ஜூன் 14, 2024 12:00 AM
ஜூன் 14, 2024 12:00 AM

உலகில் எந்த ஒரு திறமையும் இல்லாமல் யாரும் பிறக்கவில்லை... அனைவருக்குள்ளும் இயற்கையாகவே திறமைகள் புதைந்து கிடக்கின்றன. நம்முள் புதைந்து கிடக்கும் திறமைகளை அடையாளம் கண்டு அதை வெளிக்கொண்டு வரும்போது, உலகம் நம்மை அடையாளம் கண்டு அங்கீகரிக்கிறது!
இன்றைய காலகட்டத்தில் உயர்கல்வி என்பது வேலைக்கு செல்வது, அதிக சம்பளம் பெறுவது என்ற கண்ணோட்டத்தில் தான் அனைவராலும் பார்க்கப்படுகிறது. எந்த துறை சார்ந்த படிப்பை படித்தவர்கள் அதிக சம்பளம் பெறுகிறார்களோ, அந்த படிப்பில் சேர போட்டி போட்டுக் கொண்டு தங்கள் பிள்ளைகளை பெற்றோரும் சேர்க்கின்றனர்.
அறிவு சார்ந்த சமூகம்
கல்வி என்பது வேலைவாய்ப்பு மட்டுமே உருவாக்குவது அல்ல என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதைத்தான், 'கல்வி என்பது அறிவு சார்ந்த சமூகத்தை உருவாக்க வேண்டும். அது மூன்று அம்சங்களை கொண்டிருக்க வேண்டும். நடைமுறை வாழ்க்கையில் நல்லது எது? கெட்டது எது? என்பதை புரிந்து கொள்ள உதவ வேண்டும். ஜாதி மதங்களில் மெய் ஆன்மீகம் நிறைந்ததாக மாற்றும் திறன் வேண்டும், கல்வி மூலமாக நாடு பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெற வேண்டும்' என்று நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சொல்கிறார்.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கு பட்டதாரிகளுக்குத்தான் உள்ளது. மாணவர்கள் தங்கள் கல்வியில் பெற்ற அறிவையும், திறன்களையும் கொண்டு சுயமாக சமூகத்திற்குப் பயன்படும் விதத்தில் கண்டுபிடிப்புகளை உருவாக்கினால் இன்று நமக்கு எத்தனையோ கண்டுபிடிப்புகள் கிடைத்திருக்கும். மதிப்பெண்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை திறன்களுக்கு கொடுக்காததால் தான் இளைஞர்களின் அறிவும், திறமையும் பயன்படாமல் போய்க்கொண்டிருக்கின்றன.
திறன் திண்டாட்டம்
வேகமாக வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, நிறுவனங்களும் தங்கள் வளர்ச்சியை கருத்தில் கொண்டு திறன் உடைய பட்டதாரிகளுக்கு மட்டுமே பணி வழங்குகின்றன. வேலைக்கான பயிற்சி என்ற பெயரில் அதற்கான நேரத்தையும், செலவினத்தையும் இழக்க நிறுவனங்கள் விரும்பவில்லை. அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடந்தாலும், அதற்கான திறன்களை மாணவர்கள் பெறவில்லை என்பதால் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்ற ஒரு தவறான கருத்து நிலவுகிறது.
தொழில் நிறுவனங்களும் அறிவையும், திறன்களையும் அடிப்படைக் கொண்டுதான் செயல்படுகின்றன. இன்றைய சூழலில் வேலை இல்லா திண்டாட்டம் என்பது தவறான கருத்து. திறன்கள் இல்லாதவர்களின் திண்டாட்டமாகத்தான் மாறி வருகிறது.
திறன்கள் பல்வேறாக இருந்தாலும், மாணவர்கள் அதை மேம்படுத்தி வெளிக்கொண்டு வருவதில் தான் அவர்களின் வெற்றியும், தோல்வியும் நிர்ணயிக்கப்படுகின்றன. படிக்கும்போதே திறன்களை அடையாளம் கண்டு, அதற்கு தக்க பயிற்சிகளை எடுத்துக்கொண்டு திறன்களை மேம்படுத்துபவரே உயர்கல்வியில் வெற்றியின் உச்சத்துக்கு செல்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.
-முகமது அப்துல் காதர், கல்வியாளர்