விடுப்பு பதிவேடு! பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு கடிவாளம்: பெற்றோரிடம் விபரம் கேட்கும் ஆசிரியர்கள்
விடுப்பு பதிவேடு! பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு கடிவாளம்: பெற்றோரிடம் விபரம் கேட்கும் ஆசிரியர்கள்
UPDATED : நவ 25, 2025 10:51 AM
ADDED : நவ 25, 2025 10:53 AM

பொள்ளாச்சி:
அரசு பள்ளிகளில், மாணவர் வருகை மட்டுமின்றி, அவர்களின் விடுப்பு விபரமும் உறுதி செய்யப்படும் வகையில், விடுப்பு பதிவேடு பராமரிக்கப்படுகிறது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் வருகைப் பதிவேடு விபரம், 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. மாணவர் எண்ணிக்கை, 100 சதவீதம் சரியாக இருப்பதை, அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உறுதிப்படுத்தும்போதே கண்காணிக்கின்றனர்.
அதன்படி, வருகை பதிவேட்டுடன், 'எமிஸ்' தளத்தில் உள்ள பதிவுடன் வித்தியாசம் கண்டறியப்பட்டால், உடனே அதனை சரி செய்ய அறிவுறுத்துகின்றனர்.
இருப்பினும், பல பள்ளிகளில், மழை, விழாக்காலம், உடல் சுகவீனம் உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக் காட்டி, மாணவர்கள் அடிக்கடி விடுப்பு எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இதற்கு கடிவாளம் போடும் வகையில், பள்ளிகள்தோறும் விடுப்பு பதிவேடு ஒன்றும் பராமரிக்கப்படுகிறது. ஒவ்வொரு வகுப்பு ஆசிரியரும், அன்றைய தினம் மாணவர்களின் வருகையை அறிந்து கொள்வது போல, விடுப்பு எடுத்துள்ள மாணவர்களின் பெயரை பதிவேட்டில் எழுதப்படுகிறது.
அதன்பின், அந்தந்த மாணவர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டு, விடுப்புக்கான காரணம் கேட்டறியப்படுகிறது. அந்த விபரம், பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. மொபைல்போன் கிடைக்கவில்லை என்றால், 'பெற்றோரை தொடர்பு கொள்ள இயலவில்லை' என குறிப்பிடப்படுகிறது.
இதன் வாயிலாக, நீண்ட காலமாக விடுப்பில் இருக்கும் மாணவர்களை எளிதில் கண்டறிவதுடன், அவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க ஆசிரியர்கள் முனைப்பும் காட்டுகின்றனர். ஒவ்வொரு நாளும் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதால், பெற்றோர்களும், தங்கள் குழந்தைகள் பள்ளி செல்கின்றனரா, இல்லையா என்பதை அறிய முடிகிறது.
பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
பெற்றோருக்கு போதிய விழிப்புணர்வு இன்மை மற்றும் ஆசிரியர்களின் மீது பயமின்மை போன்ற காரணங்களால், அரசு பள்ளிகளில் மாணவர்கள் விடுப்பு எடுப்பது வாடிக்கையாகி வருகிறது.
சில மாணவர்கள் மாதத்துக்கு குறிப்பிட்ட தினங்கள் பள்ளிக்கு வருவதும், மீதமுள்ள நாட்கள் விடுப்பு எடுப்பதால், பள்ளியில் இருந்து நீக்கவும் முடியாமலும், தேர்வுக்கு அவர்களை தயார்படுத்த முடியாமலும் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர். இத்தகைய மாணவர்களால் பள்ளியின் தேர்ச்சி விகிதம் சரியும்.
ஒவ்வொரு ஆண்டும், பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கும் நோக்கில், பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளும் போது, மாணவர்களின் வருகை பதிவும் ஆய்வு செய்யப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக, விடுப்பு பதிவேடு பராமரிக்கப்படுகிறது. அதன்படி, எந்தவொரு மாணவர் விடுப்பு எடுத்தாலும், பெற்றோரை தொடர்பு கொண்டு அதற்கான காரணங்கள் கேட்டறியப்படுகிறது.
மாணவர்கள் யாரேனும் நீண்ட கால விடுப்பில் இருப்பது கண்டறியப்பட்டால், வகுப்பு ஆசிரியர் வாயிலாக அந்த மாணவரை மீண்டும் பள்ளிக்கு வர வைக்க நடவடிக்கை எடுக்கின்றனர். அதன்படி, தற்போது, விடுப்பு பதிவேடும் தனியாக பராமரிக்கப்படுகிறது.
இவ்வாறு, கூறினர்.
விடுப்பு பதிவேடு நடைமுறையால், நீண்ட காலமாக விடுப்பில் இருக்கும் மாணவர்களை எளிதில் கண்டறிவதுடன், அவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க ஆசிரியர்கள் முனைப்பும் காட்டுகின்றனர். ஒவ்வொரு நாளும் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதால், பெற்றோர்களும், தங்கள் குழந்தைகள் பள்ளி செல்கின்றனரா, இல்லையா என்பதை அறிய முடிகிறது.

