நீட் தேர்வு இல்லாத மருத்துவ படிப்புகள் ஏராளம்; கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா விளக்கம்
நீட் தேர்வு இல்லாத மருத்துவ படிப்புகள் ஏராளம்; கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா விளக்கம்
UPDATED : மார் 31, 2025 12:00 AM
ADDED : மார் 31, 2025 09:31 AM

புதுச்சேரி:
நீட் தேர்வு இல்லாத மருத்துவ படிப்புகள் ஏராளமாக உள்ளதாக, கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா பேசினார்.
தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
இணையதளத்தில் கிடைப்பது தகவல் தானே தவிர, அறிவு அல்ல. மாணவர்கள் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் என்ன படிக்க வேண்டும் என்பது குறித்து பெற்றோர்கள், அவர்களிடம் பேச வேண்டும். பெற்றோர்கள், குழந்தைகளை இதை தான் படிக்க வேண்டும் என திணிக்கக்கூடாது.
திறமையோடு படித்தால் வேலை கிடைக்கும். எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு தான் நீட் தேவை. ஆனால், நீட் தேவையில்லாத பி.என்.ஒய்.எஸ்., என்ற மருத்துவ படிப்பு உள்ளது.
நீட் தேர்விற்கு பிறகு அதிகம் நபர்கள் வெளிநாடுகளில் சென்று மருத்துவம் படிக்கின்றனர். ஆனால், இந்தியாவில் மருத்துவ படிப்பு என்பது உயர்தரம் வாய்ந்தது. வெளிநாடுகளில் படித்தாலும், இந்தியாவில் தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்றால் மட்டுமே மருத்துவம் பார்க்க முடியும். ஆனால், இத்தேர்வில் 20 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர்.
நீட் அறிவு சார்ந்தது இல்லை. பயிற்சி சார்ந்தது. நீட் தேர்வு தற்கொலை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. நாம் நீட்டிற்காக பிறந்தோமா. தற்கொலை செய்து கொண்டால் குடும்பத்தின் நிலை என்ன. தற்கொலை முடிவிற்கு செல்லக்கூடாது. ரிப்பீட்டர்ஸ் எழுதுவோர் தான் விரக்தியில் தற்கொலை நடக்கிறது. அதிலும் பெண்கள் தற்கொலை தான் அதிகம். பெண்கள் தான் அதிகம் நீட் தேர்வு எழுதுகின்றனர்.
நீட் தேவையில்லாத மருத்துவ படிப்புகள் ஏராளமாக உள்ளது. அதில் சேர்ந்து படிக்கலாம். மேலும், மருத்துவ துறையில் 30 வகையான பி.எஸ்சி., படிப்புகள் உள்ளது. நீட் தேர்விற்கு பிறகு கால்நடை மருத்துவத்துறை, வேளாண் பல்கலைக்கழகங்களில் அதிக விண்ணப்பங்கள் வருகிறது. மீன்வள பல்கலையில் உள்ள பாடப்பிரிவுகளில் சேர்ந்து படிக்கலாம்.
பொறியியல் துறையில் ஜே.இ.இ., மெயின் தேர்வு எழுதி என்.ஐ.டி.,யில் சேரலாம். அண்ணா பல்கலை கவுன்சிலிங்கில் நல்ல கல்லுாரிகளை தேர்வு செய்து படித்தால், நல்ல கல்வி கிடைக்கும். பொறியியலில் கடந்த 3 ஆண்டுகளாக சி.எஸ்.சி., ஐ.டி., இ.சி.இ., இ.இ.இ., மற்றும் ஆட்டோ மொபைல், கெமிக்கல் உள்ளிட்வைகளை அதிகம் விரும்பி படிக்கின்றனர்.
அதேபோன்று, சட்டம் சார்ந்த படிப்புகளை படிக்கலாம். தமிழக பைன் ஆர்ட்ஸ் பல்கலையில் உள்ள பெயிண்ட், விஷூவல் கம்யூனிகேஷன் உள்ளிட்ட ஏராளமான பாடப்பிரிவுகளில் சேர்ந்து படிக்கலாம்.
கலைக்கல்லுாரிகள், விளையாட்டு பாடப்பிரிவுகள், மீடியா துறை சார்ந்த படிப்புகள், பைலட் பயிற்சி, விமான பணிப்பெண் ஆகியவற்றில் சேர்ந்து படித்து வேலைக்கு செல்லலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.