பழங்குடியின உண்டு, உறைவிடப் பள்ளிகளில் நடக்கும் ஊழல் குறித்து புகார் கொடுத்தால் நடவடிக்கை
பழங்குடியின உண்டு, உறைவிடப் பள்ளிகளில் நடக்கும் ஊழல் குறித்து புகார் கொடுத்தால் நடவடிக்கை
UPDATED : அக் 27, 2014 12:00 AM
ADDED : அக் 27, 2014 10:55 AM
சேலம்: "சேலம் மாவட்டத்தில் இயங்கும் பழங்குடியினருக்கான உண்டு உறைவிடப் பள்ளிகளில் நடக்கும் ஊழல் குறித்து புகார் கொடுத்தால், நடவடிக்கை எடுக்கப்படும், என, ஊழல் தடுப்புப்பிரிவு டி.எஸ்.பி., சந்திரமவுலி தெரிவித்தார்.
தமிழ்நாடு செட்டியூல்டு ட்ரைப் மலையாளி பேரவையின், மாநில பொதுக்குழு கூட்டம், சேலத்தில் நடந்தது. சேலம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி., சந்திரமவுலி கலந்து கொண்டு பேசியதாவது: தமிழகத்தில், பழங்குடியினர் மக்கள் மீது, வனத்துறையினர் பொய் வழக்கு போடுவதும், அதேபோல், போலீஸாரும், வழக்கு தொடுக்கும் போக்கு காணப்படுகிறது. வனப்பகுதியில், ஆடு, மாடுகள் மேய்த்ததாக, வழக்கு போட்டு, அபராதம் வசூலிப்பதில், அதிகாரிகள் குறியாக உள்ளனர்.
பழங்குடியின உண்டு உறைவிடப்பள்ளிகளில், 20 பேர் படிக்கும்பட்சத்தில், 50 மாணவ, மாணவியர் படிப்பதாக கணக்குகாட்டி, பல லட்சக் கணக்கில் ஊழல் நடந்து வருகிறது. இது தொடர்பாக, கணக்கெடுப்பு மற்றும் ஆய்வு நடத்தி புகார் கொடுத்தால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். பழங்குடியின மக்கள், ஜாதிச்சான்று கேட்டு விண்ணப்பித்தால், உடனடியாக தருவதில்லை. ஆயிரக் கணக்கில் பணத்தை பிடுங்கவே, அதிகாரிகள், பலமுறை அலைக்கழிக்கின்றனர். இதுபற்றி, எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், நடவடிக்கை உண்டு.
அரசு அலுவலகங்களில், உங்களுக்கு செய்ய வேண்டிய முறையான பணிகளுக்கு, அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், உடனடியாக தகவல் கொடுக்கலாம். உங்களை பற்றிய விவரங்கள், ரகசியம் காக்கப்படும். லஞ்சம் கொடுக்காமலேயே, அரசின் திட்டங்கள், மானியங்கள், சலுகைகள் பெறும் அளவுக்கு, பழங்குடியின மக்கள், விழிப்புணர்வு பெற வேண்டும். அத்தகைய விழிப்புணர்வை, மலையாளி பேரவை ஏற்படுத்த வேண்டும். லஞ்ச அதிகாரிகள் குறித்து, 94450-48877, 94450-48930 ஆகிய மொபைல் எண்ணில், தகவல் தரலாம். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, நமது பாரம்பரிய நிலங்களை மீட்டு பாதுகாப்பதுடன், ஐந்தாவது அட்டவணையை அமல்படுத்துவது, பஞ்சாயத்து விரிவாக்க சட்டம்-1996ஐ அமல்படுத்த வேண்டும். வன உரிமை சட்டம்-2006ஐ நடைமுறை படுத்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

