சட்டம், கலை மற்றும் சமூக அறிவியல், பிசினஸ் அனலிடிக்ஸ், சுற்றுச்சூழல் படிப்புகள், மேலாண்மை படிப்புகள் மற்றும் பலவிதமான பொறியியல் படிப்புகள் உள்ளிட்டவை, இவற்றுள் குறிப்பிடத்தக்கவை.

மொழியறிவு

இப்பல்கலையில், பாடங்கள் அனைத்தும் ஆங்கில வழியிலேயே நடத்தப்படுவதால், இங்கு சேரும் சர்வதேச மாணவர்களுக்கு ஆங்கில அறிவு இருப்பது கட்டாயம். எனவே, சாட், டோபல் மற்றும் ஐ.இ.எல்.டி.எஸ்., உள்ளிட்ட தேர்வுகளின் மதிப்பெண்கள் கோரப்படுகின்றன.

தேர்வுகளும், ஏற்றுக்கொள்ளப்படும் மதிப்பெண் விபரங்களும்...

* ஐ.இ.எல்.டி.எஸ் - 6.5 மதிப்பெண்
* எம்.யு.இ.டி - 200 மதிப்பெண்
* கேம்ப்ரிட்ஜ் "ஓ" நிலை ஆங்கிலம் - சி6
* டோபல் - தாள் அடிப்படையிலான தேர்வுக்கு 580 மதிப்பெண்ணும், கணினி அடிப்படையிலான தேர்வுக்கு 237 மதிப்பெண்ணும், இணையதள அடிப்படையிலான தேர்வுக்கு 92 முதல் 93 வரையான மதிப்பெண்ணும் ஏற்கப்படும்.

அதேசமயம், இந்தியாவிலிருந்து சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட வாரியங்களில் படித்துவரும் மாணவர்களுக்கு, மேற்கூறிய தேர்வுகளின் மதிப்பெண்கள் கோரப்படுவதில்லை.

மருத்துவப் படிப்பு

மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஒரு ஆலோசனையைக் கூற விரும்புகிறேன். அப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஏப்ரல் மாதத்திலேயே, எங்கள் பல்கலையில் சந்திப்பு நடைபெறும். மதிப்பெண் அடிப்படையிலேயே இது அமையும்.

ஆனால், இங்கே, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே மாதம்தான் வெளியிடப்படும் என்பதால், மருத்துவப் படிப்பில் சேர விரும்புவோருக்கு அது உடனடி சாத்தியமில்லை. இதனால், ஒரு வருடத்தை இழக்க வேண்டியிருக்கும்.

கல்விக் கட்டண சலுகை

இங்கு கல்விக் கட்டணத்திற்கென்று கிராண்ட் வழங்கப்படுகிறது. இந்த கிராண்டை பெறுவதின் மூலமாக, ஒரு மாணவர், தான் செலுத்தும் கல்விக் கட்டணத்தில் குறிப்பிடத்தகுந்த சலுகைகளைப் பெற முடியும்.

வேறு சில குறிப்பிடத்தக்க அம்சங்கள்

* சிங்கப்பூரில் வாழும் செலவு என்ற வகையில், சராசரியாக ஒரு மாதத்திற்கு 700 சிங்கப்பூர் டாலர்கள் செலவாகும்.

* முதுநிலைப் படிப்புகள் மாலை வேலைகளில்தான் தொடங்கும் என்பதால், அதை மேற்கொள்வோர், படிக்கும்போதே பணிபுரிவது எளிதான காரியமாக அமைகிறது.

* இப்பல்கலையில் தங்களின் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர்களுக்கு பெரிய தொல்லைகள் எதுவும் கிடையாது. அவர்களுக்கான சிறப்பு நேர்முகத் தேர்வுகள் எதுவும் நடத்தப்படுவதில்லை. எனவே, அவர்கள் பெரியளவில் மெனக்கெட வேண்டிய தேவையிருக்காது.

* ஒருவர், தான் படித்துக் கொண்டிருக்கும்போதே, ஒரு பாடப்பிரிவிலிருந்து இன்னொரு பாடப் பிரிவுக்கு மாறும் வாய்ப்பு இங்கும் உண்டு. ஆனால், ஒரு மாணவரின் கல்வி நிலைய செயல்பாடுகள் மற்றும் இதர முக்கிய அம்சங்களை கணக்கில் வைத்தே அதற்கு அனுமதி வழங்கப்படும். எனவே, அனைவருமே அந்த சலுகையை பெறுவது கடினம்.

* மருத்துவம் மற்றும் சட்டம் உள்ளிட்ட படிப்புகளை மேற்கொள்ள விரும்புவோர், அதுதொடர்பான தங்கள் நாட்டு நெறிமுறை அமைப்புகளின் (எம்.சி.ஐ., மற்றும் பி.சி.ஐ., போன்றவை) விதிமுறைகள் குறித்து நன்கு தெரிந்து கொண்டு, அதற்கேற்ப முடிவெடுப்பது சிறந்தது.

* மாணவர்கள், தங்களுக்கு தேவையான அனைத்து விபரங்களையும், பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று பெற்றுக்கொள்ளலாம். குழப்பம் வேண்டியதில்லை.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், உங்களை அன்புடன் அழைக்கிறது!

இப்பல்கலைப் பற்றிய விரிவான விபரங்களுக்கு www.nus.edu.sg/

நிகழ்ச்சியின் இதர அம்சங்கள்

பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள், தங்களின் பல்வேறான சந்தேகங்களைக் கேட்க, அதற்கு திரு.ராஜாராம் மற்றும் திரு.பரமசிவம் ஆகியோர் பதிலளித்தனர்.

மேலும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது திருப்தியாக இருந்ததா? என்று பெற்றோர்களிடமும், மாணவர்களிடமும், கல்விமலர் இணையதளம் சார்பில் கேட்கப்பட்டபோது, "என்.யு.எஸ்., பற்றி அறிந்துகொள்ள இதுவொரு நல்ல சந்தர்ப்பம். இதை நாங்கள் ஒரு நல்வாய்ப்பாக கருதுகிறோம். உலகளவில், ஒரு சிறந்தப் பல்கலைக்கழகம் இது என்பதால், இந்நிகழ்ச்சி ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால் நாங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளோம்" என்று அவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us