தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/சிந்தனைகளை வடிவமைத்து எதிர்காலத்தை கட்டமைக்கும் ஆசிரியர்கள்!

சிந்தனைகளை வடிவமைத்து எதிர்காலத்தை கட்டமைக்கும் ஆசிரியர்கள்!

சிந்தனைகளை வடிவமைத்து எதிர்காலத்தை கட்டமைக்கும் ஆசிரியர்கள்!


செப் 05, 2026 10:10 PM

செப் 05, 2026 10:10 PM

Follow on GoogleFavourite on Google

செப் 05, 2026 10:10 PM செப் 05, 2026 10:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோடிக்கணக்கான மாணவர்களின் வாழ்வில் அறிவு, திறன், நற்பண்புகள், ஊக்கம் ஆகியவற்றை வழங்கி வரும் ஆசிரியர்கள் அனைவருக்கும், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, இந்திய மக்கள் அனைவரின் சார்பிலும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்கள் திறமையாலும், நற்பண்புகளாலும் மதிப்பிற்குரியவர்களாக விளங்கும் ஆசிரியர்களும், அத்தகைய ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தும் மாணவர்களும் எப்போதும் நமக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றனர்.

ஆசிரியர்கள், மாணவர்களை தங்களது சொந்த குழந்தைகளைப் போல் கருதி அன்பு செலுத்த வேண்டும்; பாரபட்சமின்றி, நியாயமாக அவர்களை வழிநடத்த வேண்டும்.

வழிகாட்டி


மாணவர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்தாமல் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். மாணவர்களின் நலனுக்கே எப்போதும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

ஒரு பாடத்திட்டத்தைக் கற்பிப்பதுடன் ஆசிரியர்களின் பணி நிறைவடைவதில்லை. தங்களது முன்மாதிரியான செயல்பாடுகளால், ஆக்கப்பூர்வமான வாழ்க்கைக்கு தேவையான கலை மற்றும் திறன்களையும் மாணவர்களுக்கு அவர்கள் கற்றுத் தருகின்றனர்.

ஆசிரியர் என்பவர் ஒரு வழிகாட்டியாக மட்டுமின்றி, நலம் விரும்பியாகவும், நண்பராகவும், கற்றலுக்கான மாணவர்களின் தேடலுக்கு வழிகாட்டியாகவும் விளங்க வேண்டும்.

மாணவர்களிடையே சுயமாகச் சிந்திக்கும் ஆற்றலை வளர்ப்பது, அவர்களின் ஆர்வத்தைத் துாண்டுவது, கேள்வி கேட்கும் மனப்பான்மையை ஊக்குவிப்பது, விவாதிக்கும் திறனை வளர்ப்பது, முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துவது ஆகியவை ஆசிரியர் பணியின் மிகச் சிறந்த, மனநிறைவு அளிக்கும் பரிமாணங்களாகும்.

அதே போல், தனித்துவமான ஆளுமைகளாக மாணவர்கள் நிமிர்ந்து நிற்கவும் ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும். இத்தகைய ஊக்கமளிக்கும் கல்வியின் வாயிலாக மட்டுமே சிறந்த தொழில்முனைவோர், அறிவார்ந்த விஞ்ஞானிகள், படைப்பாற்றல் மிக்க கலைஞர்கள் மற்றும் அதிகரித்து வரும் சவால்களுக்கு புதுமையான தீர்வுகளைக் கண்டறியும் திறன் கொண்ட இளம் தலைமுறையை நம்மால் உருவாக்க முடியும்.

கற்பித்தல் என்பது வெறும் வேலை அல்ல; வெறும் வாழ்க்கை தொழிலும் அல்ல. அது ஒரு உறுதிமொழி. மனித சமூகத்தை வடிவமைக்கும் புனிதப் பணியாகும். வருங்கால தலைமுறையினருக்கு ஒளிமயமான பாதையை வகுத்துக் கொடுப்பது, நம் ஒவ்வொருவரின் உன்னத கடமையாகும்.

தங்கள் குழந்தைகளை கல்வி கற்க அனுப்பும் போது, பெற்றோரும், பொறுப்பாளர்களும் ஆசிரியர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைக்கின்றனர். ஆசிரியர்கள், குழந்தைகளை தாங்கள் பெற்ற பிள்ளைகளைப் போல் கருதி, அவர்களின் பாதுகாப்பிலும், முன்னேற்றத்திலும் அதிக கவனம் செலுத்துவர் என அவர்கள் நம்புகின்றனர்.

தங்கள் மீது வைக்கப்படும் இந்தப் புனிதமான நம்பிக்கையைக் காப்பது ஒவ்வொரு ஆசிரியரின் கடமையாகும். ஆசிரியரின் அணுகுமுறை, நடத்தை, செயல்பாடுகள் ஆகியவை குழந்தைகளிடம் அச்சத்தையோ, பதற்றத்தையோ ஏற்படுத்தக் கூடாது. அவர்களது மன உறுதியை சீர் குலைக்கக்கூடாது. குழந்தைகளிடையே தாழ்வு மனப்பான்மை வளரவும் காரணமாக இருக்கக் கூடாது.

முன்னுரிமை

சமூக உள்ளடக்கத்தை மையமாகக் கொண்ட வளர்ச்சியடைந்த நாடாக முன்னேறும் இலக்கை நோக்கி நம் நாடு பயணித்து வருகிறது. இந்தப் பயணத்தில், வளமான கலாசாரப் பாரம்பரியத்தை மதிக்கக்கூடிய, அறிவியல் மனப்பான்மையுடன் மனித சமூகத்தின் நலனுக்காக பாடுபடக்கூடிய, சமூகத்தின் கடைக்கோடியில் உள்ளவர்களின் நலனிலும் அக்கறை செலுத்தக்கூடிய மாணவர்களை நம் ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்.

சுற்றுச்சூழலையும் அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பது, சிறந்த தனிநபர் மற்றும் கூட்டுச் செயல்திறனை வெளிப்படுத்துவது, 'தேசத்திற்கு முன்னுரிமை' என்ற உணர்வுடன் முன்னேறுவது போன்ற நற்பண்புகளைக் கொண்ட இளம் தலைமுறையினரை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்.

அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும் பணியாற்றும் ஆசிரியர்கள் மீது நாம் எப்போதும் மிகுந்த மரியாதை செலுத்த வேண்டும்.

அர்ப்பணிப்புள்ள நம் ஆசிரியர்களின் பங்களிப்புடன், மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்று, உலகிற்கு வழிகாட்டும் உன்னத நிலையை இந்தியா அடைய வேண்டும் என்று நான் உளமார விரும்புகிறேன்.

- திரவுபதி முர்மு, ஜனாதிபதி.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us