தினமலர் - பட்டம் மெகா வினாடி - வினா: ரூ.5 லட்சம் மதிப்புள்ள பரிசுகளை வெல்லப்போவது யார்?
தினமலர் - பட்டம் மெகா வினாடி - வினா: ரூ.5 லட்சம் மதிப்புள்ள பரிசுகளை வெல்லப்போவது யார்?
UPDATED : ஜன 30, 2025 12:00 AM
ADDED : ஜன 30, 2025 08:12 AM

கோவை:
தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில், மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கான வினாடி-வினா இறுதிப்போட்டி, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் இன்று நடக்கிறது.
பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆய்வுத்திறன், கணிதம், மொழித்திறனை ஊக்குவிக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு பட்டம் இதழ் வெளியிடப்படுகிறது.
இதை வாசிக்கும் மாணவர்களிடம் கற்றல் சார்ந்த தேடலை விரிவுபடுத்தும் விதத்திலும், தேர்வுக்கு உற்சாகப்படுத்தவும் 'வினாடி-வினா' போட்டி நடத்தப்படுகிறது. தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பான பட்டம் இதழானது, கோவை மாநகராட்சி மற்றும் இந்துஸ்தான் கல்வி குழுமத்துடன் இணைந்து கடந்தாண்டு நவ., 19ம் தேதி முதல், மாநகராட்சி பள்ளிகளில் வினாடி-வினா காலிறுதி போட்டியை நடத்தி வந்தது.
பள்ளி அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு, இன்று அவிநாசி ரோடு, நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், காலை, 8:00 முதல் மதியம், 1:30 மணி வரை அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி நடக்கிறது.
காலை, 8:00 முதல் தலா இருவர் அடங்கிய, 64 பள்ளிகளின் மாணவர் அணிகளுக்கு, 20 கேள்விகளுக்கு, 20 நிமிடங்கள் என்ற அடிப்படையில், பொது அறிவு எழுத்துத்தேர்வு நடத்தப்படும். அதில் அதிக மதிப்பெண் பெறும் எட்டு அணிகள், இறுதிப்போட்டியில் இடம்பெறும்.
இறுதிச்சுற்றில் அதிக புள்ளிகளுடன் வெற்றி பெறும் அணிகளுக்கு, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், நிர்வாக செயலாளர் பிரியா ஆகியோர் பரிசுகள் வழங்குகின்றனர்.
பதிவு செய்த பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், வழங்கப்பட்டுள்ள 'கியூ.ஆர்., கோடு' ஸ்கேன் செய்தும், நிகழ்ச்சியை நேரலையில் காணலாம்.
ரூ.5 லட்சம் மதிப்புள்ள பரிசு!
இறுதிச்சுற்றில் முதலிடம் பிடிக்கும் குழுவினருக்கு லேப் டாப், இரண்டாம் பரிசாக ஸ்மார்ட் போன், மூன்றாம் பரிசாக ஸ்மார்ட் டேப் வழங்கப்படுகிறது. தவிர, நான்கு முதல் எட்டாம் இடம் வரை பிடிக்கும் அணிகளுக்கு ஸ்மார்ட் வாட்ச் மற்றும் சரியான பதில் அளிக்கும் பார்வையாளர்களுக்கும் பரிசுகள் என, ரூ.5 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் காத்திருக்கின்றன.