இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் பொறுப்பு இளைஞர்களிடம் உள்ளது: அமைச்சர் ஜிதேந்திர சிங்
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் பொறுப்பு இளைஞர்களிடம் உள்ளது: அமைச்சர் ஜிதேந்திர சிங்
UPDATED : மார் 02, 2026 08:25 PM
ADDED : மார் 02, 2026 08:26 PM
திருவனந்தபுரம்:
“நம் நாட்டை, 2047க்குள் வளர்ந்த நாடாக மாற்றும் பொறுப்பு நம் இளைஞர்களின் கைகளில் தான் இருக்கிறது,” என, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
பாரதிய விசார கேந்திரம் அமைப்பின் நிறுவன இயக்குநரும், உலக நாடுகளுக்கு நம் கலாசாரம் மற்றும் தத்துவத்தை கொண்டு சேர்த்த சிறந்த சிந்தனையாளருமான பரமேஸ்வரனின் நினைவு தினத்தையொட்டி, கேரளாவின் திருவனந்தபுரத்தில் ஆண்டுதோறும் சொற்பொழிவு நடக்கிறது.
ஐந்தாவது ஆண்டாக நடந்த நினைவு தின சொற்பொழிவில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசியதாவது:
இளைஞர்களின் நலனை மையமாக வைத்து மத்திய அரசு செயல்படுகிறது. காரணம், 2047க்குள் வளர்ந்த நாடாக நம் நாட்டை மாற்றும் பொறுப்பு, அவர்களிடமே இருக்கிறது. எனவே, தொழில் முனையும் ஆற்றல் கொண்ட இளம் இந்தியாவை உருவாக்குவதற்கு தேவையான வாய்ப்புகள், கட்டமைப்பு வசதிகளை மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது.
நாடு முழுதும் உள்ள கல்வி நிலையங்கள் மற்றும் பல்கலைகளில் ஆய்வு கலாசாரத்தை வலுப்படுத்தும் வகையில், தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வம் மற்றும் புத்தாக்க சிந்தனைகளை துாண்ட, 'அடல் புத்தாக்க திட்டம், அடல் டிங்கரிங் லேப்' கைகொடுத்து வருகின்றன. புத்தாக்க துறையில் வளர்ந்து வரும் சர்வதேச சவால்களை சந்திக்க இந்த முன்னெடுப்புகள் உதவி வருகின்றன.
ஒரு காலத்தில் எலக்ட்ரானிக் வாகனங்களை இறக்குமதி செய்து வந்த நிலை மாறிவிட்டது. எலக்ட்ரானிக் வாகனங்களை சொந்தமாக உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்யும் அளவுக்கு அந்த துறையில் நாம் சுயசார்பு அடைந்துள்ளோம்.
பழைய கல்வி முறையை ஓரங்கட்டிவிட்டு, புதிய தேசிய கல்வி கொள்கை மூலம் மாணவர்களுக்கு பல்துறைகளில் அறிவை வழங்கி வருகிறோம். தொழில்நுட்பம் சார்ந்த உலகியல் சவால்களை எதிர்கொள்ள, நம் மாணவர்களுக்கு புதிய கல்வி முறை உதவும்.
நகரங்களுக்கு மட்டுமே தொழில்நுட்ப வளர்ச்சி சொந்தமானது அல்ல. தற்போது கிராமங்களும் தொழில்நுட்பத்தில் வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருகின்றன. சிறு நகரங்கள், கிராமங்களில் கூட, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முளைக்க துவங்கிவிட்டன. இவ்வாறு பேசினார்.

