தசரா மாலையை கழற்றுமாறு மாணவியை கட்டாயப்படுத்திய தலைமை ஆசிரியை: பள்ளியில் பெற்றோர் முற்றுகை
தசரா மாலையை கழற்றுமாறு மாணவியை கட்டாயப்படுத்திய தலைமை ஆசிரியை: பள்ளியில் பெற்றோர் முற்றுகை
UPDATED : அக் 18, 2026 06:33 PM
ADDED : அக் 18, 2026 06:35 PM
சென்னை:
தக்கலை அருகே, தசரா விழாவிற்காக மாலை அணிந்து பள்ளிக்கு சென்ற, 10ம் வகுப்பு மாணவியின் காப்பு கயிறை அறுத்து, மாலையை மறைத்து வைக்குமாறு கட்டாயப்படுத்தியதாக, பள்ளி தலைமை ஆசிரியையை கண்டித்து, உறவினர்கள், ஹிந்து அமைப்பினர் பள்ளியை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் உள்ள அமலா கான்வென்ட் தனியார் பெண்கள் பள்ளியில், மாணவி ஒருவர், 10-ம் வகுப்பு படித்து வருகிறார். குலசேகரன்பட்டினம் தசரா விழாவையொட்டி, அந்த மாணவி, விரதமிருந்து கழுத்தில் மாலை அணிந்துள்ளார்.
வழக்கம் போல் அவர் தசரா மாலையுடன் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது, பள்ளி தலைமை ஆசிரியை ஹெலன் கருணா, மாணவியை தன் அறைக்கு அழைத்து, காப்பு கயிறை அறுத்தும், கழுத்தில் அணிந்திருந்த தசரா மாலையை, மற்றவர்கள் பார்க்காதவாறு மறைத்து வைத்துக் கொள்ளுமாறும் கூறியுள்ளார். இல்லையெனில் கழற்றிவிட்டு வருமாறும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மாணவியின் குடும்பத்தினரும், ஹிந்து அமைப்பினரும், நேற்று முன்தினம் பள்ளியை முற்றுகையிட்டனர். தக்கலை போலீசார் பேச்சு நடத்தினர்.
இது தொடர்பாக, கன்னியாகுமரி மாவட்ட ஹிந்து முன்னணி தலைவர் ஆறுமுகம் கூறுகையில், “இந்த மாணவி, தாயை இழந்தவர். அவருக்கு ஒரு தங்கையும் இருக்கிறார். இதுபோன்ற மாணவியரை குறித்து வைத்துதான் மதமாற்றங்கள் நடக்கின்றன.
எனவே தான், தசரா மாலையை கழற்றி, மாணவியை துன்புறுத்திய தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தக்கலை காவல் நிலையம், கலெக்டர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆகியோரிடம் மனு அளித்துள்ளோம்,” என்றார்.
