தினமலர் நாளிதழ் நடத்திய ஜெ.இ.இ., மெயின் மாதிரி நுழைவுத் தேர்வு: மாணவர்கள் உற்சாகம்
தினமலர் நாளிதழ் நடத்திய ஜெ.இ.இ., மெயின் மாதிரி நுழைவுத் தேர்வு: மாணவர்கள் உற்சாகம்
UPDATED : நவ 24, 2014 12:00 AM
ADDED : நவ 24, 2014 12:48 PM
மதுரை: மதுரையில் தினமலர் நாளிதழ் நடத்திய ஜெ.இ.இ., மெயின் மாதிரி நுழைவுத் தேர்வை எழுதியது, பொது நுழைவு தேர்வுக்கு வழிகாட்டியது என, தேர்வு எழுதிய மாணவர்கள் உற்சாகம் தெரிவித்தனர்.
மத்திய அரசின் என்.ஐ.டி., மற்றும் நிகர்நிலை பல்கலைகள் உள்பட கல்வி நிறுவனங்களில் 40 ஆயிரம் சீட் உள்ளது. இவற்றில் சேர்ந்து படிக்க ஜெ.இ.இ., மெயின் நுழைவுத் தேர்வு 2015 ஏப்.,4ல் நடக்கிறது.
இதுகுறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி நுழைவு தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்திட, தினமலர் சார்பில் மாதிரி நுழைவு தேர்வு, மதுரை செயின்ட் மேரீஸ் பள்ளியில் நேற்று நடந்தது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
அவர்கள் கூறியதாவது:
பவித்ரா(கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி, மதுரை): தேர்வு பயனுள்ளதாக இருந்தது. இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களின் கேள்விகள் எப்படி இடம்பெறும் என தெரிந்துகொள்ள உதவியாக இருந்தது. சிந்தித்து விடையளிக்கும் விதமாக கேள்விகள் இடம் பெற்றிருந்தன. மனப்பாடம் செய்து தேர்வை எழுதினால் தோல்விதான் கிடைக்கும். பாட புத்தகங்களை மிகவும் ஆழ்ந்து படிக்க வேண்டும் என புரிந்தது.
பூவிழி(மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, காரைக்குடி): இந்த தேர்வு மூலம், எனக்கு ஒரு மோட்டிவேஷன் கிடைத்தது. கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் இருந்து முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டன. சில கேள்விகள் கடினமாக இருந்தன. பொது நுழைவு தேர்வு முறை குறித்து ஒரு தெளிவான ஐடியா கிடைத்தது. கடினமாக உழைக்க வேண்டும் என உணர்ந்தேன். தேர்வுக்கு ஏற்பாடு செய்த தினமலர் நாளிதழுக்கு நன்றி.
சிவராஜா(சிசம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, போடி): எந்த முறையில் பாடங்களை படித்து தயாராக வேண்டும் என்பதை இந்த மாதிரி தேர்வு எழுதியதன் மூலம் தெரிந்து கொண்டேன். எந்த பாடங்களில் எந்த வகை கேள்விகள் இடம்பெறும் என தெளிவு கிடைத்தது.
சந்தியா(கம்மவார் மகாஜன டிரஸ்ட் பெண்கள் மேல் நிலைப் பள்ளி, சாத்துார்): மனப்பாடம் செய்து இந்த தேர்வை எழுத முடியாது என புரிந்தது. ஒவ்வொரு கேள்வியையும் புரிந்து படித்தால்தான் இந்த தேர்வை சந்திக்க முடியும். பொது நுழைவு தேர்வு எப்படி இருக்கும் என்று இந்த நுழைவு தேர்வு மூலம் முன்கூட்டியே அறிந்தது சரியான முறையில் பாடங்களை படிக்க உதவும்.
பிரகாஷ்ராஜ்(எஸ்.எம்.பி., மெட்ரிக் பள்ளி, திண்டுக்கல்): மெயின் தேர்வு குறித்த ஒரு தெளிவு கிடைத்தது. நுழைவு தேர்வில் கேள்விகள் எப்படி கேட்கப்படும், பாடங்கள் வாரியாக அதற்காக நாம் எவ்வாறு தயாராக வேண்டும் என அறிந்து கொண்டேன்.
கார்த்திகா(செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம்): யோசித்து மற்றும் கணக்கிட்டு பார்த்து எழுதும் கேள்விகள் மாதிரி தேர்வில் அதிகம் இடம் பெற்றன. கடினமாக இருந்தாலும் மெயின் தேர்வுக்கு இன்னும் அதிகம் முயற்சித்து தயாராக வேண்டும் என்பதை தினமலர் நடத்திய இத்தேர்வு மூலம் தெரிந்தேன். பங்கேற்ற மாணவர்களுக்கு டைம் மேலாண்மை கல்வி நிறுவனம் சார்பில் பிளஸ் 2 ஒரு மதிப்பெண் வினா வங்கி இலவசமாக வழங்கப்பட்டது.
தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்கள் விபரம் தினமலர் நாளிதழில் விரைவில் வெளியாகும்.
