மெடிக்கல் சீட் வாங்கித் தருவதாக ஏமாற்றும் கும்பல்கள் குறித்து போலீசார் எச்சரிக்கை
மெடிக்கல் சீட் வாங்கித் தருவதாக ஏமாற்றும் கும்பல்கள் குறித்து போலீசார் எச்சரிக்கை
UPDATED : ஆக 12, 2011 12:00 AM
ADDED : ஆக 12, 2011 12:48 PM
அ நிறம் | அளவு
சென்னை: மருத்துவ கல்லூரிகளில் சீட் வாங்கித் தருவதாக கூறி, பல லட்சங்களை ஏப்பம் விடும் கும்பல் புறநகரில் உலா வருகிறது.
இந்த
மோசடி கும்பல் குறித்து பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று காவல் துறை எச்சரித்துள்ளது. நான்காம் ஆண்டு படிக்கும்போதே கல்லூரி வளாகத்தில், கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை, கை நிறைய சம்பளம் என்ற நிலை இருந்ததால், கடந்த சில ஆண்டுகளாக, பொறியியல் பட்டப் படிப்பிற்கு ஏகப்பட்ட கிராக்கி இருந்தது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக பொறியியல் கல்வி படிப்பதில் ஆர்வம் குறைந்து, மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்று பல மாணவர்கள் விரும்புகின்றனர்.இதனால்
, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதில் ஆர்வம் காட்டுவோர் எண்ணிக்கை, கணிசமாக அதிகரித்துள்ளது. கவுன்சலிங் மூலம் இடம் கிடைக்கிறது என்று அறியும் மாணவ, மாணவியர், தனியார் கல்லூரிகளில் எப்படியாவது இடம் பிடிக்க வேண்டும் என பெற்றோரை வற்புறுத்துகின்றனர். இதுபோன்ற அப்பாவி மாணவ, மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோர் ஆர்வத்தை பயன்படுத்தி, சென்னை புறநகர் பகுதிகளில், ஒரு கும்பல் மோசடி செயலில் இறங்கியுள்ளது. இதுகுறித்து தொடர்ந்து வரும் புகார்களின் அடிப்படையில், பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னையைச் சேர்ந்தவர் எபினேசர், 26. மருத்துவ கல்வி பெற வேண்டும் என்று ஆசைப்பட்ட இவரை, சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணன், நாகூர்ராஜா, முரளி, சிவசத்திய ராஜா, சுரேஷ், அஜித், சீனிவாசன் ஆகிய ஏழு பேர் கொண்ட கும்பல் அணுகியது. போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில், சீட் வாங்கித் தருவதாக பேரம் பேசியது. இவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி, எபினேசர் பணம் கொடுத்தார். ஆனால், மருத்துவ படிப்பிற்கான சீட் வாங்கித் தராமல், இந்த கும்பல் எபினேசரை ஏமாற்றியது. இதுகுறித்து சென்னை புறநகர் போலீசாரிடம், எபினேசர் கொடுத்த புகாரின் பேரில், கடந்த 27ம் தேதி, ஏழு பேரும் கைது செய்யப்பட்டு, தற்போது புழல் சிறையில் கம்பி எண்ணுகின்றனர்.
சென்னையைச்
சேர்ந்தவர் அனந்த பத்மநாபன். இவர், தனது உறவினருக்காக மருத்துவ கல்லூரியில் சீட் வாங்க முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது, சென்னையைச் சேர்ந்த சத்தியநாராயணன், அலங்காரமுத்து, ஞானவீர ராஜகுரு, வருண், சதீஷ்கண்ணா, கிருஷ்ணமுரளி, அசோக்குமார் அடங்கிய கும்பல், அனந்த பத்மனாபனை அணுகியது. பேரத்திற்கு பின், பணம் கைமாறியது. ஆனால், பல நாட்கள் ஆகியும், அந்த கும்பல் கூறியபடி, மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இதுகுறித்து அனந்த பத்மநாபன் கொடுத்த புகாரின் பேரில், மோசடி கும்பலை, கடந்த 1ம் தேதி, புறநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.மருத்துவ
கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக கூறி, பல லட்சம் ரூபாய்களை மோசடி செய்யும் கும்பல் குறித்து ஏராளமான புகார்கள் வருவதால், இதுபோன்ற கும்பல்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என, புறநகர் போலீஸ் கமிஷனரகம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.