மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திய பள்ளி தலைமை ஆசிரியர் வீடுகள் தோறும் குட்டி நுாலகம் திறப்பு
மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திய பள்ளி தலைமை ஆசிரியர் வீடுகள் தோறும் குட்டி நுாலகம் திறப்பு
UPDATED : ஏப் 12, 2026 11:25 AM
ADDED : ஏப் 12, 2026 11:26 AM
மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என, அரசு பள்ளி தலைமை ஆசிரியர் எடுத்த முயற்சி பயன் அளித்துள்ளது. இதற்கு மற்ற ஆசிரியர்கள், பெற்றோர் மத்தியில் வரவேற்பு கிடைத்து உள்ளது.
கொப்பால் மாவட்டம் குஷ்டகி தாலுகாவில் உள்ளது மத்னல் கிராமம். இந்த கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஷரணப்பா துமரிகொப்பா.
இவர் மாணவர்களிடம் எப்படியாவது வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என, போராடி வருகிறார். அதற்காக, பல முயற்சிகளையும் செய்து வருகிறார்.
முதற்கட்டமாக, பள்ளி வளாகத்தில் புதிதாக சிறிய அளவிலான நுாலகத்தை திறந்தார். இதை அமைப்பதற்கான நிதியுதவியை கிராமத்தினர் மூலமே பெற்றார். இந்த நுாலகத்தில் சிறுவர்களுக்கான புத்தகங்களை வாங்கி குவித்தார். படங்கள் அதிகமாகவும், எழுத்துகள் குறைவாகவும் இருப்பது போன்ற புத்தகங்களை தேர்வு செய்தார்.
கிட்டிய வெற்றி
நீதிக்கதைகள் சார்ந்த புத்தகங்களை, தினமும் வகுப்பறையில் மாணவர்களிடம் தலைமை ஆசிரியர் ஷரணப்பா வாசித்து காண்பிப்பார். இதன் மூலம், மாணவர்களுக்கு வாசிப்பின் மீதான ஆர்வத்தை துாண்டினார். அதன்பின், மாணவர்களும் புத்தகங்களை படிக்க துவங்கினர். இருப்பினும், ஷரணப்பா ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். இதற்காக, ஒவ்வொரு வீட்டிலும், 'குழந்தைகள் நுாலகம்' எனும் திட்டத்தை துவக்கினார்.
இத்திட்டத்தின்படி, பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவர் வீட்டிலும் சிறிய நுாலகம் அமைக்க வேண்டும். அதற்கு பெற்றோர் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பிரசாரம் செய்தார். இதற்கு மாணவர்களின் பெற்றோரும் அமோக ஆதரவு தந்தனர். தற்போது, மத்னல் கிராமத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட மாணவர்களின் வீட்டில் சிறிய நுாலகங்கள் உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள நுாலகங்களில், 30க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.
கொண்டாட்டம்
தற்போது, பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் மாணவர்கள் மொபைல் போன் உபயோகிப்பதற்கு பதிலாக புத்தகங்களை படிக்க துவங்கி உள்ளனர். இது, பெற்றோரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், தலைமை ஆசிரியர் ஷரணப்பாவை பெற்றோர் தலை மேல் துாக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.
இது குறித்து, தலைமை ஆசிரிய ர் ஷரணப்பா கூறியதாவது:
மாணவர்கள் தங்கள் பாடப்புத்தகங்களை கடந்து, கலை, இலக்கியம் சார்ந்த புத்தகங்களை படிக்க வேண்டும். அப்போது, தான் அவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தின் மீது ஆர்வம் ஏற்படும். வாசிக்க துவங்கினால், மொபைல் போனை மறந்து விடுவர். இதனால், ஒவ்வொரு மாணவரின் வீட்டிலும் சிறிய அளவிலான நுாலகம் திறக்கப்பட்டு உள்ளது.
தற்போது, மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோரும் புத்தகங்களை வாசிக்கின்றனர். இன்னும், 100 மாணவர்களின் வீடுகளில் நுாலகங்களை திறக்க இலக்கு நிர்ணயம் செய்து உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

