/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
எந்த மாதிரி வணிகப் பள்ளியை தேர்வு செய்யலாம்?
/
எந்த மாதிரி வணிகப் பள்ளியை தேர்வு செய்யலாம்?
நவ 06, 2013 12:00 AM
நவ 06, 2013 12:00 AM
வணிகமய உலகில், ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும், எம்.பி.ஏ., படிப்பை வழங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றன. ஆனால், மாணவர்களின் பாடுதான் திண்டாட்டமாக உள்ளது. எந்த வணிகப் பள்ளியைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது மற்றும் எதில் படித்தால் சிறப்பான கல்வியும், பணி வாய்ப்பும் கிடைக்கும் என்ற குழப்பத்திற்கு அவர்கள் உள்ளாகிறார்கள். எனவே, சிறந்த வணிகப் பள்ளியை தேர்வு செய்வதற்கான சில ஆலோசனைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.
அங்கீகாரம்
நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள கல்வி நிறுவனம் வழங்கும் MBA படிப்பிற்கு AICTE அங்கீகாரம் உள்ளதா? என்பதைப் பார்க்க வேண்டும். அதேசமயம், IIM, IIT, IIFT, ISB உள்ளிட்ட சுயாட்சி கல்வி நிறுவனங்களாக இருந்தால், அவை வழங்கும் MBA படிப்புக்கு AICTE அங்கீகாரம் தேவையில்லை. அதேசமயம், தனியார் வணிகப் பள்ளிகளில் சேரும்போது, மேற்கூறிய அங்கீகாரம் இருக்கிறதா என்பதைப் பார்ப்பது கட்டாயம். அதேசமயம், ஒரு வணிகப் பள்ளி, ஒரு பல்கலையின் கீழே செயல்பட்டு வந்தால், UGC அல்லது AIU அங்கீகாரம் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.
ரேங்கிங் நிலைமை
பல பிரபல புத்தகங்களில் வெளியிடப்படும் வணிகப் பள்ளிகளைப் பற்றிய ரேங்கிங் விபரங்கள், நல்ல வணிகப் பள்ளிகளைப் பற்றி அறிந்துகொள்வதற்கு உங்களுக்கு துணைபுரியும். இந்த ரேங்கிங் செயல்பாடு, பல பரவலான அம்சங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தின் உள்கட்டமைப்பு, அதன் புகழ், அங்கு ஆளெடுக்க வரும் நிறுவனங்களின் தன்மை, ஆசிரியர்களின் தகுதி மற்றும் அனுபவம், முன்னாள் மாணவர்களின் தற்போதைய அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கணக்கில் கொள்ளப்படுகின்றன.
பலன் கிட்டுமா?
சில புகழ்பெற்ற வணிகப் பள்ளிகளில் படிக்க, அதிகளவிலான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இரண்டாண்டு MBA படிப்பை முடிக்க, ஒரு மாணவர் பல லட்சம் செலவழிக்கும் நிலையும் உள்ளது. ஆனால், படிப்பை முடித்து அதிக சம்பளத்திற்கு வேலை தேடும்போது, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பலருக்கு எதிர்பார்த்தபடி வேலை கிடைப்பதில்லை.
எனவே, அதிக கல்வி கட்டணத்தில், ஒரு புகழ்பெற்ற வணிகப் பள்ளியில் படிக்க சேரும் முன்னதாக, எதிர்கால பணி வாய்ப்புகள் நீங்கள் நினைப்பதுபோல் உடனே அமையுமா? இல்லையெனில், உடனடி ஏமாற்றத்தை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியுமா? என்பதையெல்லாம் யோசித்து முடிவெடுக்க வேண்டும்.
கட்-ஆப் மதிப்பெண்கள்
MBA படிப்பிற்கான நுழைவுத்தேர்வு எழுதும்போது, எதுபோன்ற வணிகப் பள்ளிகளில், எந்தளவு கட்-ஆப் மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறது என்பதைப் பற்றிய அறிவு மிகவும் முக்கியம். CAT, XAT, MAT, CMAT போன்ற நுழைவுத்தேர்வுகள் MBA படிப்பில் சேர்வதற்கு நடத்தப்படுகின்றன.
IIM போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர வேண்டுமெனில், 90% முதல் 99% வரையான கட்-ஆப் மதிப்பெண்கள் எதிர்பார்க்கப்படும் மற்றும் நடுத்தர பிரபலமுடைய வணிகப் பள்ளிகளில் கட்-ஆப் மதிப்பெண்கள் 75% என்ற அளவில் உள்ளன.
உள்கட்டமைப்பு
உள்கட்டமைப்பு என்பது வணிகப் பள்ளிக்கு மட்டுமல்ல, எத்தகைய கல்வி நிறுவனத்திற்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். எனவே, நீங்கள் சேரக்கூடிய கல்வி நிறுவனத்தில், கல்வி மேம்பாட்டிற்கு தேவையான அனைத்துவித உள்கட்டமைப்பு வசதிகளும் இருக்கிறதா என்பதை நன்கு சரிபார்த்துக்கொள்ளவும்.
நூலக வசதி, வகுப்பறை வசதி, விடுதி வசதி, தண்ணீர் வசதி, ஆய்வக வசதி உள்ளிட்டவை, சிறப்பான வகையில் இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்வது முக்கியம்.

