ஜூலை 30, 2024 12:00 AM
ஜூலை 30, 2024 12:00 AM

மேலாண்மை கல்வி வழங்குவதில் நாட்டிலேயே முதல் இடத்தை ஐ.ஐ.எம்., அகமதாபாத் பிடிக்க பிரதான காரணம், பிரத்யேக கல்வி முறையை பின்பற்றுவதலுடன், தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றுதலுமே...
மேலாண்மை கல்வி என்பதே தொழில் நிறுவனங்களுக்கு பொருத்தமான மனித வளத்தை வழங்கும் கல்வியாக விளங்குவதால், அவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது மிக அவசியமும் கூட... ஆகவேதான், ஐ.ஐ.எம்., அகமதாபாத் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர்கள் அனைவரும் சர்வதேச தொழில் நிறுவனங்களில் என்னென்ன மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் நடைபெறுகிறது என்பதை கவனித்துவருவதோடு, புதியவற்றை தொடர்ந்து கற்றும் கொள்கின்றனர். தாங்கள் கற்றவற்றை செயல்முறையில் மாணவர்களையும் கற்றுக்கொள்ள வழிகாட்டுகின்றனர்.
ஆசிரியர் பயிற்சியாளரே
சுய கற்றல் திறனை எங்கள் மாணவர்கள் அதிகம் கொண்டிருப்பதால், வகுப்பறையில் பேராசிரியர்கள் கற்பிப்பதில்லை. மாறாக, 'கேஸ் ஸ்டடீஸ்' வாயிலாக மாணவர்களை அதிகளவில் விவாதிக்கவும், உரையாடவும் ஊக்கம் அளிக்கின்றனர். இவற்றின் வாயிலாக தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கு சிந்திந்து, ஆராய்ந்து, தீர்வுகளை தருகின்றனர்.
மாணவர்கள் ஒவ்வொருவரும் சக மாணவர்களுடமிருந்தும், தொழில் நிறுவனங்களிடமிருந்தும், பல்வேறு சவால்களில் இருந்தும் அதிகம் கற்றுக்கொள்கின்றனர். ஆகையால், எங்கள் கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் என்பவர் ஒரு பயிற்சியாளர் (கோச்) ஆகவே மாணவர்கள் மத்தியில் செயல்படுகிறார்.
ஆன்லைன் வழி கல்வி
ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற 'கேட்' எனும் 'காமன் அட்மிஷன் டெஸ்ட்' எழுத வேண்டியது அவசியம். இத்தேர்வு மிகவும் கடினமான ஒன்று போல தோற்றம் நிலவுகிறது. உண்மையில், இத்தேர்வு கடினமல்ல... அதிகமான மாணவர்கள் இத்தேர்வு எழுதுவதால் 'போட்டி' தான் கடுமையாக உள்ளது. மாணவர் சேர்க்கை இடங்களை விட பல மடங்கு அதிகமான மாணவர்கள் போட்டியிடுகின்றனர்.
ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களில் படிக்க விரும்பும் அனைவருக்கும் இடம் அளிக்கும் வகையிலான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது மிகவும் கடினம். ஆகவேதான், முழுவதும் ஆன்லைன் வாயிலான கல்வியும், 'ஹைபிரிட்' முறையிலான எம்.பி.ஏ., படிப்பையும் அறிமுகப்படுத்தி உள்ளோம். அனுபவ முறையில் படிக்கும் வகையில் குறிப்பிட்ட சில காலம் மட்டும் நேரடியாகவும், பெரும்பாலான வகுப்புகள் ஆன்லைன் வாயிலாகவும் நடைபெறுகிறது. எனினும், தரத்திலும், கல்வி முறையிலும் எந்தவிதமான சமரசமும் செய்யப்படுவதில்லை.
சர்வதேச தரவரிசை பட்டியலில் இந்திய கல்வி நிறுவனங்களும் முக்கிய இடம் வகிக்க துவங்கி உள்ளன. தேசிய கல்விக் கொள்கை 2020ன் வருகையால், அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளிலும், கல்வி முறையிலும் பெருமளவு மாற்றம் நிகழும் என்று நம்புகிறேன்.
-பேராசிரியர் பாரத் பாஸ்கர், இயக்குனர், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட், அகமதாபாத், குஜராத்.
director@iima.ac.in
+91-79-71523456