அரசு பள்ளி வளாகத்தில் காய்ந்த செடிகளில் பற்றிய தீயால் மாணவ, மாணவியர் அவதி
அரசு பள்ளி வளாகத்தில் காய்ந்த செடிகளில் பற்றிய தீயால் மாணவ, மாணவியர் அவதி
UPDATED : பிப் 24, 2026 11:12 AM
ADDED : பிப் 24, 2026 11:14 AM
ஸ்ரீபெரும்புதுார்:
நாவலுார் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் காய்ந்த செடிகள் திடீரென தீப்பற்றி எரிந்ததால், அதிலிருந்து வெளியேறிய புகை மூட்டத்தால் மாணவ, மாணவியர் அவதிப்பட்டனர்.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், கொளத்துார் ஊராட்சிக்குட்பட்ட நாவலுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.
பள்ளி வளாகம் மற்றும் விளையாட்டு மைதானம் பராமரிப்பின்றி படு மோசமாக உள்ளது.
இதனால், வளாகம் முழுதும் செடிகள் வளர்ந்திருந்தன. இதனால், மாணவ, மாணவியர் மைதானத்தை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.
இந்த நிலையில், வளாகம் மற்றும் விளையாட்டு மைதானத்தில் வளர்ந்து காய்ந்த செடிகளில், நேற்று மதியம் திடீரென தீப்பற்றியது.
இதையடுத்து, வளாகம் முழுதும் உள்ள செடிகளில் தீப்பரவி கொழுந்துவிட்டு எரிய துவங்கியது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீப்பற்றி எரிந்ததால், அதிலிருந்து வெளியேறிய புகையினால் மாணவ, மாணவியர் புகை மூட்டத்தில் அவதி அடைந்தனர்.

