ஆக 27, 2013 12:00 AM
ஆக 27, 2013 12:00 AM
ஒரு வழக்கறிஞராக, நீங்கள் நீதிமன்றத்தில், நீதிபதியின் முன்பாக, வழக்காடிக் கொண்டிருப்பீர்கள் அல்லது ஒரு நீதிபதியாக அமர்ந்து எந்த வழக்கறிஞர் சிறப்பாக வழக்காடுகிறார் என்பதை கவனித்துக் கொண்டிருப்பீர்கள்.
ஆனால் பல திறமைவாய்ந்த வழக்கறிஞர்கள், கார்பரேட் நிறுவனங்களில் சொகுசு சூழல்களில் பணியாற்றி, பெட்டி நிறைய சம்பாதிப்பதையே விரும்புகிறார்கள். இத்தகைய சட்ட நிபுணர்கள், ஆராய்ச்சி, பகுப்பாய்வு மற்றும் எழுதுதல் போன்ற பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
சட்டப் படிப்பு என்பது, ஒரு குறிப்பிட்ட துறைகளுக்கு மட்டுமே சென்று பணிபுரிந்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்க வேண்டிய விஷயமல்ல. மாறாக, அப்படிப்பு தன்னுள் பலவிதமான பணி வாய்ப்புகளைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது. சட்டப் படிப்பின் மூலமாக, வாழ்க்கையின் உயரங்களை ஒருவர் அடைய வேண்டுமென விரும்பினால், அவர் தனது மனநிலை மற்றும் அறிவுநிலை போன்றவற்றை சிறப்பான முறையில் தகவமைத்துக் கொள்ள வேண்டும் மற்றும் மிக உயரேப் பறந்து, அனைத்தையும் ஆராயும் ஒரு கழுகுப் போல் இருக்க வேண்டும்.
படிக்கும் பழக்கம்
ஒரு சட்ட மாணவராக இருந்தாலும் சரி, அல்லது பணி வாய்ப்பைப் பெற்ற வழக்கறிஞராக இருந்தாலும் சரி, அவ்வப்போது வெளிவரும் முக்கியமான மற்றும் கவனிக்கத்த நீதிமன்ற தீர்ப்புகளை, அது எத்தனைப் பக்கமாக இருந்தாலும் சரி, அதை முழுவதும் கவனமாகப் படிப்பதை தினசரி வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
மேலும், சட்ட ஜர்னல்கள் மற்றும் சட்டத் தொகுப்புகள் ஆகியவற்றிலுள்ள கடினமாக ஆராய்ச்சி கட்டுரைகளையும் நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டும். மேலும், சட்டத்துறையில் இருக்கும் ஒருவருக்கு, எதையும் வேகமாகப் படித்து புரிந்துகொள்ளும் திறன் இருப்பது அவசியம். ஏனெனில், ஒரு வழக்கு சம்பந்தமாக, பல நூறு பக்கங்கள் கொண்ட தொகுப்பை படிக்க வேண்டியிருக்கலாம் அல்லது வேறு பல சட்டம் தொடர்பான விஷயங்களை அவசர தேவைக்காக அலச வேண்டியிருக்கலாம். அதுபோன்ற நேரங்களில், விரைவாக படித்து புரிந்துகொள்ளும் திறன் இருந்தால்தான் காரியத்தில் வெற்றிபெற முடியும்.
சட்டத் தொகுப்புகள் மற்றும் ஜர்னல் கட்டுரைகளைப் படிக்கையில், சில இடங்களில் சுருக்கமான வார்த்தைகளில் அல்லது கமா, அரைப்புள்ளி உள்ளிட்ட அடையாளங்களின் மூலமாக சில விஷயங்கள் உணர்த்தப்பட்டிருக்கும். அதுபோன்ற சமயங்களில் நாம் கவனமாக இருந்து, சிறப்பாக புரிந்துகொள்ளும் ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும்.
எழுதும் திறன்
பலரையும் விட, வழக்கறிஞர்கள், அதிகமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள். ஒரு நாவலாசிரியரை விட, ஒரு பத்திரிகையாளரை விட, ஒரு வழக்கறிஞர் அதிகம் எழுதுபவராக இருக்கிறார். எனவே, எந்த இலக்கணப் பிழையுமின்றி, தெளிவாக, சிறப்பாக எழுதும் திறனை ஒரு வழக்கறிஞர் பெற்றிருக்க வேண்டும். நல்ல ஆங்கிலத்திறன், ஒரு வழக்கறிஞரின் மதிப்பைக் கூட்டும்.
உங்களின் எழுத்தில் இலக்கணப் பிழை, வாக்கியப் பிழை உள்ளிட்ட பிழைகள் இருந்தால், சந்தையில் உங்களின் மதிப்பை இழக்க நேரிடும். இதன்மூலம், உங்களின் வாய்ப்புகள் குறைந்து வருமானத்தை இழக்க நேரிடும். சில சமயங்களில் வேலையே இல்லாமலும் போகலாம்.
அதற்காக ஒரு வழக்கறிஞர் என்பவர் பெரிய இலக்கியவாதியாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஏனெனில், அது எல்லோராலும் முடியாத காரியம். ஆனால், தான் சொல்ல வருவதை தெளிவாக, அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதத் தெரிந்தாலே போதுமானது.
காரணத்தை பகுப்பாயும் திறன்
உங்கள் கிளையன்டின் வழக்கை தெளிவாக பகுப்பாய்வு செய்து, வாதங்களை எடுத்து வைத்துக்கொண்டு, நீதிமன்றத்தில், நீதிபதி நம் வாதம் தெளிவானது மற்றும் நமக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கலாம் என்று நினைக்க வைக்குமளவு நம் வாதங்களை திறமையாக எடுத்து வைக்க வேண்டும்.
அதேசமயம், ஒரு நீதிபதியாக நீங்கள் இருந்தால், இரு தரப்பு வாதங்களையும் மிகவும் கவனமாக கேட்டறிந்து, நீங்கள் ஒருவர் சார்பாக இறுதி முடிவெடுக்கையில், எதனால் அந்த முடிவு எடுக்கப்பட்டது என்பதை தெளிவாக விளக்கும் அளவு திறமையிருக்க வேண்டும்.
ஒரு நடுவராக இருந்தாலும் சரி, இரு தரப்பு கருத்துக்களையும் பகுப்பாய்ந்து, உங்களின் நிலையை இருத்திக்கொண்டு, சரியான தீர்வை முன்வைக்க வேண்டும். ஒரு திறமையான வழக்கறிஞர் என்பவர், எதிர்தரப்பு வாதங்களை தவிடுபொடியாக்கக் கூடியவராக இருப்பார்.
இதுபோன்ற ஒரு வழக்கறிஞர், சந்தையில் பலராலும் அதிகம் விரும்பப்படக்கூடியவராக இருப்பார் மற்றும் அவர் எவ்வளவு தொகை கேட்டாலும், அதைக் கொடுப்பதற்கு தயாராக இருப்பார்கள். ஒரு நீதிபதி எதிர்தரப்புக்கு ஆதரவாக சிந்திக்க ஆரம்பித்தால், அந்த எண்ணத்தை சிதைக்கும் அளவிற்கு வலிமையான வாதங்களை எடுத்துவைக்க வேண்டும். மேலும், ஒரு சமூகத்தின் எண்ண ஓட்டத்தையே தனது வாதங்களால் மாற்றக்கூடிய திறனையும் பெற்றிருக்க வேண்டும்.
எனவே, ஒரு நல்ல வழக்கறிஞருக்கு, புலனாய்வு, ஆராய்வு, பகுப்பாய்வு, கணக்கீடுகள், படைப்பாக்கம், கூராய்வு உள்ளிட்ட பல்வேறு திறன்கள் இருக்க வேண்டும்.
பேச்சுத்திறன் மட்டுமே முக்கியமா?
சட்டம் படித்தவருக்கு, நீதிமன்ற பணி மட்டும்தான் என்ற நிலையிருந்தால், உங்களுக்கு சிறந்த பேச்சாற்றல் இருக்கிறதா என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டும். ஆனால், கார்பரேட் நிறுவனங்களில் ஆலோசகர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் உங்களுக்காக காத்துக் கொண்டிருப்பதால், பேச்சுத்திறன் இல்லாதவர்கள், அதைப்பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை.
திறன்களை வளர்த்தல்
வழக்கறிஞராக இருப்பவர், தான் எந்த துறையில் பணிபுரிகிறோமோ, அதுகுறித்த அறிவை சிறப்பாக வளர்த்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, patent துறையில் இருப்பவர், அறிவியல் அறிவை நன்கு பெற்றிருக்க வேண்டும். வரிவிதிப்பு துறையில் இருப்பவர், எண்களைப் பற்றிய சிறப்பான அறிவை பெற்றிருக்க வேண்டும்.
கிரிமினாலஜி துறையைப் பொறுத்தவரை, உளவியல் ஆய்வு திறன் மிகவும் முக்கியம். எனவே, வழக்கறிஞர் பணி என்பது, ஒரு ராணுவ வீரரின் பணியைப் போன்றது. எப்போதுமே விழிப்பாக இருக்க வேண்டும். தன் திறமைகளை ஒரு வழக்கறிஞர் எந்தளவிற்கு கூர்தீட்டிக் கொள்கிறாரோ, அந்தளவிற்கு அவர் பணம் சம்பாதிக்கலாம் மற்றும் சமூகத்தில் செல்வாக்குடையவராக இருக்கலாம்.
வழக்கறிஞருக்கான சில பிரதான திறன்கள்
* விரைவாக படித்து புரியும் திறன்
* கடின விஷயங்களை தெளிவாக புரிந்துகொள்ளும் திறன்
* நல்ல எழுத்துத் திறன்
* பகுப்பாய்வு திறன்
* கூராய்வு மற்றும் காரணகாரிய திறன்
* துறை சார்ந்த விரிவான அறிவு
* தனது கிளையன்ட் நிலை பற்றி விரிவாக அறிதல்.
