கல்வி கட்டணம் செலுத்தாததால் மாணவர்களை வேனில் ஏற்ற மறுப்பு: பள்ளியா... பைனான்ஸ் கம்பெனியா? முற்றுகையிட்டு பெற்றோர் ஆவேசம்
கல்வி கட்டணம் செலுத்தாததால் மாணவர்களை வேனில் ஏற்ற மறுப்பு: பள்ளியா... பைனான்ஸ் கம்பெனியா? முற்றுகையிட்டு பெற்றோர் ஆவேசம்
UPDATED : செப் 30, 2026 06:02 PM
ADDED : செப் 30, 2026 06:03 PM
பல்லடம்:
கல்வி கட்டணம் கட்டவில்லை என்று கூறி, குழந்தைகளை வேனில் ஏற்றிச் செல்ல மறுத்ததால், ஆவேசமடைந்த பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர்.
பல்லடத்தை அடுத்த, அருள்புரம், தண்ணீர் பந்தல் பஸ் ஸ்டாப்பில், 'இந்தியன் பப்ளிக் பள்ளி' என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படிக்கின்றனர். நேற்று காலை, கல்விக்கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி, குழந்தைகள் சிலர் வேனில் அழைத்துச் செல்லப்படவில்லை. இதனால், ஆவேசமடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
இது குறித்து பெற்றோர் சிலர் கூறியதாவது:
கல்வி கட்டணம் கட்டவில்லை எனில், பெற்றோரை தொடர்பு கொண்டு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், இ-மெயில் அனுப்பியுள்ளதாக கூறி, குழந்தைகளை வேனில் ஏற்றிச் செல்ல மறுத்துவிட்டனர். நாடு தற்போதுள்ள சூழலில், குழந்தைகளை இப்படி ரோட்டிலேயே விட்டுச் செல்லலாமா? குழந்தைகள் பள்ளிக்குச் சென்று விட்டார்கள் என்று நாங்கள் நினைத்திருந்த சூழலில், வேனில் ஏற்றவில்லை என்பது பின்னர்தான் தெரியவந்தது.
இ-மெயில் பயன்படுத்துபவர்கள் மட்டுமே இப்பள்ளியில் அட்மிஷன் பெற வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது. குழந்தைகளை ஏன், வேனில் ஏற்றிச் செல்லவில்லை என்று கேட்டால், மிகவும் கூலாக, எங்களுக்கு வகுப்பு உள்ளது என்று பதில் கூறிச் செல்கின்றனர். கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி, பள்ளி நிர்வாகம் இப்படி செயல்படுவது வேதனை அளிப்பதுடன், இது பள்ளியா? பைனான்ஸ் கம்பெனியா என்ற கேள்வி எழுகிறது.
இவ்வாறு அவர்கள் ஆவேசமாக கூறினர்.
இந்நிலையில், பள்ளி நிர்வாக அலுவலரின் அலட்சியமான பதிலை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இன்று பள்ளி முன் போராட்டம் நடத்தப்போவதாக பெற்றோர்கள் அறிவித்துள்ளனர்.
