இலவச பஸ் பாஸ் மாணவர்களை புறக்கணித்த டிரைவர், கண்டக்டர்கள் மீது நடவடிக்கை
இலவச பஸ் பாஸ் மாணவர்களை புறக்கணித்த டிரைவர், கண்டக்டர்கள் மீது நடவடிக்கை
UPDATED : ஆக 30, 2013 12:00 AM
ADDED : ஆக 30, 2013 07:45 AM
மதுரை: இலவச பஸ் பாஸ் வைத்திருந்த மாணவர்களை புறக்கணித்த டிரைவர், கண்டக்டர்கள், 161 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகத்தின் பதில் மனுவை ஏற்று, வழக்கை மதுரை ஐகோர்ட் கிளை பைசல் செய்தது.
வழக்கறிஞர், ஞானகுருநாதன் தாக்கல் செய்த பொது நல மனு: பஸ் பாஸ் மாணவர்களை புறக்கணிக்கும் நோக்கில், ஸ்டாப்புகளிலிருந்து தள்ளி பஸ்களை நிறுத்துகின்றனர். மாணவர்கள் புத்தகப் பைகளுடன் ஓடி, பஸ்களில் ஏறும்போது, விபத்து ஏற்படுகிறது.
கிராமங்கள், நகரங்களில் அனைத்து ஸ்டாப்களிலும் அரசு பஸ்களை நிறுத்தி, மாணவர்களை ஏற்றிச்செல்ல டிரைவர், கண்டக்டர்களுக்கு உத்தரவிட வேண்டும். மீறினால், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
ஏற்கனவே மனு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், "பாஸ் வைத்துள்ள மாணவர்கள், ஸ்டாப்களில் காத்திருக்கும்போது, நிற்காத அரசு பஸ் எண், வழித்தடம், நேரம் பற்றி பள்ளி தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பெற்றோர், போக்குவரத்துக் கழக நிர்வாகத்தில் புகார் செய்யலாம். புகார்களின் படி, டிரைவர், கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுத்த விவரத்தை தாக்கல் செய்ய வேண்டும்" என்றனர்.
தற்காலிக தலைமை நீதிபதி, ஆர்.கே.அகர்வால், நீதிபதி என்.பால் வசந்தகுமார் கொண்ட முதன்மை, பெஞ்ச் முன் விசாரணைக்கு மனு வந்தது. அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் சார்பில் தாக்கலான பதில் மனு:
மதுரை கோட்டத்தில் இலவச பஸ் பாஸ் மாணவர்களை புறக்கணிக்கக் கூடாது என, சுற்றறிக்கைகள் மூலம் டிரைவர், கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். 2010 ஏப்., 1 முதல், 2013 ஆக., 12 வரை, உத்தரவை மீறிய ஊழியர்கள், 151 பேருக்கு, அபராதம் விதித்துள்ளோம்; சம்பளக் குறைப்பு செய்துள்ளோம்.
கோவையில், 10 பேருக்கு சம்பளக் குறைப்பு செய்துள்ளோம். சிலருக்கு பணி வரன்முறை செய்வதை நிறுத்தியுள்ளோம். மீறும் ஊழியர்களை எச்சரிக்கை செய்கிறோம். பள்ளிகளில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தியுள்ளோம். சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரியில் பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பஸ்கள், பெண்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்குகிறோம். கண்காணிக்க ஊழியர்களை நியமித்துள்ளோம்.
கும்பகோணம், புதுக்கோட்டை, திருநெல்வேலியில் ஸ்டாப்களில் நிறுத்தி, மாணவர்களை அழைத்துச் செல்வதை கண்காணிக்க, ஊழியர்களை நியமித்துள்ளோம். எந்த புகாரும் வரவில்லை. இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை பைசல் செய்தனர்.
