தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு தகுதி இல்லாதவை மறு ஆய்வுக்கு உத்தரவு
தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு தகுதி இல்லாதவை மறு ஆய்வுக்கு உத்தரவு
UPDATED : ஏப் 30, 2025 12:00 AM
ADDED : ஏப் 30, 2025 10:16 AM

கூடலுார்:
கூடலுாரில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், 10 தனியார் பள்ளி வாகனங்களை மறு ஆய்வுக்கு உத்தரவிட்டனர்.
மாநிலத்தில் இயங்கி வரும் பள்ளிகள், கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் திறக்கப்பட்டன. இந்நிலையில், கூடலுார் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி, புனித தாமஸ் பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது.
மோட்டார் வாகன ஆய்வாளர் அருண் சிவக்குமார் தலைமை வகித்தார். டி.எஸ்.பி., வசந்தகுமார், தாசில்தார் முத்துமாரி மற்றும் அதிகாரிகள், பள்ளி வாகனங்கள் பாதுகாப்பாக இயக்குவது குறித்து ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
பள்ளி வாகனங்களில் தீ ஏற்பட்டால், கருவியை பயன்படுத்தி தீயை அணைக்கும் முறைகள் குறித்து, கூடலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்க பயிற்சி அளித்தனர்.
தொடர்ந்து, ஆய்வுக்கு வந்திருந்த, 86 பள்ளி வாகனங்களின் உறுதி தன்மை, இருக்கைகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள், அவசரகால கதவு, ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்தனர்.
அதிகாரிகள் கூறுகையில், கூடலுாரில் இயக்கப்படும், 86 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், 76 வாகனங்கள் தேர்வாகின. குறைகள் கண்டறியப்பட்ட, 10 வாகனங்களில், உள்ள குறைகளை சரி செய்து, மறு ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டது, என்றனர்.

