/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
புதிய சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர் பணி!
/
புதிய சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர் பணி!
ஜன 21, 2025 12:00 AM
ஜன 21, 2025 12:00 AM

கற்பித்தல் பணி என்பது எதிர்கால சமுதாயத்தை, நாட்டை கட்டியமைக்கக்கூடிய அரும்பெரும் பணியாகும். இதனை செயல்படுத்த வல்லமைப் படைத்தவர்கள் ஆசிரியர்கள்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என கடவுளுக்கும் மேலாக மதிக்கப்படுபவர்கள் ஆசிரியர்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் சுவாரஸ்யமான முறையில் பாடங்களை மாணவர்களிடம் எவ்வாறு கொண்டு சேர்ப்பது என்பது குறித்த சில முக்கிய குறிப்புகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இருவழி தொடர்பு
ஆசிரியர் வகுப்பறையில் நுழைந்ததும் மாணவர்கள் அவருக்கு வணக்கம் தெரிவிப்பர். அதற்கு ஆசிரியர் பதில் வணக்கம் செய்வதே முதல் தொடர்பு. வகுப்பறையில் நுழைந்த உடனே பாடத்தை நடத்த ஆரம்பிக்காமல், முந்தைய தினம் என்ன நடத்தப்பட்டது என்பது குறித்து சிறிய கலந்துரையாடலை மேற்கொள்ளலாம். அது மாணவர்கள் அந்த தலைப்புப் பற்றி ரீ-கால் செய்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும். பின்னர் பாடத்திற்குள் செல்லும்போது மாணவர்களின் கவனம் சிதறாமல் இருக்கும்.
தெரிந்த உதாரணங்கள்
பாடம் நடத்தும்போது மாணவர்கள் நன்கு அறிந்த விஷயங்களை எடுத்துக்காட்டுகளாக கொடுக்கலாம். உதாரணமாக, இயற்பியலில் என்ஜின் பற்றிய தலைப்பை நடத்தும்போது மிகவும் ஆற்றல் வாய்ந்த பைக் எது?, உங்களுக்கு பிடித்த பைக்? எது என்று கேள்வி எழுப்பி வகுப்பைத் தொடங்கலாம். இக்கேள்விகள் மாணவர்களிடையே ஆர்வத்தை தூண்டி விதவிதமான பதில்களை கொடுப்பார்கள். அதைத் தொடர்ந்து தலைப்பினுள் செல்லும்போது மாணவர்கள் எளிதாக புரிந்துகொள்வார்கள். கவனிக்காத மாணவர்கள் கூட சுவார்ஸ்யமான தகவல்களை பகிரும்போது பாடத்தை கவனிப்பார்கள்.
செய்தித்தாள் மேற்கோள்கள்
வகுப்பில் பாடம் நடத்தத் தொடங்குவதற்குமுன் அன்றைய நாளிதழ்களில் பாடம் தொடர்பான ஏதேனும் செய்தி இருந்தால், முதலில் அதைப் பற்றி மாணவர்களிடம் உரையாடலாம். மாணவர்களும் செய்தித்தாளையோ அல்லது தொலைக்காட்சியையோ அல்லது வேறு யாராவது அதுபற்றி பேசியதை கேட்டிருப்பார்கள். வகுப்பில் கலந்துரையாடும்பொழுது அச்செய்தியை நினைவுபடுத்திக் கொள்வதற்கும் பாடத்துடன் தொடர்புபடுத்திக் கொள்வதற்கும் நல்வாய்ப்பாக இருக்கும். பொது அறிவும் வளரும்.
நகைச்சுவை
நகைச்சுவை என்பது சக்தி வாய்ந்த ஈர்ப்பு சக்தி. மாணவர்களை உடனடியாக பாடத்திற்குள் நுழைய வைக்கும் ஆற்றல் அதற்கு உண்டு. தலைப்புடன் தொடர்புடைய நகைச்சுவையை சேர்க்கும்போது அது பாடத்தை கவர்ச்சிகரமானதாக ஆக்கும். உள்ளடக்கத்துடன் தொடர்புடைய நகைச்சுவை மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும். பாடத்தை கவனச்சிதறல் இல்லாமல் கவனிக்க வைக்க இந்த உத்தி உதவும் என்கிறார்கள் ஆசிரியர்கள்.
செயல்-எதிர்செயல்
முக்கியக் கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி சொல்லும்போது, அக்கருத்து மாணவர்கள் மனதில் ஆழமாக பதியும். ஆசிரியர் தமது விரிவுரையை இண்டர்-ஆக்ஷன் முறையில் செயல்படுத்தலாம். விமர்சன சிந்தனையைத் தூண்டும் கேள்விகளை மாணவர்களிடம் கேட்கலாம். ஒரு தலைப்பை நடத்தி முடித்தவுடன் அத்தலைப்புபற்றி மாணவர்களிடம் பொதுவாக கேள்வி கேட்கலாம். ஒட்டுமொத்த வகுப்பு மாணவர்களிடம் பொதுவாக கேள்விகளை கேட்கும்போது ஒவ்வொரு மாணவரிடமும் இருந்து பல்வேறு பதில்கள் கிடைக்கும். அவற்றில் சரியான பதிலளித்தவர்களை பாராட்டலாம். பதில்கள் தவறாக இருப்பின் அதற்கான சரியான பதிலைக் கூறி அதற்கான சரியான விளக்கத்தை கூறலாம்.
நட்பாக பழகுதல்
மாணவர்களுடன் நட்பாக பழகும்போதுதான், அவர்கள் பாடங்களை எந்தளவுக்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். மாணவர்களும் பாடம் குறித்த சந்தேகங்களை தைரியமாக கேட்கவும், பதிலளிக்கவும் தயங்க மாட்டார்கள். மாணவர்களுக்கும் நட்பாக பழகும் ஆசிரியர்களிடம் அதிக மரியாதையுடன் இருப்பர்.
தெளிவான விளக்கம்
கடினமான பாடங்கள் மாணவர்களிடையே கவனக்குறைவை ஏற்படுத்தும். அதனால் பாடங்களை திட்டமிட்டு வகுப்புக்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும். பாடம் குறித்த தெளிவான விளக்கங்களை கொடுக்க வேண்டும். விளக்கக்காட்சிகளைக் கொண்டு எளிமையாக புரியும்படி நடத்தலாம். அன்றைய வகுப்பில் நடத்தப்பட்ட பாடத்தின் சுருக்கத்தை கடைசி 5 நிமிடத்தில் முடிவுரையாக கொடுக்கலாம். அதேபோல் மறுநாள் எடுக்கப்போகும் தலைப்பு குறித்த சிறிய முன்னுரையை வழங்கலாம்.
கற்றுக்கொடுப்பது கல்வி அல்ல; எவ்வாறு யோசிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பதே கல்வி என்கிறார், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு சிறிய திட்டமிடலுடன் சுவரஸ்யமாக கற்றுக் கொடுக்கும்போது கல்வி கற்கும் மாணவர்கள் தாங்கள் கற்றுக் கொண்டதையும், கற்றுக் கொடுத்தவரையும் மறக்காமல் காலத்திற்கும் நினைவில் வைத்து கொள்வார்கள்.