ஆர்வமும் திறமையும் இருந்தால் முன்னேற்றத்திற்கு உத்தரவாதம்!
ஆர்வமும் திறமையும் இருந்தால் முன்னேற்றத்திற்கு உத்தரவாதம்!
ஆக 24, 2013 12:00 AM
ஆக 24, 2013 12:00 AM
இளைய தலைமுறையினரை இன்றைய நிலையில் ஈர்க்கும் படிப்புகளில் ஒன்றாக ஜர்னலிசம் திகழ்கிறது. தன்னம்பிக்கை, பரவலான அறிமுகம், உலக அறிவு, அணுகுமுறை அறிவு உள்ளிட்ட பல விஷயங்கள் அத்துறையில் கிடைப்பதால் அதன் மீதான ஈர்ப்பு அதிகரித்து வருகிறது.
இன்றைய எலக்ட்ரானிக் யுகத்தில், அதிகளவிலான தொலைக்காட்சி சேனல்கள் இயங்கியும், புதிதுபுதிதாக திறக்கப்பட்டும் வருவதால், பலர் இதுபோன்ற எலக்ட்ரானிக் மீடியாக்களில் பணிபுரிவதை விரும்புகிறார்கள். ஏனெனில், அதன்மூலம் அவர்கள் பலராலும் பார்க்கப்படுவார்கள் மற்றும் எளிதில் பார்க்கப்படுவார்கள்.
தியரி மற்றும் பிராக்டிகல் கலந்து...
ஜர்னலிசம் படிப்பு தியரி மற்றும் பிராக்டிகல் அம்சங்களை உள்ளடக்கியதாகும். ஒருவர் அடிப்படை விஷயங்கள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் குறித்த அறிவின்றி, நிச்சயமாக ஒரு நல்ல பத்திரிகையாளராக பரிணமிக்க முடியாது. மேலும், களப் பணியானது, ஒரு பத்திரிகையாளருக்கு நல்ல அனுபவத்தையும், நம்பிக்கையையும் தருகிறது.
அரசியல் அறிவியல், பொருளாதாரம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வகை அம்சங்களை இப்படிப்பின் பாடத்திட்டம் உள்ளடக்கியுள்ளது. மேற்கூறிய பொதுப்பாடங்களைத் தவிர்த்து, எடிட்டிங், தொலைக்காட்சிக்கான ரிப்போர்ட்டிங், பிரின்ட் மற்றும் இண்டர்நெட், ஜர்னலிசத்தின் அடிப்படைகள், செய்தி கருத்தாக்கங்கள், ஜர்னலிச வரலாறு, ரேடியோ, தொலைக்காட்சி, பல்வேறு வகைப்பட்ட தகவல் தொடர்பு மற்றும் அதன் தியரிகள் ஆகியவைப் பற்றியும் மாணவர்கள் கற்பிக்கப்படுவார்கள்.
பல நல்ல கல்வி நிறுவனங்கள், ஆடியோ வீடியோ வசதியுடன் கூடிய சிறிய தயாரிப்பு ஸ்டுடியோ, ஒரு ரேடியோ நிலையம் மற்றும் பிரின்டிங் பிரஸ் ஆகியவற்றை தமது வளாகத்தில் கொண்டிருக்கின்றன. இதன்மூலம், உள்வளாக செய்தித்தாளை பிரின்ட் செய்தல், தொலைக்காட்சி மற்றும் ரேடியோவிற்கான நிகழ்ச்சிகளை தயாரித்தல் உள்ளிட்டவற்றில் மாணவர்கள் பயிற்சிபெறும் வாய்ப்பு கிடைக்கிறது. மேலும், இன்டர்ன்ஷிப் செய்வது மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது மற்றும் அவர்களுக்கு அதற்கான ஊதியமும் தரப்படும்.
பொறுமையும் ஆர்வமும்...
இத்துறையில், ஐ.டி., உள்ளிட்ட சில துறைகளைப் போன்று, ஆரம்பத்திலேயே அதிக சம்பளத்தை எதிர்பார்க்க முடியாது. சிறிது காலம் பொறுமையாக காத்திருக்க வேண்டும். இத்துறையில் அதீத ஆர்வம் கொண்ட ஒருவர், நல்ல சந்தோஷத்தை அனுபவிப்பார் என்பதை மட்டும் உறுதியாக கூற முடியும்.
பணி நிலைகள்
புதிதாக படிப்பை முடித்த ஒருவருக்கு, ஆரம்பத்தில் trainee என்ற நிலையில் பணிவாய்ப்பு கொடுக்கப்படும் மற்றும் அவர் 6 மாதங்கள் probation காலகட்டத்தில் இருப்பார். இதன்மூலம், அந்த குறிப்பிட்ட நபர் மற்றும் நிறுவனம் ஆகிய இருவருக்குமே நன்மை கிடைக்கிறது.
அதன்பிறகு, அவர் உதவி ஆசிரியர் அல்லது ஜுனியர் நிருபர் என்ற நிலைகளைப் பெறுவார். அடுத்தடுத்து அனுபவம் கூட கூட, சீனியர் உதவி ஆசிரியர், காப்பி எடிட்டர் அல்லது ரிப்போர்டிங் துறையில் இருந்தால், special correspondent என்ற நிலைக்கும் ஒருவர் உயர்த்தப்படுவார். மொத்தத்தில், ஒருவருக்கு பணியில் இருக்கும் ஆர்வம், கொடுக்கப்பட்ட வேலையை அவர் எவ்வாறு சிறப்பாக மேற்கொள்கிறார் என்பதைப் பொறுத்தே, இத்துறையில் பதவி உயர்வும், சம்பள உயர்வும் அமைகிறது.
Freelancer பணியில் விருப்பமா?
ஒரு ஜர்னலிச பட்டதாரி, Freelancer என்ற நிலையிலும் தனது தொழிலை தொடங்கலாம். ஏதேனும் ஒரு மீடியா நிறுவனத்திற்கு அவர் செய்திகளையோ அல்லது கட்டுரைகளையோ எழுதலாம். அவர் தரும் விஷயத்தின் தன்மை மற்றும் ஆழம் இவைகளைப் பொறுத்து, அவருக்கான தொகை வழங்கப்படுகிறது.
Free lancing பணியின் மூலம் ஒருவர் அதிக சுதந்திரம் பெறுகிறார். இதுதவிர, தொலைக்காட்சிகளில், stringer எனப்படும் பகுதிநேர பணிகளையும் பெறலாம். இதுபோன்ற பணி நிலைகளில், நமது பணியின் தரம் மற்றும் அதன் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து நாம் வருமானம் ஈட்டலாம்.
சம்பளம்
புதிதாக படிப்பை முடித்த ஒரு ஜர்னலிச பட்டதாரி, ஆரம்பத்தில், ரூ.8 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை, தான் பணிபுரியும் நிறுவனம் மற்றும் திறமையைப் பொறுத்து பெறுவார். மேலும், பயணப்படி உள்ளிட்ட சில ஊக்கத்தொகை சலுகைகளும் உண்டு. மேலும், சில மீடியா நிறுவனங்கள், கூடுதல் நேரம் பணிபுரியும் ஊழியர்களுக்கு அதற்கான ஊதியத்தையும் வழங்குகின்றன.
பணி வாய்ப்பை பெறுவது கடினமா?
நல்ல மீடியா நிறுவனங்களில், ஒரு ஜர்னலிச பட்டதாரி எளிதாக பணிவாய்ப்பை பெற்றுவிடுவது எளிதல்ல. பல மீடியா நிறுவனங்கள், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் மற்றும் முதுநிலை ஜர்னலிசம் படித்தவர்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பதை மறுக்க முடியாது.
மேலும், இத்துறையில் பணிவாய்ப்பை பெற, சிபாரிசு முக்கியப் பங்கு வகிக்கிறது. அதேசமயம், இவற்றை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு சோர்ந்துவிட வேண்டியதில்லை. ஒரு சாதாரண கல்லூரியில் ஜர்னலிசம் படித்து, தொடக்கத்தில், ஒரு சாதாரண மீடியா நிறுவனத்தில் குறைந்த சம்பளத்திற்கு வேலைசெய்யும் ஒருவர், தனது ஆர்வம் மற்றும் திறமையினால், குறுகிய காலத்திலேயே பெரிய நிலைக்கு உயர முடியும்.
இன்றைக்கு, ஜர்னலிச துறையில் புகழ்பெற்று விளங்கும் நபர்களில் பலர், முறையாக, அதுசார்ந்த பட்டப்படிப்பை படிக்காத நபர்கள் உள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, ஆரம்பத்தில், எங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ, அங்கே கற்க வேண்டியதை கற்று, திறமைகளை வளர்த்துக்கொண்டு, பல மீடியா நபர்களின் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட யார் வேண்டுமானாலும் பெரிய ஆளாக வரலாம். இத்துறை அதற்கான தன்மைகளைக் கொண்டுள்ளது என்பதே உண்மை.
இப்பணியின் சவால்கள்
அதிக வருமானம் மற்றும் புகழை இத்துறையில் எதிர்பார்ப்பது ஒருபுறம் இருக்க, இத்துறை சார்ந்த சவால்கள் பற்றியும் ஒருவர் நன்கு அறிந்துகொள்ள வேண்டும். எடிட்டோரியல் துறையில் இருப்பவர்கள், தாங்கள் பணிபுரியும் செய்திகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும். அதில் என்னவிதமான ஆட்சேபகரமான விஷயங்கள் இருக்கின்றன, எழுத்து, இலக்கணம் மற்றும் கருத்துப் பிழைகள் உள்ளனவா, அந்த செய்திக்குரிய சரியான படம் உள்ளதா என்பது குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், அதை பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்ப்பார்கள் என்பதை மறந்துவிடல் கூடாது. நாம் செய்யும் சிறிய தவறு, நாம் பணிபுரியும் நிறுவனத்திற்கே அவப்பெயரை ஏற்படுத்திவிடும் என்பதை மறத்தல் கூடாது.
நிருபர் பணியைப் பொறுத்தவரை, தனது தொடர்புகளை எப்போதும் சரியாக வைத்துக்கொள்ள வேண்டும். எங்கே முக்கிய சம்பவங்கள் நடந்தாலும், அதை தவறவிடல் கூடாது. ஒரு நிருபர், தனது கண்களையும், காதுகளையும் எப்போதும் கூர்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். பல்வேறான தரவுகளை வைத்து ஒரு தரமான மற்றும் நம்பகமான செய்தியை வழங்குவது ஒரு நல்ல நிருபருக்கு முன்னால் இருக்கும் சவால்.
இப்பணியில், பல சமயங்களில் நேரக் கட்டுப்பாடுகளெல்லாம் இருக்காது. பணியின் தன்மையைப் பொறுத்து, ஒருவர் எப்போது கூப்பிட்டாலும் வர வேண்டியிருக்கும். மேலும், நிருபர் பணியைப் பொறுத்தவரை, சில இடங்களில் எதிர்ப்பையும், தாக்குதல்களையும் சந்திக்க வேண்டியிருக்கலாம்.
பணி திருப்தி
என்னதான் சவாலான பணியாக இருந்தாலும், இத்துறையில் பணிபுரிவோர் ஒரு பெருமிதத்துடன் இருப்பதை மறுக்க முடியாது. அவர்களுக்கு, ஒரு பெரிய சமூக அங்கீகாரம் கிடைத்திருப்பதாய் உணர்கிறார்கள்.
மேலும், உயர்மட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் வரை, எளிதாக சந்திக்கும் வாய்ப்புகளை இவர்கள் பெறுவதால், இவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது மற்றும் சமூகத்திற்கு சேவை செய்கிறோம் என்ற சந்தோஷமும் ஏற்படுகிறது.
இப்படிப்பு பற்றி...
இளநிலை ஜர்னலிசம் அன்ட் மாஸ் கம்யூனிகேஷன்(Bachelor in Journalism and Mass Communication) படிப்பை பொறுத்தவரை, பல முக்கிய விஷயங்களை உள்ளடக்க முயற்சி செய்தாலும், ஸ்பெஷலைசேஷன் எதுவும் இப்படிப்பில் இடம்பெறவில்லை. இப்படிப்பில் பல நன்மைகளைப் பெற்றாலும், இதை மேற்கொள்ளும் மாணவர்கள், புதிதாக எதையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளைப் பெற முடிவதில்லை என்பது பெரிய குறையாக உள்ளது.
