செப் 07, 2013 12:00 AM
செப் 07, 2013 12:00 AM
2013ம் ஆண்டு மே மாதம் வரையிலான கணக்கெடுப்பின்படி, இந்தியாவில், பார் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட 900 சட்டப் பள்ளிகள் இருக்கின்றன. ஒரு சட்டப் பள்ளிக்கு இருக்கும் புகழை மட்டுமே வைத்து, ஒரு மாணவர் அதை தேர்வு செய்யலாமா? என்ற கேள்வி எழுகிறது. வெறுமனே புகழை வைத்து மட்டுமல்லாது, ஒரு நல்ல சட்டக் கல்வி நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான வேறு பல உத்திகளும் இருக்கின்றன. அவைப் பற்றி இக்கட்டுரை விரிவாக ஆராய்கிறது.
நல்ல பேராசிரியர்கள்
நல்ல பேராசிரியர்கள் என்பவர்கள், அனைத்துவகை கல்லூரிகளுக்கும் முக்கியமானவர்கள். அவர்கள்தான், ஒரு சலிப்பான பாடத்தையும் சிறப்பானதாக மாற்றுகிறார்கள் மற்றும் வகுப்பறைக்கு வருவதற்கு, மாணவர்களைத் தூண்டுகிறார்கள். அவர்களின் மூலம், பாடங்களில் அக்கறையில்லாத மாணவன்கூட, மாறிவிடுகிறான். எனவே, தங்கள் ஆசிரியர்களின் தகுதி பற்றிய விபரங்களை ஒவ்வொரு கல்வி நிறுவனமும் வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிடாத கல்வி நிறுவனம் நிராகரிக்கப்பட வேண்டும்.
மேலும், ஒரு சட்டக் கல்வி நிறுவனத்தில், ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரத்தை கவனிப்பதும் அவசியம். மேலும், ஆசிரியர்களின் அலுவலகம் எங்கே அமைந்துள்ளது? அவர்களை எளிதாக அணுக முடியுமா? தினசரி, மாணவர் நடவடிக்கைகளில், மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்களா? என்பவற்றையும் கவனிக்க வேண்டும்.
வேலை வாய்ப்பு மற்றும் இன்டர்ன்ஷிப்
நீங்கள் சேர நினைக்கும் சட்டக் கல்லூரியில், வகுப்பறைக்கு வெளியே எந்த மாதிரியான அகடமிக் மற்றும் புரபஷனல் நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன என்பதை ஆராய வேண்டும். கிளீனிக்ஸ், ஜர்னல்ஸ் அல்லது இன்டர்ன்ஷிப்ஸ் போன்றவை அவற்றுள் அடங்கும். இவற்றை, கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே உங்களால் நிறைவுசெய்ய முடியும்.
மேலும், எந்த சட்டக் கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவர், சர்வதேச அளவிலான மற்றும் தேசிய அளவிலான சட்ட அமைப்புகளில், Judicial clerkships அல்லது இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளைப் பெறுகிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்.
இட அமைப்பு
நீங்கள் முதல் 5 அல்லது முதல் 10 இடங்களுக்குள் உள்ள சட்ட கல்வி நிறுவனங்களில் சேர நினைத்தால், அதன் இடஅமைப்பை பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருவர் தனது சட்டப் படிப்பை முடித்தப்பிறகு, எங்கே வாழப் போகிறார், பயிற்சி மேற்கொள்ளப் போகிறார் மற்றும் பணி செய்யப்போகிறார் என்பதை முடிவுசெய்ய முயல வேண்டும். எனவே, அதற்கேற்ப, அதே பகுதியிலுள்ள சட்டக் கல்வி நிறுவனத்தில் சேர முயற்சிக்க வேண்டும்.
கட்டணம்
5 வருட படிப்பிற்கு, உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியும் என்பதைப் பற்றி கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். உங்களால் சமாளிக்க முடியாது என்று தெரிந்தால், அதிக கட்டணம் வசூலிக்கும் வணிக கல்வி நிறுவனங்களை உடனடியாக நிராகரித்து விடவும். உங்களின் பொருளாதார நிலை சாதாரணமானது என்றால், உங்களுக்கு கிடைக்கக்கூடிய உதவித்தொகை திட்டங்கள் மற்றும் உங்களால் பெற இயலக்கூடிய கடன்கள் ஆகியவை குறித்து தெளிவாக யோசித்து முடிவெடுக்க வேண்டும்.
நீங்கள் வசிக்கும் இடத்தின் அருகே இருக்கக்கூடிய ஒரு அரசு சட்டக் கல்லூரியில் படிப்பதும் சிறந்த தேர்வுதான். ஏனெனில், ஒரு புகழ்பெற்ற சட்டக் கல்வி நிறுவனத்தில், தலையை மூழ்கடிக்கும் அளவிற்கு கடன்பட்டு படித்து வெளிவருவதைவிட, இந்தப் படிப்பு எவ்வளவோ உயர்ந்தது. அதேசமயம், ஒருவரின் குடும்பச் சூழல், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிக்க முடியும் என்ற நிலையில் இருந்தால், அவர் கட்டணம் பற்றி எதையும் யோசிக்க வேண்டியதில்லை.
பழைய மாணவரிடம் விசாதித்தல்
நீங்கள் சேர விரும்பும் சட்டக் கல்வி நிறுவனத்தின் பழைய மாணவரிடம், அக்கல்வி நிறுவனம் பற்றி முடிந்தளவு விசாரிக்க வேண்டும். படிப்பு முடித்தப் பிறகான வாய்ப்புகள் மற்றும் பிற மாணவர்களுடனான நெட்வொர்க் ஆகியவை குறித்தும் நன்கு விசாரிக்க வேண்டும்.
சட்டப்பூர்வ ஆராய்ச்சி மற்றும் எழுத்து
நீங்கள் சேர விரும்பும் சட்டப் பள்ளி, குறைந்தபட்சம் ஒரு அகடமிக் ஜர்னலையாவது வெளியிடுகிறதா என்பதைப் பார்க்க வேண்டும். அந்த சட்டக் கல்வி நிறுவனத்தின் Law review -ன் நகலை கேட்க வேண்டும். அந்த கல்வி நிறுவனத்தின் அகடமிக்ஸ் பற்றி அதன் தரம் அதிகம் பேசும்.
மேலும், குறிப்பிட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ச்சியாக ஏதேனும் ஆராய்ச்சி பேப்பர் வெளியிடுகிறார்களா என்பதையும் பார்க்க வேண்டும். சட்டக் கல்வி நிறுவனங்களைப் பற்றி தெரிந்துகொள்ள ஒரு கூகுள் தேடலையும் மேற்கொள்ளலாம்.
மாணவர் திருப்தி
உங்கள் நண்பர், நண்பரின் நண்பர் அல்லது உறவினர் என்ற முறையில் யாரேனும் ஒருவர், நீங்கள் படிக்க விரும்பும் சட்டப் பள்ளியில் படித்துக் கொண்டிருப்பார் அல்லது ஏற்கனவே படித்து முடித்திருப்பார். அந்த குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தைப் பற்றி விசாரிக்க இவரை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
அந்தக் குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தின் சாதனைகள், மாணவரின் அறிவு முன்னேற்றம் மற்றும் இதர சாதனைகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், வசதிகள், பேராசிரியர்களின் தரம், உள்கட்டமைப்பு வசதி மற்றும் பாடத்திட்டத்தை தாண்டிய பல்வேறு நடவடிக்கைகள் உள்ளிட்ட ஏராளமான விஷயங்களைப் பற்றி நீங்கள் விசாரித்து அறிந்துகொள்ளலாம்.
கிளீனிக்கல் ப்ரோகிராம்கள்
நீங்கள் படிக்க விரும்பும் சட்டப் பள்ளியில் தரமான கிளீனிக்கல் லீகல் ப்ரோகிராம்கள் மற்றும் லீகல் எய்ட் கிளீனிக்ஸ் போன்றவை சிறப்பான செயல்பாட்டில் உள்ளனவா என்பதைப் பற்றி விசாரிக்க வேண்டும். ஏனெனில் இத்தகைய அம்சங்கள், உங்களுக்கு நேரடி நடைமுறை சட்ட அனுபவத்தை தரக்கூடியவை.
மேற்கூறிய ஆய்வு மையங்கள் வெறுமனே அறிவிப்பில் மட்டுமே இருப்பவையா அல்லது உண்மையில் செயல்பாட்டில் இருப்பவையா என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். அந்த ஆராய்ச்சி மையங்களின் ரிசர்ச் ரிப்போர்ட்டுகள் அல்லது வெளியீடுகள் அல்லது குறைந்தபட்சம் நியூஸ் லெட்டர்களையாவது கேட்க வேண்டும்.
மேற்கூறிய ஆராய்ச்சி மையங்களுக்கு தலைமை தாங்கும் ஆசிரியர்களின் தகுதி மற்றும் திறமை குறித்து அறிய முயற்சிக்க வேண்டும்.
வளாகத்தைப் பார்வையிடல்
வெறுமனே இணையதளம் மற்றும் பேப்பர் தரவுகளின் மூலம் மட்டுமே ஒரு சட்டப் பள்ளியை மதிப்பீடு செய்யாமல், அங்கே நேரிலேயே சென்று அதன் வளாகத்தில் சுற்றி வர வேண்டும். அங்கே எது மாதிரியான சூழல் நிலவுகிறது, என்ன மாதிரியான கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன மற்றும் அதன் உள்கட்டமைப்பு வசதிகள் எவ்வாறு இருக்கின்றன என்பதை கண்கூடாக காண வேண்டும்.
மேலும், அங்கே நடைபெறும் வகுப்பறை சாராத நடவடிக்கைகள் பற்றியும், மாணவர் அமைப்புகள் பற்றியும் விசாரித்து அறியவும் மற்றும் மாணவர்களுடனும் உரையாடலாம்.
