ஏழை மாணவர்களின் கனவுகளுக்கு தோள் கொடுக்கும் முன்னாள் மாணவர்கள் பாத்திமா பள்ளியில் நெகிழ்ச்சியான கல்வி தொண்டு
ஏழை மாணவர்களின் கனவுகளுக்கு தோள் கொடுக்கும் முன்னாள் மாணவர்கள் பாத்திமா பள்ளியில் நெகிழ்ச்சியான கல்வி தொண்டு
UPDATED : ஜூலை 11, 2026 05:05 PM
ADDED : ஜூலை 11, 2026 05:08 PM
புதுச்சேரி:
பாத்திமா அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும், பொருளாதார ரீதியாக ஏழ்மையில் உள்ள மாணவர்களுக்கும் முன்னாள் மாணவர்கள் கல்வி உதவித்தொகை வழங்கினர்.
கருவடிக்குப்பம், பாத்திமா அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், அதே பள்ளியில் மேல்நிலை கல்வியைத் தொடர்வதற்கான கல்வி உதவித்தொகை, கடந்த 2014ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
பாத்திமா பள்ளியின் 1990ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் இதனை ஒருங்கிணைத்து வழங்கி வருகின்றனர். 13வது ஆண்டாக கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நெகிழ்ச்சியில் முதல்வர்
நிகழ்ச்சியில பேசிய பள்ளி முதல்வர் மகிமை, '36 ஆண்டுகளுக்கு முன்பு இதே பள்ளி காலை வழிபாட்டு கூட்டத்தில் மாணவர்களாக நின்ற முன்னாள் மாணவர்கள் இன்று மருத்துவர், பொறியாளர், விஞ்ஞானி, பேராசிரியர் உள்ளிட்ட உயரிய நிலைகளை அடைந்திருந்தாலும், தங்களை உயர்த்திய ஏணியாக விளங்கிய பள்ளியையும், ஆசிரியர்களையும் மறக்காமல், தற்போதைய மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது பாராட்டத்தக்கது' என்றார்.
பொருளாதார தடையை உடைப்போம்
முன்னாள் மாணவரும், பள்ளி கல்வி இயக்கக விரிவுரையாளருமான ஜான் போஸ்கோ பேசுகையில், 'வழக்கமாக வழங்கப்படும் பத்தாம் வகுப்பு முதல் நிலை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையுடன், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் பிளஸ் 1 வகுப்பில் கல்வி பயிலும் மேலும் ஐந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை இந்தாண்டு வழங்கப்படுகிறது. எங்கள் பள்ளியை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்.
எப்போதும் பள்ளிக்கும், மாணவர்களுக்கும் துணையாக இருப்போம். மாணவர்கள் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும்' என்றார்.
உதவி தொகையுடன் பாராட்டு
பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் கவியரசன், அதிகைநாதன், கிருபாநிதி, பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த அப்துல் ரகுமான், ரித்திஷ், பிரிவிந்தாஸ், லட்சுமணன் மற்றும் இவர்களுடன் பொருளாதார ரீதியாக ஏழை மாணவர்கள் ஐந்து பேர் என, மொத்தம் 90 ஆயிரத்திற்கு கல்வித் தொகை வழங்கப்பட்டது. பள்ளி முதல்வர் மகிமை, முன்னாள் மாணவர்கள் இணைந்து வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர்.
எங்களின் ஏணியே இது தான்
விழாவில் மேடையேறி ஒவ்வொரு முன்னாள் மாணவர்களும், நாங்கள் இன்று மருத்துவர், பொறியாளர், விஞ்ஞானி என, உலகளவில் உயர்ந்த இடங்களில் இருக்கலாம். ஆனால், இந்த இடத்திற்கு எங்களை உயர்த்திய ஏணி இந்த பள்ளிதான் என்று பேசியது, அங்கிருந்த அனைவரையும் நெகிழ வைத்தது.
உலகம் முழுதும் இருந்து ஆதரவு
இக்கல்வி உதவித்தொகைத் திட்டத்திற்கு ஆஸ்திரேலியாவில் பணியாற்றும் மனநல மருத்துவர் வைத்திநாதன், ஹைதராபாத்தில் இன்பிர்ம் டெக்னாலஜீஸ் நிறுவன இயக்குநர் சத்யநாராயணன், அமெரிக்காவில் பணியாற்றும் பொறியாளர்கள் ராஜபிரசாத், சீதாராமன், சங்கரதாஸ், இங்கிலாந்தில் பணியாற்றும் டாக்டர் ஸ்ரீதர், அமெரிக்காவில் பணியாற்றும் பேராசிரியர் ஆண்ட்ரூஸ் மற்றும் 1990-ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் தங்களது பொருளாதார ஆதரவை அளித்து ஒருங்கிணைத்தனர்.
ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்களான சிவில் இன்ஜினியர் மேத்யூஸ் ஆரோக்கியசாமி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் தணிகைவேல், பள்ளி கல்வி இயக்கக விரிவுரையாளர் ஜான் போஸ்கோ செய்திருந்தனர்.
இலக்கை நோக்கி உழைக்க வேண்டும்
பாத்திமா பள்ளி எங்களுக்கு கல்வியை மட்டுமல்ல, வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் மனிதநேயத்தையும் கற்றுக் கொடுத்தது. இன்றைக்கு நாங்கள் சமூகத்தில் பல்வேறு உயரிய பொறுப்புகளில் இருப்பதற்கு இந்தப் பள்ளியும், எங்களை வழிநடத்திய ஆசிரியர்களும் அடித்தளமாக உள்ளனர். அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் ஒரு சிறிய முயற்சிதான் இந்தக் கல்வி உதவித்தொகைத் திட்டம்.
பொருளாதாரக் காரணங்களால் எந்த மாணவரும் தங்களது கல்வியை பாதியில் நிறுத்தக் கூடாது என்பதே எங்களின் நோக்கம். இந்த உதவித்தொகை மாணவர்களுக்கு பொருளாதார உதவியை மட்டுமல்லாமல், உயர்ந்த இலக்குகளை நோக்கி உழைக்க வேண்டிய ஊக்கத்தையும் அளிக்க வேண்டும். தணிகைவேல், உதவி பொறியாளர், பொதுப்பணித்துறை, புதுச்சேரி.
