நகர்ப்பகுதியில் போக்குவரத்தை சீரமைக்க புதிய படை: களமிறங்கினர் பள்ளி மாணவ மாணவியர்
நகர்ப்பகுதியில் போக்குவரத்தை சீரமைக்க புதிய படை: களமிறங்கினர் பள்ளி மாணவ மாணவியர்
UPDATED : ஜூலை 24, 2014 12:00 AM
ADDED : ஜூலை 24, 2014 01:54 PM
திருப்பூர்: திருப்பூர் நகர்ப்பகுதியில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தும் "சாலை பாதுகாப்பு படை" நேற்று உதயமானது. இதில் முதல் கட்டமாக 360 மாணவ மாணவியர் இணைத்துக் கொண்டுள்ளனர். மொத்தம் 108 பள்ளிகளில் இருந்து 2,000 மாணவ மாணவியர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
திருப்பூர் நகர்ப்பகுதியில் போக்குவரத்து காவல் பணியில் அரசு மற்றும் தனியார் பள்ளி களை சேர்ந்த 2,000 மாணவர்களை ஈடுபடுத்தும் "சாலை பாதுகாப்பு படை" (ஆர்.எஸ். பி.) துவக்க விழா நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது. துணை கமிஷனர் (சட்டம் - ஒழுங்கு) திருநாவுக்கரசு வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி முன்னிலை வகித்தார்.
தலைமை வகித்து மாநகர போலீஸ் கமிஷனர் சேஷசாய் பேசியதாவது: திருப்பூர் நகர மக்கள் தொகை 8.78 லட்சம். வாகனங்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை தாண்டியுள்ளது; ஒவ்வொரு வீட்டிலும் பல வாகனங்கள் என தேவைக்கு அதிகமாக உள்ளன. ரோடுகளில் அவ்வளவு வாகனங்களும் வரும்போது தாமதம் ஏற்படுகிறது. வேகமாக செல்ல நினைக்கின்றனர். வேகம் விவேகமானதல்ல என்பது யாருக்கும் புரிவதில்லை; அவ்வளவு அவசரம்.
திருப்பூரில் நடக்கும் விபத்துகள், உயிர் பலிகளில், பெரும்பாலானவை தேவையில்லாதவை; புத்திசாலித்தனமாக செயல்பட்டால் விபத்தை தவிர்க்கலாம். ஹெல் மெட் கட்டாயமாக்கப்படுவதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம்; நீங்கள் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஆர்.எஸ்.பி. மாணவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. முதலில் போலீசார், டிராபிக் வார்டன்கள் உங்களுக்கு பயிற்சி கொடுத்து உதவியாக இருப்பார்கள். பள்ளியை சுற்றிலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணி வழங்கப்படும். சேவை மனப்பான்மையுடனும், ஜாக்கிரதையாகவும் ஈடுபட வேண்டும்.
விசில், சீருடை, தொப்பி ஆகியவை வழங்கப்படும். நிச்சயம் உங்களால் விபத்துகள் குறையும்; போலீசார் நிம்மதியாக இருக்கலாம். ஒரே நாளில் 360 பேர் சேர்ந்துள்ளீர்கள். திருப்பூரில் உள்ள 108 பள்ளிகளில் இருந்து 2,000 மாணவர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவர். இவ்வாறு கமிஷனர் சேஷசாய் பேசினார்.
கலெக்டர் கோவிந்தராஜ் பேசுகையில், "மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். ரோடுகளில் எந்த நேரத்தில் எது நடக்கும் என்பதை சொல்ல முடியாத அளவுக்கு வாகன நெருக்கடி ஏற்படுகிறது. இப்படையில் சேரும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு, ஒழுக்கம், மனதை ஒருமுகப்படுத்தும் பாங்கு, சேவை மனப்பான்மை வளரும்.
உங்களுக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு. சிறிய தவறு கூட பெரியதாக மாறும். எனவே தவறு நேராதவாறு பணிபுரிய வேண்டும். மனித உயிர்களை காக்கும் பெரும் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சாலை விதிகளை மதிக்கவும், பாதுகாக்கவும் பணியாற்ற வேண்டும்" என்றார்.
முன்னதாக முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 12 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 360 மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் சிக்னல் கவாத்து பயிற்சி நடந்தது.
