மாணவர்களின் கவனம் சிதறாமல் இருக்க வீடுகளில் காய்கறி தோட்டம்: பாலிதீன் பயன்பாட்டை குறைக்க விழிப்புணர்வு
மாணவர்களின் கவனம் சிதறாமல் இருக்க வீடுகளில் காய்கறி தோட்டம்: பாலிதீன் பயன்பாட்டை குறைக்க விழிப்புணர்வு
UPDATED : மே 11, 2026 09:06 PM
ADDED : மே 11, 2026 09:09 PM
மாணவர்களுக்கு சுற்றுச்சூழலை பாதுகாப்பது, மரங்கள் வளர்ப்பதன் அவசியம், பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பற்றி கூற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இவற்றை மாணவர்களிடமிருந்து துவக்கினால் மட்டுமே எதிர்காலத்தில் முழு பலனை அடைய முடியும். ஆனால் மாணவர்கள் அதிக நேரம் அலைபேசி பயன்படுத்துவது, போதை பழக்கங்கள் என திசைமாறிச் செல்கின்றனர்.
இதனை தடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கு மாற்றாக மாணவர்களின் கவனத்தை சிதறாமல் தடுக்க ஒவ்வொரு வீட்டிலும் காய்கறி தோட்டங்கள் அமைத்து, அத்தோட்ட பராமரிப்பில் மாணவர்களை ஈடுபடுத்த பெற்றோர்கள் முன் வர வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் அலைபேசி, போதை பழக்கங்களில் மூழ்குவதை தவிர்க்கலாம். அவர்கள் மன நலன் மேம்படும்.
மாணவர்களிடமிருந்து மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து கற்றுக் கொடுத்தால் மட்டுமே எதிர்கால சந்ததியினர் வாழ முடியும். கடினமாக உழைத்து பணம் சம்பாதிப்பது, சொத்து சேர்ப்பது மட்டும் அடுத்த தலைமுறையினருக்காக செய்ய வேண்டிய கடமை அல்ல. நாம் வாழும் இந்த பூமியை சுத்தமானதாகவும், ஆரோக்கியமாகவும் அவர்களுக்கு தர வேண்டும். அதற்கு நாம் செய்ய வேண்டியது இயற்கை வளங்களை பாதுகாப்பது ஆகும்.
திருப்தி தரும் காய்கறித்தோட்ட பராமரிப்பு
மரங்கள், வேளாண் நிலங்கள் அழிப்பால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. மரங்கள் வெட்டப்படுவதால் பூமி எளிதில் வெப்பமயமாகிறது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. மண் அரிப்பு ஏற்படுகிறது.மழையின் சராசரி அளவு குறைந்து வருகிறது. இவைகளை சமநிலைப்படுத்த மரங்களை அதிகம் வளர்க்க வேண்டும். மரங்கள் வளர்த்தல், வீட்டுத்தோட்டம் அமைத்தல் பற்றி மாணவர்களுக்கு பயிற்சி, விழிப்புணர்வு அளிப்பது அவசியம். வீடுகளில் சிறிய இடங்கள் இருந்தால் கூட காய்கறி தோட்டம் அமைக்கலாம். அதனை பராமரிக்க மாணவர்களை பழக்க வேண்டும். வீட்டில் சிறிய அளவில் காய்கறித்தோட்டம் அமைத்து பராமரிக்கிறேன். இப்பணி எனக்கு திருப்தியை அளிக்கிறது.
- ரில்வான், கல்லுாரி மாணவர், காந்திகிராமம், கூடலுார்.
பாலிதீன் தவிர்ப்போம்
இயற்கை அழிவிற்கு பாலிதீன் பைகள் முக்கிய காரணமாக உள்ளன. இவற்றை பயன்படுத்தவதை தவிர்க்க வேண்டும். மண்பானை, சில்வர் பாத்திரம் போன்றவற்றை உபயோகிக்கலாம். கடைகள், சந்தைக்கு செல்லும்போது கூடைகள், துணி பைகள் உபயோகிக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஒவ்வொருவருடைய கடமையாகும். சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தும் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். பாலிதீன் பைகளை ஒழிப்போம். மாணவர்களிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பது, மரங்கள் வளர்ப்பதின் நன்மைகள் பற்றி வகுப்பில் எடுத்துரைக்கிறேன் என்றார்.
- சீனிவாசன், ஆசிரியர், என்.எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளி, கூடலுார்.
