சிட்கோ சிற்ப பூங்கா அமைப்பதில் சிக்கல்; அரசின் அலட்சியத்தால் சிற்ப கூடத்தினர் அதிருப்தி
சிட்கோ சிற்ப பூங்கா அமைப்பதில் சிக்கல்; அரசின் அலட்சியத்தால் சிற்ப கூடத்தினர் அதிருப்தி
UPDATED : ஏப் 15, 2024 12:00 AM
ADDED : ஏப் 15, 2024 10:16 AM

மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அருகில், சிட்கோ சிற்ப பூங்கா அமைக்க இடம் ஒதுக்கியும், நிர்வாக குளறுபடிகளால், சிற்பக் கூடத்தினர் அதிருப்தியில் உள்ளனர்.
மாமல்லபுரத்தில் உள்ள பாறை குன்றுகளில், பல்லவர் காலத்தில் கலையம்ச சிற்பங்கள் செதுக்கப்பட்டன. தற்கால தலைமுறையினர் கண்டு வியந்து வருகின்றனர். பல்லவர் உருவாக்கிய கற்சிற்பக்கலை, தற்காலத்திலும் சிறந்து விளங்குகிறது.
சிற்பக் கலைஞர்கள்
மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற இடங்களில், ஏராளமான சிற்பக்கூடங்கள் இயங்குகின்றன. இத்தொழிலில், 2,500க்கும் மேற்பட்ட சிற்பக் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தொழில் மேம்பாட்டால், சிற்ப கூடங்கள் அதிகரித்து வருகின்றன. இச்சூழலில், பாரம்பரிய கலை தொழிலுக்கு முறையான வரைமுறைகள், வழிகாட்டுதல் திட்டங்களை அரசு வரையறை செய்யவில்லை.
அதனால், பல்வேறு சிற்ப கூடங்கள் சாலையோரங்களில் இயங்கி வருகின்றன. சிற்ப கூடங்களை குறிப்பிட்ட ஓரிடத்தில் ஒருங்கிணைத்து முறைப்படுத்தவும், வருங்கால மேம்பாட்டிற்காகவும், தற்போது தமிழக அரசு முடிவெடுத்தது.
இப்பகுதியில், சிட்கோ நிறுவனம் சார்பில், சிற்ப பூங்கா அமைப்பதாக, கடந்த 2021ல் சட்டசபையில் தமிழக அரசு அறிவித்தது. மாமல்லபுரம் அருகில் உள்ள கடம்பாடி பகுதியில், புதுச்சேரி சாலையை ஒட்டி, 21 ஏக்கர் பரப்பில், 23 கோடி ரூபாய் மதிப்பில் அமைப்பதாக சட்டசபையில் அறிவித்தது.
இதையடுத்து, நிர்வாக குளறுபடிகள் காரணமாக, தற்போது வரை சிற்ப பூங்கா பணிகள் துவக்கப்படாமல், பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இதனால், சிற்பக் கூடத்தினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அரசின் வாடகை இடம்
சிற்பக் கூடத்தினர் கூறியதாவது:
கைவினை தொழில் முக்கியத்துவத்திற்காக, அரசு இலவச இடம் அளிக்கும் என்றே எதிர்பார்த்தோம். ஆனால், 'சிட்கோ' நிறுவனம் தான், சிற்ப பூங்கா அமைக்கும் பணியை மேற்கொள்கிறது.
ஆனால், நிறுவன அதிகாரிகள், யாருக்கு எவ்வளவு இடம் தேவை என, முதலில் கேட்டனர். அதற்கான தொகையை செலுத்தினால், இடத்தை பதிவு செய்து தருவதாகவும் தெரிவித்தனர். இதற்கு நாங்களும் ஒப்புக்கொண்டோம்.
பின், இடத்தை விலைக்கு அளிக்க முடியாது. வாடகைக்கு மட்டும் தான் இடத்தை அளிக்க முடியும் என்றனர். இப்போதே சொந்த இடத்தில் தொழில் செய்யும் எங்களுக்கு, அரசின் வாடகை இடம் எதற்கு?
இதனால், தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் முடிவெடுக்காமல், திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எங்களை வஞ்சிப்பதே தமிழக அரசின் செயல்பாடாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.