மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதியாளராக இந்தியா மாறுவதை தடுக்க முடியாது: ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்
மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதியாளராக இந்தியா மாறுவதை தடுக்க முடியாது: ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்
UPDATED : மே 25, 2026 06:33 PM
ADDED : மே 25, 2026 06:34 PM
ஷீரடி:
“ஒரு காலத்தில் ஆயுதங்களை இறக்குமதி செய்த இந்தியா, அடுத்த 25 - 30 ஆண்டுகளில் மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதியாளராக மாறுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது,” என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவின் ஷீரடியில் வெடிமருந்து உற்பத்தி தொழிற்சாலையை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். அஹில்யா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த உற்பத்தி பிரிவு, பீரங்கி குண்டுகளை தயாரிப்பதுடன், விண்வெளி துறைக்கும் உறுதுணையாக செயல்படும் என கூறப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
கடந்த காலங்களில், ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடாக இருந்த இந்தியா, அடுத்த 25 - 30 ஆண்டுகளில் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக மாறுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அரசின் தொலைநோக்கு பார்வையும், தனியார் துறையின் புத்தாக்கமும் இணையும் போது, நாடு புதிய உயரங்களை எட்டும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ராணுவ துறை உற்பத்தியில் தனியார் நிறுவனங்களின் பங்கு மிகக் குறைவாக இருந்தது. தற்போது, அது 25 - 30 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதை, மேலும் 50 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
