கல்வி ஒன்றே கடைசி வரை நம்மை காப்பாற்றும் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் கலெக்டர் பேச்சு
கல்வி ஒன்றே கடைசி வரை நம்மை காப்பாற்றும் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் கலெக்டர் பேச்சு
UPDATED : ஆக 25, 2025 12:00 AM
ADDED : ஆக 25, 2025 08:30 AM
ராசிபுரம்:
''கல்வி ஒன்றே கடைசி வரை நம்மை காப்பாற்றும் என்ற ஒரே நோக்கத்துடன் மாணவ, மாணவியர் உயர்கல்வி பயில்வதற்கு முன்வர வேண்டும்,'' என, உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில், கலெக்டர் துர்காமூர்த்தி பேசினார்.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த பாச்சல், ஞானமணி தொழில் நுட்ப கல்லுாரியில், தமிழக திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், உயர்வுக்கு படி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் துர்காமூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது:
தமிழக முதல்வரின், 'நான் முதல்வன்' திட்டத்தில், உயர்வுக்கு படி-2025' நிகழ்ச்சியானது, உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது. உயர்கல்வியில், 2022-23ல், 88 சதவீதம், 2023-24ல், 94 சதவீதம் மாணவர்கள் சேர்க்கை பெற்று, கல்லுாரிகளில் பயின்று வருகின்றனர். 2023-24ம் கல்வியாண்டில், 471 மாணவர்கள், 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில், தொழில் சார்ந்த படிப்புகளில் சேர்ந்துள்ளனர். 2024-25ம் கல்வியாண்டில், 9,470 மாணவ, மாணவியர்களில், 8,727 மாணவர்கள் தற்போது, உயர்கல்வி சேர்க்கை பெற்றுள்ளனர். இம்மாணவர்களில், 445 பேர், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தொழிற்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். 45 மாணவர்கள், இந்திய முதன்மை கல்வி நிறுவனங்களில் சேர்ந்து அரசு நிதி உதவியுடன் பயின்று வருகின்றனர்.
இந்த கல்வியாண்டில், 743 மாணவர்கள் இன்னும் உயர் கல்வியில் சேர வேண்டியுள்ளது. முதற்கட்டமாக, இன்று நாமக்கல் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இதுவரை சேர்க்கை பெறாத மாணவர்களுக்கு சேர்க்கை பெற தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவ, மாணவியர் தங்களது தகுதியை மேம்படுத்திக்கொள்ள கட்டாயம் உயர்கல்வி பயில வேண்டும். குறிப்பாக பெற்றோர் அல்லாத மாணவர்கள், பின்தங்கிய மாணவர்கள் தவிர்க்க இயலாத காரணங்களால், கல்வியை தொடர முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் படித்த, 33 மாணவ, மாணவியர், பல்வேறு அனைத்திந்திய தேர்வுகள் மூலம், இந்தியாவில் உள்ள தலைச்சிறந்த கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில்வதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 'கல்வி ஒன்றே கடைசி வரை நம்மை காப்பாற்றும்' என்ற ஒரே நோக்கத்துடன் மாணவ, மாணவியர் உயர்கல்வி கல்வி பயில்வதற்கு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடந்த உயர்வுக்கு படி வழிகாட்டி நிகழ்ச்சியில், 101 மாணவ, மாணவியர்களில், 35 பேருக்கு, உயர் கல்வியில் சேருவதற்கு தேர்வு செய்யப்பட்டனர்.
தனித்துணை கலெக்டர் பிரபாகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.