தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கிராமங்களில் அரசு பள்ளிகளை தரம் உயர்த்தாததால்... ஆதங்கம்! மாணவர் சேர்க்கை சரிவதால் பெற்றோர் தவிப்பு

கிராமங்களில் அரசு பள்ளிகளை தரம் உயர்த்தாததால்... ஆதங்கம்! மாணவர் சேர்க்கை சரிவதால் பெற்றோர் தவிப்பு

கிராமங்களில் அரசு பள்ளிகளை தரம் உயர்த்தாததால்... ஆதங்கம்! மாணவர் சேர்க்கை சரிவதால் பெற்றோர் தவிப்பு


UPDATED : ஜூன் 07, 2026 01:15 PM

ADDED : ஜூன் 07, 2026 01:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 07, 2026 01:15 PM ADDED : ஜூன் 07, 2026 01:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளிப்பட்டு:
தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகள் அரசு பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாணவர் சேர்க்கை குறைந்ததாகக் கூறி, கிராமங்களில் மூடப்பட்டுள்ள அரசு பள்ளிகளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, கல்வியாளர்கள், பெற்றோர் வலிபுறுத்தி வருகின்றனர்.

அதனால், சரிந்து வரும் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்க, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகளுடன் அரசு பள்ளிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆங்கில வழிக்கல்வி, ஸ்மார்ட் வகுப்பறை, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ மாணவியர் உயர்கல்விக்கென சிறப்பு கோச்சிங் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதனால், தனியார் பள்ளிகளில் சேர்க்கை நடப்பது போல், அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை இந்தாண்டு அதிகரித்துள்ளது.

அரசு பள்ளிகளை நோக்கி பெற்றோர் படையெடுக்கும் சம்பவம், திருவள்ளூர், திருத்தணி உள்ளிட்ட நகர பகுதிகளில் மட்டுமே இருப்பதாகவும், கிராமப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகள் பெரியளவில் மாற்றம் செய்யப்படாமலும் உள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, மாணவர்கள் சேர்க்கை கிராம பகுதிகளில் குறைந்துள்ளதால், பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகவும், பழைய பள்ளி கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டடதால், மாணவ, மாணவியர் கல்வி பயில இடநெருக்கடி ஏற்படுவதாகவும், பெற்றோர் மற்றும் கல்வியாளர்களிடம் புகார் உள்ளது.

கல்வியாளர்கள் கூறியதாவது:



திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த 25 ஆண்டுகளில், 84 அரசு தொடக்க பள்ளிகள், மாணவர் சேர்க்கை குறைந்ததால் மூடப்பட்டுள்ளன. இதில் 30 பள்ளி கட்டடங்கள், பழைய கட்டடம் என்பதால், முற்றிலுமாக இடித்து அகற்றப்பட்டுள்ளன.

இதர பள்ளி கட்டடங்கள், பழைய நினைவுகளை சுமந்தபடி இடிந்து விழும் நிலையில் பரிதாபமாக காணப்படுகின்றன.

குறிப்பாக, ஆர்.கே.பேட்டை ஒன்றியம், எஸ்.வி.ஜி.புரம் ஊராட்சிக்கு உட்பட்ட மதுராபுரம் கிராமத்தில் அரசு பள்ளி கட்டடம் இடிக்கப்பட்டு விட்டது. இந்த கிராமத்தில் இதுவரை, பள்ளி கட்டடத்தை அரசு மீண்டும் கட்டித்தரவில்லை.

இந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், அருகில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு சென்று படிக்கின்றனர். மேலும் சிலர், குழந்தைகளின் படிப்புக்காக கிராமத்தை விட்டு வெளியேறி வெளியூர்களில் குடியேறியுள்ளனர்.

இதே போல், பள்ளிப்பட்டு ஒன்றியம், நெடுங்கல் ஊராட்சியில், ஈதலகுப்பம், நொச்சிலி அடுத்த சந்திரசேகராபுரம் ஆகிய கிராமங்களில் தொடக்கப் பள்ளி கட்டடங்கள் செயல்படாமல் பாழடைந்துள்ளன.

கடந்த, 25 ஆண்டுகளில் மக்கள் தொகை உயர்ந்துள்ள நிலையில், இந்த கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகள், மாணவர் சேர்க்கை இல்லாததால் மூடப்பட்டுள்ளன.

தவிர கிராமங்களில் விவசாய நிலங்களும் புதிய மனை பிரிவுகளாக மாற்றப்பட்டு ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு கிராமங்கள் விரிவடைந்துள்ளன. ஆனால், அரசு பள்ளிகளின் எண்ணிக்கை மட்டும், நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், ஆங்கில வழி கல்வி பயில வேண்டும் என, குழந்தைகளை தனியார் பள்ளிகளில் பலரும் சேர்க்க ஆர்வம் காட்டினர்.

ஆனால் தற்போது தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் பல்வேறு வசதிகளும், நலத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆங்கில வழிக்கல்வி, 'ஸ்மார்ட்' வகுப்பறை உள்ளிட்ட வசதிகளும் நடைமுறையில் உள்ளன. இருந்தும், அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை உயரவில்லை.

எனவே, கிராமங்களில் மூடப்பட்டுள்ள அரசு பள்ளிகளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் விதமாக, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாவட்டத்தில் ஒவ்வோர் ஒன்றியத்திலும் நான்கு முதல் ஏழு தொடக்க பள்ளிகள் வரை செயல்படாமல் கைவிடப்பட்டுள்ளன.

'மாணவர் சேர்க்கை குறைந்த பள்ளிகளில், அருகாமை பள்ளிகளில் மாணவர்களை சேர்த்து கல்வி பயில நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது' என்றார்.

கண்காணிப்பு அவசியம் உள்ளூரில், அரசு தொடக்கப் பள்ளிகள் செயல்பாட்டிற்கு வந்தால், குழந்தைகளை வெளியூருக்கு பேருந்துகளில் அனுப்பி படிக்க வைக்க வேண்டிய நிலை ஏற்படாது. 10 கி.மீ., தொலைவில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு, பல ஊர்களுக்கு மணிக்கணக்கில் சுற்றிக்கொண்டு செல்லும் தனியார் பள்ளி வாகனங்களில், குழந்தைகளின் நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

-எம்.வி.மணிகண்டன், பெற்றோர், வங்கனுார்.

வேலையில்லா திண்டாட்டம் தீரும்



அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கல்வித்துறை அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டால், கிராமப்புறங்களில் அரசு பள்ளிகளை மூட வேண்டிய நிலை ஏற்படாது. கூடுதலாக ஆசிரியர்கள் பணியிடங்கள் தோற்றுவிக்க வேண்டிய நிலை உருவாகும்.

இதனால், ஆசிரியர் பட்டய படிப்பு முடித்து விட்டு, பல ஆண்டுகளாக வேலையின்றி தவிக்கும் என் போன்றவர்களின் நிலை மாறும். மேற்கொண்ட பயிற்சிக்கு ஏற்ப கல்விப்பணியில் சேவை செய்ய எங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

- டி.பவித்ரா, அம்மையார்குப்பம்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us