கடல் தாமரை பூங்காவுக்கு புத்தகம் வழங்கும் ஆசை நிறைவேறியதாக தினமலர் வாசகி நெகிழ்ச்சி
கடல் தாமரை பூங்காவுக்கு புத்தகம் வழங்கும் ஆசை நிறைவேறியதாக தினமலர் வாசகி நெகிழ்ச்சி
UPDATED : ஜூன் 11, 2026 01:33 PM
ADDED : ஜூன் 11, 2026 01:34 PM
பெங்களூரு:
கடல் தாமரை புத்தக பூங்காவுக்கு புத்தகம் வழங்கும் ஆசை நிறைவேறியதாக, 'தினமலர்' நாளிதழ் வாசகி மங்களா மகாதேவன் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
பெங்களூரு யஷ்வந்த்பூரில் வசிப்பவர் மங்களா மகாதேவன், 83; 'தினமலர்' நாளிதழ் வாசகி. இவர், தனக்கு தெரிந்த செல்வி என்பவர் மூலம், 'தினமலர்' அலுவலகத்தின் கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகத்திற்கு, புத்தகங்களை நேற்று அன்பளிப்பாக கொடுத்து அனுப்பினார்.
நிருபருடன், மொபைல் போனில் பேசும் போது கூறியதாவது:
கடல் தாமரை புத்தக பூங்காவுக்கு நான் நேரில் வந்து, உங்களிடம் புத்தகங்களை கொடுத்திருக்க வேண்டும். வயதாகிவிட்டதால் என்னால் வர முடியாத சூழ்நிலை. புத்தகங்களை நுாலகத்திற்கு அன்பளிப்பாக வழங்குவதற்கு அனுப்பி வைக்க, ஒரு மாதமாக முயற்சி செய்கிறேன்.
ஒரு வழியாக எனக்கு தெரிந்தவரிடம் கொடுத்து அனுப்பிவிட்டேன். எனது ஆசை நிறைவேறிவிட்டது. மனதிற்கு முழு திருப்தியாக உள்ளது, நான் கொடுத்து அனுப்பிய அமுதசுரபி புத்தகங்களில் நிறைய தகவல் உள்ளது. மங்கையர் மலருக்கு நான் நிறைய கட்டுரைகளை எழுதி அனுப்பி உள்ளேன். தமிழர்களுக்காக ஆரம்பித்துள்ள, கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகம் மேன்மேலும் வளர்ச்சி அடைய என் வாழ்த்துகள்.
நுாலகத்திற்கு தினமும் வருவோர் கூறும் கருத்துகளை, புகைப்படத்துடன் நீங்கள் வெளியிடுவது நல்ல முயற்சி. இதை பார்த்து நிறைய பேர் உற்சாகம் அடைகின்றனர். எல்லாரும் கேட்பது போல புத்தகங்களை வீட்டிற்கு படிக்க கொடுத்தால், நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏழு நாட்களும் பூத்து குலுங்கும்
வாரத்தின் ஏழு நாட்களும் காலை 09:30 மணி முதல் இரவு 09:30 மணி வரை, கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகம் இயங்கும். விடுமுறை கிடையாது. நுாலகம் தொடர்பாக 83108 60601; 89715 09091 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
