விடைத்தாள் திருத்தும் பணியை தேர்தலுக்கு முன்பே முடிக்க வேண்டும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்
விடைத்தாள் திருத்தும் பணியை தேர்தலுக்கு முன்பே முடிக்க வேண்டும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்
UPDATED : மார் 19, 2026 07:12 PM
ADDED : மார் 19, 2026 07:15 PM
விருதுநகர்:
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏப்., 20 வரை திட்டமிடப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் தேதி ஏப்., 23 என அறிவிக்கப்பட்டிருப்பதால், ஒரு வாரத்திற்கு முன்பாகவே முடிக்கும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும், என தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் வலியுறுத்தினார்.
அவர் கூறியதாவது:
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் துவங்க கால அட்டவணை வெளியிடப்பட்டு ஏப்., 20 வரை திருத்தும் பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநில சட்டசபை தேர்தல் தேதி ஏப்., 23 என அறிவிக்கப்பட்டிருப்பதால் அட்டவணையை ஒரு வாரத்திற்கு முன்பாகவே முடித்துவிடும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.
ஆசிரியர்கள் விரும்பிய மதிப்பீட்டு மையம் வழங்க வேண்டும். ஆசிரியர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு அதற்கேற்ப விடை தாள்களை அனுப்பி வைக்க வேண்டும். தேர்தல் பயிற்சிகளிலும் ஈடுபட வேண்டி இருப்பதால், அதனை கருத்தில் கொண்டு வழிகாட்டுதல் ஆணை வெளியிட வேண்டும்.
மதிப்பீட்டு பணியும், தேர்தல் பயிற்சி பணியும் இணைந்து வாரத்தின் 7 நாட்களும் வேலை நாளாக அமைந்தால் அது தொடர்ச்சியாக 15 வேலை நாட்களாக மாறிவிடும். மதிப்பீட்டு பணியின் போது வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
திருத்தும் மையங்களில் அடிப்படை வசதிகள், போதுமான இருக்கைகள், பயண வசதி உள்ளிட்டவற்றை உறுதி செய்ய வேண்டும்.
துாரத்தை கணக்கில் கொள்ளாமல் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் அனைத்து முதுகலை ஆசிரியருக்கும் உரிய பயணப்படி வழங்க வேண்டும், என்றார்.

