எம்.ஜி.ஆர்., ஜானகி கல்லுாரிக்குள் இணைப்பு சாலை நெடுஞ்சாலை துறை பரிசீலிக்க தீர்ப்பாயம் உத்தரவு
எம்.ஜி.ஆர்., ஜானகி கல்லுாரிக்குள் இணைப்பு சாலை நெடுஞ்சாலை துறை பரிசீலிக்க தீர்ப்பாயம் உத்தரவு
UPDATED : ஜூலை 15, 2025 12:00 AM
ADDED : ஜூலை 15, 2025 08:25 AM
சென்னை:
கிரீன்வேஸ் சாலை, துர்காபாய் தேஷ்முக் சாலைகளை இணைக்கும் வகையிலான சாலையை, டாக்டர் எம்.ஜி.ஆர்., ஜானகி கல்லுாரிக்குள் அமைக்க முடியுமா என்பதை பரிசீலிக்குமாறு, மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கிரீன்வேஸ் சாலை, துர்காபாய் தேஷ்முக் சாலையை இணைக்க, 630 மீட்டர் இணைப்பு சாலை அமைக்கும் பணியை, தமிழக நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டுள்ளது.
இதற்காக, திரு.வி.க., பாலத்தின் கிழக்குப் பகுதியில், கரையில் மணல் மற்றும் பிற பொருட்கள் கொட்டப்படுகின்றன. சி.ஆர்.இசட்., என்ற கடலோர ஒழுங்குமுறை மண்டல பகுதியில் சாலை பணிகள் நடக்கின்றன. மரங்கள் வெட்டப்படுகின்றன.
எனவே, எந்த பாதிப்பும் இல்லாமல், இணைப்புச் சாலை அமைக்க உத்தரவிட வேண்டும் என, 'ரமணீயம் டவர்ஸ்' குடியிருப்போர் நலச்சங்கம், தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.
மனுவை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
தமிழ்நாடு இசைக்கல்லுாரி வழியாக திரு.வி.க., பாலத்தை அடைய சாலை அமைப்பது தொடர்பான வழக்கில், பொதுமக்களுக்கும் பயன்தரும் என்பதால், இத்திட்டத்தை தொடரலாம் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி இணைப்புச் சாலை பணிகளை, மாநில நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டுள்ளது. இணைப்புச் சாலை அமைக்கவே, அடையாற்றின் கரையில் மணல் கொட்டப்படுவதாக விண்ணப்பதாரர் கூறுகிறார்.
எனவே, இந்த கரைப்பகுதியை தவிர்த்து, இணைப்புச் சாலைக்கான மீதமுள்ள அனைத்து வேலைகளையும் மேற்கொள்ளலாம்.
அடையாற்றின் வடக்கு பகுதியிலும், திரு.வி.க., பாலத்தின் கிழக்கு பகுதியிலும் மணல் கொட்டப்படுவது கரையை வலுப்படுத்தவா அல்லது வேறு நோக்கம் உள்ளதா என்பது குறித்து, நீர்வளத்துறையும், மாநில நெடுஞ்சாலைத்துறையும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இணைப்புச் சாலை, அடையாற்றின் கரையில் வருமா அல்லது டாக்டர் எம்.ஜி.ஆர்., ஜானகி கலை, அறிவியல் கல்லுாரிக்குள் வருமா என்பதையும் மாநில நெடுஞ்சாலைத்துறை ஆராய வேண்டும்.
சி.ஆர்.இசட்., பகுதி தவிர, மற்ற பகுதிகளில் இணைப்புச் சாலை பணிகளை தொடரலாம். சி.ஆர்.இசட்., பகுதியில், எந்தவொரு பணியையும் துவங்கும் முன், கல்லுாரி வளாகம் வழியாக அதை செயல்படுத்த முடியுமா என்பதை, நெடுஞ்சாலைத்துறை பரிசீலிக்க வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 30ல் நடக்கும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.