மறுதேர்வின்றி மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் வலியுறுத்தல்
மறுதேர்வின்றி மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் வலியுறுத்தல்
UPDATED : ஜூன் 23, 2026 10:42 AM
ADDED : ஜூன் 23, 2026 10:45 AM
விருதுநகர்:
விருதுநகரில் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் பார்த்திபன் கூறியதாவது:
2013 - 2025 ஜூலை வரை துவக்கப்பள்ளிகளில் புதிய இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இருப்பினும் 2013, 2017, 2019, 2022 ல் நடந்த தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி அடைந்துள்ளோம்.
ஆனால் பணி நியமனம் வழங்கவில்லை. இதனால் 2021ல் 730, 2022ல் 3987, 2023ல் 6553 காலிப்பணியிடங்கள் உருவானது. 2024ல் சட்ட சபையில் 110 விதியின் கீழ் அறிவித்த 19,260 காலிப்பணியிடங்கள் தற்போது வரை முழுமையாக நிரப்பப்படவில்லை.
2024ல் நடத்தப்பட்ட நியமன தேர்வில் மிக சொற்பமாக 2768 காலிப்பணியிடங்கள் மட்டுமே 2025 ஜூலையில் நிரப்பப்பட்டது.
இத்தேர்வை எழுதியதில் 90 சதவீதம் பேரில் 40 வயது கடந்த பெண் ஆசிரியர்கள் மிக அதிகம். பல்வேறு துவக்கப் பள்ளிகளில் தற்போது வரை தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர். இது வரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணி யிடங்கள் உள்ளது. 2024ல் தேர்ச்சி பெற்று தகுதி உள்ளவர்களின் எண்ணிக்கை 21,515.
சென்னை உயர்நீதிமன்றம் துவக்கப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் இருக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இத்தனை தேர்வுகளால் எங்கள் வயது 40 முதல் 50 வயதை கடந்த நிலையில் எங்கள் எதிர்காலத்தை இத்துறையில் புதைத்துவிட்டோம். 2024ல் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மறு தேர்வு இன்றி மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் வேண்டும் என்றார்.
