பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியிடுவதில் இழுபறி ஏன்? ஆசிரியர், பெற்றோர் கேள்வி
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியிடுவதில் இழுபறி ஏன்? ஆசிரியர், பெற்றோர் கேள்வி
UPDATED : மே 14, 2026 09:10 PM
ADDED : மே 14, 2026 09:11 PM

மதுரை:
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் கல்வித்துறை இழுத்தடிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
கடந்தாண்டு ஒரே நாளில் காலை பிளஸ் 2 தேர்வு, மதியம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதனால் மேல்நிலை பள்ளிகளிலும், உயர் கல்வியிலும் மாணவர்கள் சேர்வதற்கு உரிய அவகாசம் இருந்தது.
இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8ல் வெளியிடப்பட்டது. ஆனால் 12 நாட்களுக்கு பின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவை வெளியிட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. ஏன் இந்த இழுபறி? என பெற்றோர், மாணவர்கள் தரப்பில் கல்வி அதிகாரிகள் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:
ஒன்பது லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர். மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்., 15 துவங்கி 20ல் முடிவுற்றது. பிளஸ் 2 போல் பத்தாம் வகுப்புக்கும் தேர்ச்சி முடிவுக்கான பணிகள் முடிவுற்றது.
தி.மு.க., ஆட்சியில் தேர்வு முடிவுகளை சம்பந்தப்பட்ட அமைச்சரே வெளியிடும் வழக்கம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் அமைச்சரின்றி பிளஸ் 2 முடிவுகளை வெளியிட அதிகாரிகள் தயக்கம் காட்டினர். ஆனால் பொறுப்பு கவர்னர் அர்லேகர், 'அமைச்சருக்காக மாணவர்கள் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம்' என ஆலோசனை வழங்கினார்.
இதையடுத்து கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் தலைமையில் மே 8ல் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. ஆனால் அதே நாள் மதியம் அல்லது இரண்டு நாட்களுக்கு பின் பத்தாம் வகுப்புக்கும் முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மே 20ல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதால் விரைவில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி முடிவு வெளியிட்டால் ஐ.டி., பாலிடெக்னிக், பிளஸ் 1 வகுப்பில் குரூப்களை தேர்வு செய்வது குறித்து நிதானமாக முடிவு எடுக்கலாம். தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
