ரெகுலர் மாணவர் சேர்க்கை ஆர்.டி.இ.,க்கு மாற்றமா பெற்றோர் ஏமாற்றம்; தனியார் பள்ளிகள் எதிர்ப்பு
ரெகுலர் மாணவர் சேர்க்கை ஆர்.டி.இ.,க்கு மாற்றமா பெற்றோர் ஏமாற்றம்; தனியார் பள்ளிகள் எதிர்ப்பு
UPDATED : அக் 04, 2025 10:37 AM
ADDED : அக் 04, 2025 10:38 AM

மதுரை:
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் வழக்கமாக சேர்க்கையான மாணவர்களை, ஆர்.டி.இ., பிரிவுக்கு மாற்றி அவர்கள் செலுத்திய கட்டணத்தை பெற்றோருக்கு திரும்ப வழங்க வேண்டும் என்ற கல்வித்துறை உத்தரவால் தனியார் பள்ளிகள் அதிருப்தி யடைந்துள்ளன. இந்த ஆண்டு ஆர்.டி.இ., சேர்க்கையை எதிர்நோக்கியிருந்த பெற்றோரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தேசிய கல்விக் கொள்கை, பி.எம்.ஸ்ரீ பள்ளிக் கொள்கையை தமிழக அரசு ஏற்காததால் தமிழகத்திற்கான மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டம் (ஆர்.டி.இ.,) நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இதனால் இக்கல்வியாண்டிற்கான ஆர்.டி.இ., சேர்க்கை தமிழகத்தில் நடக்கவில்லை. இதையடுத்து தமிழக அரசு நீதிமன்றத்தில் முறையிட்டதன் எதிரொலியாக மத்திய அரசு அதற்கான நிதியை விடுவித்தது.
இதையடுத்து தமிழக அரசு ஆர்.டி.இ., மாணவர் சேர்க்கையை துவக்க உத்தர விடப்பட்டுள்ளது. இந் நிலையில், அந்தந்த பள்ளிகளில் ரெகுலராக பணம் செலுத்தி படித்து வரும் மாணவர்களில் 25 சத வீதம் மாணவர்களை அதில் இருந்து வெளியேற்றி, ஆர்.டி.இ., மாணவர் சேர்க்கையாக காண்பித்து, அந்த மாணவர்களுக்கு செலுத்திய பணத்தை திரும்ப தரக் கோரியும், அத்தொகையை பள்ளிகளுக்கு அரசு வழங்கும் என தனியார் பள்ளிகளை கல்வித்துறை கட் டாயப்படுத்துகிறது.
மத்திய அரசை காரணம் காட்டி ஆர்.டி.இ., சேர்க்கையை மேற்கொள்ளாமல்,தனியார் பள்ளிகள் சேர்க்கையை குறுக்கு வழியில் சென்று ஆர்.டி.இ., சேர்க்கையாக காண்பிப்பது ஏமாற்று வேலை. இச்சேர்க்கைக்காக காத்திருக்கும் மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா என சர்ச்சை எழுந்துள்ளது.
இதுகுறித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு (பெப்சா) மாநில தலைவர் ஆறுமுகம் கூறியதாவது:
2025 - 2026 கல்வியாண்டிற்கான ஆர்.டி.இ., சேர்க்கை அறிவிப்பு ஏப்ரலில் வெளியிட்டு இ சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்க வெப்சைட் வசதி செய்யப்படும். மத்திய அரசின் நிதி வராததால் தமிழகத்தில் மட்டும் சேர்க்கை நடக்கவில்லை. வழக்கு முடிந்து எப்படியும் சேர்க்கை நடக்கும் என 75 ஆயிரம் குழந்தைகள் ஆர்.டி.இ., சேர்க்கையில் விண்ணப்பிக்க காத்திருக்கின்றனர். இவர்களில் சிலர் அரசு அங்கன்வாடிகள், பிளே ஸ்கூல்களிலும், சிலர் எங்கும் சேராமல் வீடுகளிலும் உள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசின் முடிவு பேரிடியாக உள்ளது. அதேநேரம் தனியார் பள்ளிகளும் நுழைவு வகுப்புகளில் 25 சதவீதம் மாணவர் சேர்க்கை கிடைக்கும் என காத்திருந்தன.
ஆனால் தனியார் பள்ளிகளை தண்டிக்கும் வகையில், ஏற்கனவே ரெகுலரில் கட்டணம் செலுத்தி சேர்க்கையான மாணவர்களை அதில் இருந்து வெளியேற்றி, அவர்களை ஆர்.டி.இ., சேர்க்கை போல் காண்பிக்கவும், அவர்கள் செலுத்திய கட்டணத்தை பள்ளிகள் திரும்ப வழங்க வேண்டும் எனவும் ஒரு குழப்பமான உத்தரவை வெளியிட்டுள்ளது.
ஆர்.டி.இ., திட்டத்தை தமிழக அரசு செயல் படுத்தியே ஆகவேண்டும் என உயர், உச்ச நீதி மன்றங்கள் உத்தரவிட்டதால் எங்கள் பள்ளிகளில் நாங்களே சேர்த்த மாணவர்களை ஆர்.டி.இ., திட்டத்தில் மாற்றி எமிஸில் பதவிட வேண்டும் என கல்வித்துறை கட்டாயப்படுத்துகிறது. இதனால் தனியார் பள்ளிகளுக்கு நிதியிழப்பு ஏற்படும். அரசின் இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும். கடந்தாண்டு போல் பொது அறிவிப்பு வெளியிட்டு ஆர்.டி.இ., சேர்க்கையை வழக்கம் போல் மேற்கொள்ள நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.