கல்வித்தகுதி அடிப்படையில் கருணை பணி நியமனம் வழங்க வேண்டும்: என்.ஜி.ஓ., சங்கம் வலியுறுத்தல்
கல்வித்தகுதி அடிப்படையில் கருணை பணி நியமனம் வழங்க வேண்டும்: என்.ஜி.ஓ., சங்கம் வலியுறுத்தல்
UPDATED : ஜூன் 01, 2026 06:01 PM
ADDED : ஜூன் 01, 2026 06:03 PM
மதுரை:
“அங்கன்வாடி, சத்துணவு, கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நுாலகர்கள் போன்றோரின் வாரிசுகளுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் பணியிடம் வழங்க வேண்டும்” என, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் (என்.ஜி.ஓ., சங்கம்) வலியுறுத்தி உள்ளது.
இந்த அமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டம் செங்கல்பட்டியில் மாநில தலைவர் மகேந்திரகுமார் தலைமையில் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் திலகர், துணைத் தலைவர்கள் பகவதி அப்பன்ராஜா, பாலசுப்ரமணியன், தமிழ்மொழி பத்மனி, கவிதா, செலின்சோபியா பங்கேற்றனர்.
மகேந்திரகுமார் கூறியதாவது:
த.வெ.க., தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி பழைய ஓய்வூதிய திட்டம், தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்வது, அனைத்து நிலை ஊழியர்களுக்கும் பணியாளர் வாரியம் ஏற்படுத்துவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளோம்.
அனைத்து துறைகளிலும் குறைகளை களைவதற்காக, அமைச்சர்கள் துறையை புரிந்து கொள்ளும் வகையில் மூன்று மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும். அதன்பின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க இயக்க செயல்பாடுகளை தீவிரப்படுத்துவது என முடிவெடுத்துள்ளோம்.
கடந்த அரசில் விடுத்த அறிக்கைப்படி, அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை அழைத்துக் கூட்டுமன்ற கூட்டம் நடத்தி, மாவட்ட சங்கங்களை அந்தந்த கலெக்டர்களே அழைத்துப் பேசி குறைதீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தற்காலிக பணியாளர்கள் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் உள்ள சத்துணவு, அங்கன்வாடி, ஊர்ப்புற நுாலகர்கள், மோட்டார் பம்ப் ஆப்பரேட்டர், கிராம உதவியாளர்கள் போன்றோர் பணியின் போது இறந்தால், அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அதே துறையில் அதே பணியிடம் வழங்கினர். இது சமூகநீதியை காற்றில் பறக்க விடுவதாகும்.
புதிய அரசு இதை மாற்றி காலமுறை பணியாளர்களின் வாரிசுகளுக்கு வழங்குவது போல வாரிசுகளின் கல்வித்தகுதி அடிப்படையில் அதற்கேற்ற பணியிடங்களை வேறு துறைகளிலும் வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் என்றார்.
