ஜூலை 23, 2025 12:00 AM
ஜூலை 23, 2025 12:00 AM

கனவுகள் பலருக்கும் உள்ளது. ஆனால், பெரும்பாலானவர்களின் செயல்கள் அவர்களது கனவுகளை அடையும் விதமானதாக இல்லாமல், முற்றிலும் வேறு விதமானதாக உள்ளது. அதனால்தான் அவர்களால் கனவை நிறைவேற்ற முடியாமல் தடுமாறுகின்றனர். கனவுகளை நோக்கி செயல்களை சிறப்பாக மேற்கொள்பவர்கள் மென்மேலும் சிறந்த இடத்திற்கு செல்கின்றனர்.
கனவையும், செயலையும் இணைக்கும் சக்தி சிந்தனைக்கு உண்டு. கனவுகளை அடைய உறுதுணைபுரியும் 'சிந்தனை' மிகவும் வலிமையானதாக இருக்க வேண்டும். அவ்வாறு கனவுகளை நோக்கிய செயல்களையும், வலிமையான சிந்தனையையும் பெற்றிருப்பவர்களது வாழ்க்கை பிரமாண்டமாகவும், பிரகாசமாகவும் இருக்கும். அவர்களை சுற்றியிருப்பவர்களும் மிகவும் மகிழ்ச்சியாக உணர்வர்.
அத்தகைய சக்தி வாய்ந்த சிந்தனையையும், செயலையும் வடிவமைக்கும் வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு 'டிசைன் திங்கிங்' எனும் யுக்தியை எங்கள் கல்வி நிறுவனங்களில் பாடத்திட்டங்கள் வாயிலாக அறிமுகப்படுத்தினோம். கல்லூரியில் பெற்ற அறிவை, சமூதாயத்திலோ அல்லது தொழில் நிறுவனங்களிலோ நிலவும் ஒரு பிரச்னைக்கு ஏற்றாற்போல் பயன்படுத்தும் தெளிவை பெற்று, உரிய தீர்வைவும் மாணவர்கள் வழங்க வேண்டும். அத்தகைய முயற்சிக்கு 'டிசைன் திங்கிங்' மிகவும் உறுதுணையாக அமையும். இதன் வெற்றியை முழுமையாக அறிய 10 ஆண்டுகாலம் எடுக்கும் என்றபோதிலும், வெற்றியை நோக்கிய வளர்ச்சியை தற்போதே நன்கு உணரமுடிகிறது.
பிரச்னைக்கு உரிய தீர்வை கண்டறியும் பயணத்தில் ஏ.ஐ., எனும் சுனாமி ஆசிரியர்களையும், மாணவர்களையும் விரைவாக செயல்பட உதவுகிறது. ஆகவேதான், எங்கள் கல்வி நிறுவனங்களில் அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஜென்ரேட்டிவ் ஏ.ஐ., மற்றும் ஏஜெண்ட் ஏ.ஐ., ஆகியவற்றில் முழுமையான பயிற்சி பெற்றுக்கொள்ள முழுமுயற்சி மேற்கொண்டுள்ளோம்.
ஏராளமான தொழில் நிறுவனங்கள், அரசாங்கங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் ஏ.ஐ., வளாகங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. வரும்காலங்களில் மெக்கானிக்கல், பயோமெடிக்கல், காமர்ஸ் என எந்த ஒரு துறையாக இருந்தாலும் அவற்றில் ஏ.ஐ.,யின் பயன்பாடு நிச்சயம் இருக்கும். ஏ.ஐ., இன்றி எந்த துறையையும் தனித்து பார்க்க முடியாத சூழல் உருவாகும். ஆகையால், எந்த பாடப்பிரிவை தேர்வு செய்கிறோம் என்பதில் இனி அதிக கவலை கொள்ளாமல், எந்த துறையை தேர்வு செய்து படித்தாலும் அவற்றில் ஏ.ஐ., கண்டிப்பாக இருக்கும் என்பதை உணர்ந்து, எந்த ஒரு பாடப்பிரிவையும் தேர்வு செய்யலாம்.
இத்தருணத்தில் 'ஒவ்வொரு துறையிலும் பணிச்சூழலை ஏ.ஐ., நிச்சயம் மாற்றும்' என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் வேறு எந்த மாதிரியான தாக்கத்தை ஏ.ஐ., ஏற்படுத்தும் என்பதையும் பொறுமை காத்துதான் பார்க்க வேண்டும். எனினும், ஏ.ஐ., பல தொழில்முனைவோர்களை உருவாக்கும் என்பதிலும் ஐயமில்லை.
-நளின், தொழில்நுட்ப இயக்கு
ன
ர், எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனங்கள், கோவை.