sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

வெற்றிக்கான பாதை எப்போதும் எளிதான ஒன்றல்ல...

/

வெற்றிக்கான பாதை எப்போதும் எளிதான ஒன்றல்ல...

வெற்றிக்கான பாதை எப்போதும் எளிதான ஒன்றல்ல...

வெற்றிக்கான பாதை எப்போதும் எளிதான ஒன்றல்ல...


பிப் 13, 2015 12:00 AM

பிப் 13, 2015 12:00 AM

Google News

பிப் 13, 2015 12:00 AM பிப் 13, 2015 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழ்க்கையில் சாதனைப் படைத்தவர்களின் கதைகளைப் படிக்கும்போது, அவர்களது வாழ்க்கையில், ரிஸ்க் என்ற ஒரு அம்சம் கட்டாயம் இடம்பெற்றிருப்பதை காணலாம்.

வெற்றிக்கான வழி என்பது யாரேனும் ஒரு சிலருக்கு சுலபமாக இருந்திருக்கலாம். ஆனால், பொதுவாக அந்த வழியானது, பல்வேறு தடைகளும், கரடு முரடான அம்சங்களும், இடைஞ்சல்களும், அபாயங்களும் கொண்டது. எனவே, அந்த வழியில் பயணிப்போர், கட்டாயம் ஏதேனும் ஒரு ரிஸ்க் எடுத்தாக வேண்டியுள்ளது.

பணிபுரியும் ஒருவர், வெற்றிக்கான பாதையை, தடைகளை தகர்த்தெறித்து, எப்படி முழுமையாக கடந்து சாதிக்கலாம் என்பதை இக்கட்டுரை அலசுகிறது.

புதிய செயல்முறைகள்

உங்களின் செயல்பாட்டில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் அணுகுமுறைகளையே பின்பற்ற நீங்கள் விரும்பலாம். அந்த வகையில், நீங்கள் பாதுகாப்பாகவும் உணரலாம். எதற்காக, தேவையின்றி அணுகுமுறைகளை மாற்றி, ரிஸ்க் எடுக்க வேண்டுமென்ற நினைப்பு வருவது சாதாரணம்தான்.

ஆனால், வாழ்வில் வெற்றிபெற வேண்டுமென நினைக்கும் ஒருவர், சில புதிய வழிமுறைகளைப் பற்றி யோசிக்க வேண்டும். பலரும் பின்பற்றி, பழக்கப்பட்டு, அதனாலேயே எதையும் புதிதாக சாதிக்க முடியாமல் போன பழையவற்றை விடுத்து, புதிய அணுகுமுறைகளைக் கடைபிடிக்கத் துணிய வேண்டும்.

அதற்காக, எடுத்தோம் - கவிழ்த்தோம் என்று எதிலும் இறங்கிவிடக்கூடாது. உங்களின் புதிய அணுகுமுறையைப் பற்றி ஒன்றுக்கு பலமுறை நன்கு யோசித்து திட்டமிட்டே, பின்னர் களமிறங்க வேண்டும். அப்போதுதான் வெற்றிக்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகும்.

எல்லையை விட்டு வெளியேறுதல்

ஒரு நிறுவனத்தில் பணிபுரிகையில், உங்களுக்கான பணியைப் பற்றி நன்கு அறிந்துவைத்து, அதில் சிறப்பாக செயல்படுவது முக்கியமான அடிப்படை. ஆனால், நீங்கள் பெரியளவில் பதவி உயர்வையும், சிறந்த பொறுப்புகளையும் எதிர்பார்க்கும்போது, உங்களது பணியில் மட்டுமே கவனம் செலுத்தி, அதை மட்டுமே தெரிந்து வைத்துக்கொண்டு, உங்களைச் சுற்றி, நிறுவனத்தில் நடக்கும் வேறு விஷயங்களைப் பற்றி எதுவும் தெரியாமல் இருந்தால், உங்களுக்கான வருங்கால வாய்ப்புகள் சுருக்கமாகத்தான் இருக்கும்.

எனவே, நிறுவனத்திலுள்ள வேறு துறை பணிகளைப் பற்றியும் தேவையான அளவிற்கு அறிமுகத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான், பதவி உயர்வு என்று வருகையில், உங்களுக்கான வாய்ப்புகளை பிரகாசப்படுத்திக் கொள்ளலாம்.

முன்முயற்சி

வெற்றிபெற்ற மனிதர்களுக்கு கட்டாயம் தலைமைத்துவப் பண்பு இருக்கும். ஒரு தலைவனாக இருப்பதற்கு மிக முக்கியமான மற்றும் தலையாயப் பண்பு என்னவெனில், முன்முயற்சி(initiative) என்ற ஒன்றுதான். எனவே, உங்களின் கோட்டைத் தாண்டி முதலில் வெளியேவர வேண்டும். ஒரு செயலில், தயக்கத்தை விடுத்து, முன்முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

சூழலுக்கு ஏற்ற ஐடியாக்களை உருவாக்கி, அதை பொருத்தமான இடங்களில் பயன்படுத்தி, உங்களின் செயல்பாட்டுத் திறனை வெளிப்படுத்த வேண்டும். இதன்மூலம், பிறரைவிட உங்களின் வெற்றிப் பயணம் வேகம் பெற்று, இலக்கை விரைவாக அடைந்து சிறப்பான வெற்றியைப் பெறலாம்.

தயக்கம் வேண்டாம்

உங்களின் ஐடியாக்கள் மற்றும் கருத்துக்கள் தொடர்பாக தெளிவாக இருங்கள். நிறுவனத்தில், உங்களின் மேலதிகாரி அல்லது நிர்வாக இயக்குநர், உங்களது செயல்திட்டம் பற்றி கேட்கும்போது, அதை சிறப்பான முறையில் வெளிப்படுத்த தயங்க வேண்டாம். அது ஏற்கப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? அல்லது குறுக்கு கேள்வி கேட்கப்படுமா? என்பன போன்ற சந்தேகங்கள் உங்களுக்கு வேண்டாம்.

சாதனையாளர்களின் வெற்றிக்கு மிக முக்கிய காரணங்களுள் ஒன்று, அவர்கள், தங்களது எண்ணங்களை நம்பிக்கையுடன், தயக்கமின்றி மற்றும் தெளிவாக வெளிப்படுத்தியதேயாகும். இந்தப் பண்பின் மூலம், நமது கருத்து, ஒருவேளை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும்கூட, நம்மீது நேர்மறையான அபிப்ராயம் கட்டாயம் ஏற்படும். நாம், வேறு ஏதேனும் ஒரு சூழலில், நமது கருத்துக்களைத் தெரிவிக்க மீண்டும் அழைக்கப்படுவோம்.

தோல்விதான் வெற்றியின் அடிப்படை

ஒருவர் ஒரு புதிய முன்முயற்சியை மேற்கொண்டு, மாற்று வழியில் பயணிக்கிறார் எனும்போது, அவருக்கு எல்லா நேரங்களிலும் உடனடியாக வெற்றி கிடைத்து விடுவதில்லை. தோல்விகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

ஆனால், அதோடு சோர்ந்துவிட்டால் அவ்வளவுதான். தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, தவறுகளை திருத்தி, மீண்டும் முயற்சி செய்யும்போது, கட்டாயம் வெற்றிக் கனியை சுவைக்கலாம். மேற்கண்ட அம்சங்களைத் தவிர, ஒருவர், தனது பணியில் முன்னேறிச் செல்ல, வேறுசில விஷயங்களையும் கருத்தில்கொண்டு, அதற்கேற்ப முடிவெடுக்க வேண்டும்.

ஒருவர் ஒரு பணியில் நல்ல சம்பளம் பெற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால், அவர் எதிர்பார்த்ததைப் போன்று அவரின் பணி அமையாமல் போகலாம். மேலும், அவர் பணிபுரியும் நிறுவனத்தின் எதிர்காலமும், தொழில்துறையைப் பொறுத்தமட்டில், நீண்டகால அளவில், நிச்சயமற்று இருக்கலாம். எனவே, இதுபோன்ற சூழலில், நீங்கள் நல்ல சம்பளம் பெற்று பாதுகாப்பாக இருந்தாலும்கூட, பணி மாறுகின்ற ரிஸ்க் எடுக்கலாம்.

உங்களின் ரிஸ்க், உங்களுக்கு சாதகமாக அமையும்போது, நன்மைகளையும், அதுவே பாதகமாக அமைந்தால், அனுபவங்களையும் பெறலாம். அதேசமயம், அனுபவம் என்பதும் ஒரு வயது வரைதான். எல்லா காலங்களிலும் அபாயகரமான ரிஸ்க் எடுத்துக் கொண்டிருக்கவும் முடியாது.

ஒரு குறிப்பிட்ட வயதை அடைவதற்குள், வாழ்க்கையில், தொழில்ரீதியாகவும், வருமான ரீதியாகவும் ஒரு அளவிற்கு செட்டில் ஆகிவிட வேண்டும். செட்டிலான பிறகு எடுக்கும் ரிஸ்க் வேறு மாதிரியானது.

எனவே, வாழ்க்கையில் வெற்றி என்பது, பெரும்பாலானோருக்கு எளிதாக கிடைத்து விடுவதில்லை. அப்படி சில பேருக்கு எளிதாக கிடைத்துவிட்டாலும், அதை தொடர்ந்து தக்கவைக்க, அவர் கடும் முயற்சிசெய்ய வேண்டும். எனவே, தேவையான இடங்களில் தேவையான ரிஸ்க் எடுத்து, புதிதாக யோசித்து, கடுமையாக உழைத்து, இலக்கை அடையவும்.






      Dinamalar
      Follow us