குடும்ப கஷ்டத்தால் வேலைக்கு சென்ற மாணவி அதிகாரி முயற்சியால் அறிவியல் தேர்வு எழுதினார்
குடும்ப கஷ்டத்தால் வேலைக்கு சென்ற மாணவி அதிகாரி முயற்சியால் அறிவியல் தேர்வு எழுதினார்
UPDATED : மார் 24, 2026 11:09 AM
ADDED : மார் 24, 2026 11:11 AM
கதக்:
குடும்ப கஷ்டத்தால், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாமல் வேலைக்கு சென்ற மாணவியை கண்டறிந்து, அவரை மீண்டும் தேர்வு எழுத வைத்த அதிகாரியை பலரும் பாராட்டினர்.
கதக் மாவட்டம் முண்டர்கி தாலுகாவில் உள்ள பெத்தலுார் கிராமத்தை சேர்ந்த மாணவி பல்லவி ஹல்லிகேரி, 16. இவர், பக்கத்து கிராமமான பரதுார் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார்.
இவருக்கு அதே பகுதியில் உள்ள பள்ளியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது.
ஆனால், பல்லவியின் தந்தைக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. அதனால், கூலி வேலை செய்யும் அவரது தாயின் வருமானத்தில் குடும்பத்தை நடத்த முடியாமல் போனது; குடும்பத்தின் நிலைமை மோசம் அடைந்தது.
அதனால், திராட்சை தோட்டத்தில் வேலைக்கு சென்றார் பல்லவி. எனவே, 18ம் தேதி நடந்த கன்னடம் மொழித்தேர்வை, அவர் எழுத முடியாமல் போனது.
இது குறித்து, அவரது தோழியர், ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பள்ளி ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடன், கதக் மாவட்ட கல்வி அதிகாரி கங்காதர், பல்லவியை கடந்த 21ம் தேதி நேரில் சென்று சந்தித்தார். பல்லவி மற்றும் அவரது குடும்பத்திடம் கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
பின், அவர் தேர்வு எழுத சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, நேற்று நடந்த அறிவியல் தேர்வை பல்லவி வெற்றிகரமாக எழுதி முடித்தார்.
இதையறிந்த ஊர் மக்கள், கல்வி அதிகாரியை பாராட்டினர்.

