நிலக்கரி சுரங்க பகுதிகளில் யானைக்கால் நோய் அச்சுறுத்தல்: ஐ.ஐ.டி., பாலக்காடு ஆய்வில் தகவல்
நிலக்கரி சுரங்க பகுதிகளில் யானைக்கால் நோய் அச்சுறுத்தல்: ஐ.ஐ.டி., பாலக்காடு ஆய்வில் தகவல்
UPDATED : ஏப் 22, 2026 02:31 AM
ADDED : ஏப் 22, 2026 02:31 PM

பாலக்காடு:
மேற்கு வங்கத்தின் நிலக்கரி சுரங்க பகுதிகளில் யானைக்கால் நோய் பரவல் அதிகரித்து வருவது ஆய்வின் வாயிலாக தெரிய வந்துள்ளது.
ஐ.ஐ.டி., பாலக்காடு, மேற்கு வங்கத்தில் உள்ள அசன்சோல் காசி நஸ்ருல் பல்கலைக்கழகம், வித்யாசாகர் பல்கலைக்கழகம், சித்துகான்ஹோபிர்சா பல்கலைக்கழகம் மற்றும் அசன்சோல் இ.எஸ்.ஐ., மருத்துவமனை ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, இந்த ஆய்வை மேற்கொண்டனர். இதன் முடிவுகள் 'நேச்சர்' இதழின் அறிவியல் அறிக்கையில் வெளியாகியுள்ளன.
கடந்த, 2021 ஆக. முதல் 2024 மார்ச் வரை, மேற்கு வங்கத்தின் பச்சிம் பர்தமான், பாங்குரா, புருலியா, பிர்பூம் ஆகிய நான்கு மாவட்டங்களில், 3,705 நபர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வில் பங்கேற்றவர்களில், 16.65 சதவீதம் பேருக்கு யானைக்கால் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 10.63 சதவீதம் பேருக்கு நோய்க்கான அறிகுறிகள் ஏதுமில்லை. 6.02 சதவீதம் பேருக்கு யானைக்கால் நோயின் வெளிப்படையான அறிகுறிகள் தென்படுகின்றன. ஒட்டுமொத்தமாக, 14.52 சதவீதம் பேர் முழுமையான நோய் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
நிலக்கரி சுரங்க பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே இந்த பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. போதிய சுகாதார வசதிகள் இல்லாமை, அசுத்தமான சூழல் மற்றும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களுக்கு அருகில் வசிப்பது போன்றவை நோய் பரவலுக்கு முக்கிய காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றன.
மேலும், பாதிக்கப்பட்ட பலருக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 'கோவிட்-19' பெருந்தொற்று காலத்தில் நோய் தடுப்பு மருந்து வினியோகம் தடைபட்டதும் இந்த பாதிப்புக்கு ஒரு காரணியாக கூறப்படுகிறது.
இது குறித்து, ஐ.ஐ.டி., பாலக்காடு உயிரியல் அறிவியல் துறை தலைவர் பேராசிரியர் ஜெகதீஷ் பாய்ரி கூறுகையில், “இந்தியா யானைக்கால் நோய் ஒழிப்பில் முன்னேற்றம் கண்டுள்ள போதிலும், இது போன்ற தொலைதூரப் பகுதிகளில் கண்டறியப்படாமல் இருக்கும் நோய் பாதிப்புகளை கண்டறிவது மிக அவசியம்,” என்றார்.
முதன்மை புலனாய்வாளரும் மற்றும் அசன்சோல் காசி நஸ்ருல் பல்கலைக்கழக விலங்கியல் துறை உதவி பேராசிரியருமான டாக்டர் சுப்ரபாத் முகர்ஜி கூறுகையில், “அரசு சேவைகள் முறையாக சென்றடையாத பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் பலவீனமான சூழலில் உள்ளனர். அனைத்து மட்டங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி, 2027ம் ஆண்டிற்குள் இந்தியாவிலிருந்து யானைக்கால் நோயை முழுமையாக ஒழிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. சுரங்க பகுதிகள் மற்றும் விளிம்புநிலை சமூகங்கள் வாழும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முறையான சிகிச்சை அளிப்பதன் வாயிலாக இந்த இலக்கை எட்ட முடியும் என்பதை இந்த ஆய்வு எச்சரிக்கிறது,” என்றார்.

